கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவை அதன் தூதரக ஊழியர்களை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்கிவிடப் போவதாகவும் இந்தியா கூறியிருந்தது.
கனடா இதை “சர்வதேச சட்ட மீறல்” என்று கூறியது
ஜூன் 18 ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உறவுகளில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. அவை “அபத்தமானது” என்று கூறியது.
கனடாவுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்படுமா?
இதற்கிடையே கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்தியாவில் உள்ள பல கனடா தூதரக அதிகாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தினார்.
அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் “21 தூதரக அதிகாரிகளைத் தவிர மற்ற அனைவருக்கும்” ராஜாங்க சட்ட விலக்கு”தன்னிச்சையாக அகற்றப்படும்” என்று இந்தியா கூறியதாக அவர் தெரிவித்தார்.
கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பிபிசி கருத்து கேட்டிருக்கிறது.
மீதமுள்ள 21 தூதரக அதிகாரிகள் இன்னும் இந்தியாவில் இருப்பதாகவும், இருப்பினும் பணியாளர்கள் பற்றாக்குறையால் கனடா தனது சேவைகளை நாட்டில் குறைக்க வேண்டியிருக்கும் என்று ஜோலி கூறினார்.
பெங்களூர், மும்பை, சண்டிகரில் மக்கள் நேரில் வந்து பெறும் சேவைகளுக்கு தடையாக இருக்கும் என்று ஜோலி கூறினார். இந்தச் சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?
எனினும் உள்ள டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் எனவும், மூன்றாம் தரப்பு மூலம் மேற்கொள்ளப்படும் சேவைகளும் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பணியாளர்களின் குறைப்பால் குடியேற்ற விண்ணப்பங்களுக்கான செயலாக்கத்தில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறினார்.
முக்கியமாக கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2022 கணக்குப்படி கனடாவில் தற்காலிக, நிரந்தர குடியேற்றத்துக்கான விண்ணப்பதாரர்களில் இந்தியர்களே அதிகம்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ளதை விட டெல்லியில் அதிகமான தூதரக அதிகாரிகள் இருப்பதாக இந்தியா கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், இந்த எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியது.
ஆயினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைப் பட்டியலிட்டுள்ள உலகளாவிய விவகார இணையதளம், இந்த எண்ணிக்கை சம அளவிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கனடா தூதரக அதிகாரிகளுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்குவதாக இந்தியா கூறுவது “சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்” என்று ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பின் போது ஜோலி கூறினார்.
இருப்பினும் இதற்காக கனடா பதிலடி கொடுக்காது என்றும் அவர் கூறினார்.
“ராஜாங்க சட்ட விலக்கு விதிமுறைகளை மீற நாம் அனுமதித்தால், உலகத்தில் எங்கும் எந்தத் தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்” என்று ஜோலி கூறினார்.
கனடாவைச் சுற்றிப்பார்க்க அல்லது குடியேற விரும்பும் இந்தியர்களை கனடா இன்னும் வரவேற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பரில் கூறியதையடுத்து, கனடா-இந்தியா உறவுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளன.
இது கனடா உளவுத் தகவல்களின் அடிப்படையிலானது என்று ட்ரூடோ கூறினார்.
இப்படிப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய போதிலும், இந்தியாவுடனான பிளவை கனடா அதிகரிக்க விரும்பவில்லை என்று ட்ரூடோ மீண்டும் மீண்டும் கூறினார்.
நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்