கடந்த ஜூன் 18-ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, இந்தக் கொலையின் பின்னணியில் இந்தியாவின் ரகசிய அமைப்புகளின் ஈடுபாடு இருக்கலாம் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இந்தியா கூறியது. மேலும் இந்தக் கொலையில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறியிருக்கிறது.
பார்க்கப்போனால், ஒரு நாடு வேறொரு நாட்டில் உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல.
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் மீது இதற்கு முன் பலமுறை இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இந்திய, பாகிஸ்தான் உளவுத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருநாடுகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்திருக்கின்றன.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளைப் பற்றிப் பேசும்போது, இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைக் குறிப்பிடாமல், இருக்க முடியாது.
மொசாட் மேற்கொண்ட 5 முக்கியமான நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.
ஆபரேஷன் ஃபினாலே – 1960
1957-ஆம் ஆண்டு, மேற்கு ஜெர்மானிய மாநிலமான ‘ஹெஸ்ஸெ’யின் தலைமை வழக்கறிஞரும், யூத இனத்தவரும், ஜெர்மன் குடிமகனுமான ஃபிரிட்ஸ் பாயர், இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைத் தொடர்புகொண்டு, அடால்ஃப் ஐக்மன் (Adolf Eichmann) உயிருடன் இருப்பதாகவும், அர்ஜென்டினாவில் ஒரு ரகசிய தளத்தில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
லெப்டினன்ட் கர்னல் அடோல்ஃப் ஐக்மன், அடால்ஃப் ஹிட்லரின் இரகசியக் காவல் படையான ‘கெஸ்டாபோ’வில் (Gestapo) ‘யூதத் துறையின்’ தலைவராக நீண்ட காலம் இருந்தவர். அவரது ஆட்சிக் காலத்தில், ‘இறுதி தீர்வு’ என்ற மிகக் கொடூரமான திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஜெர்மனி மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான யூதக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
ஹோலோகாஸ்ட் (Holocaust) என்று அழைக்கப்படும் இப்படுகொலைகள், 1933 மற்றும் 1945-ஆம் ஆண்டுகளுக்கு ஐரோப்பா முழுவதும் நடந்தேறின. நாஜி ஜெர்மனியின் மற்றும் அதன் நட்பு நாடுகள் சுமார் 40 லட்சம் மில்லியன் ஐரோப்பிய யூதர்களை, திட்டமிட்டு, அரசு ஆதரவுடன் துன்புறுத்திக் கொலை செய்தனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப் பிறகு, அடால்ஃப் ஐக்மன் மூன்று முறை பிடிக்கப்பட்டார், ஆனால் கைது செய்யப்படவில்லை.
ஐக்மன் அர்ஜென்டினாவில் தங்கியிருக்கும் செய்தியை அங்கு வசிக்கும் ஒரு யூதரிடம் இருந்து ஃபிரிட்ஸ் பாயர் அறிந்துகொண்டார். அந்த யூதரின் மகளும், ஐக்மனின் மகனும் காதல் உறவில் இருந்தனர்.
இஸ்ரேலிய உளவுத்துறை இந்த தகவலை ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், பின்னர் அவர்களுக்கே உரிய முறையில் ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மை என கண்டறிந்துள்ளனர்.
‘தி கேப்ச்சர் அண்ட் ட்ரையல் ஆஃப் அடோல்ஃப் ஐக்மன்’ (The Capture and Trial of Adolf Eichmann) என்ற நூலில், ஐக்மன் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்த ஒரு அதிகாரியாக இருந்திருக்கலாம், ஆனால் ஒரு காலத்தில் நாஜி ஜெர்மனியில் அவரது அந்தஸ்து ஜெனரலுக்குக் குறைவாக இல்லை. அப்போது, அவர் ஹிட்லரின் முக்கிய குழுவிடம் நேரடித் தொடர்பில் இருந்தார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவில் ஐக்மன் பதுங்கியிருப்பது பற்றிய செய்தி உறுதிசெய்யப்பட்ட பிறகு, இஸ்ரேலின் மொசாட்டின் தலைவர், ரஃபி ஐடனை (Rafi Eitan) என்ற உள்வுத்துறை அதிகாரியை இந்தப் பணிக்குத் தளபதியாக நியமித்தார், ஐக்மனை முகவர்கள் மூலம் உயிருடன் பிடித்து இஸ்ரேலுக்கு கொண்டு வருவதே திட்டம்.
மொசாட் குழு அர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதற்கு ‘Castle – கோட்டை’ என்ற குறியீட்டு பெயரை வழங்கியது. இதற்கிடையில், 1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினா தனது சுதந்திரத்தின் 150 வது ஆண்டு விழாவை மே 20 அன்று கொண்டாடும் என்று அறிவித்தது.
இந்நிகழ்வுக்கு, இஸ்ரேல் தனது கல்வி அமைச்சர் அப்பா எபென் (Abba Eban) தலைமையில் அர்ஜென்டினாவுக்கு ஒரு குழுவை அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அவர்களை அழைத்துச் செல்ல, இஸ்ரேல் ஏர்லைன்ஸ் ‘விஸ்பரிங் ஜெயண்ட்’ என்ற சிறப்பு விமானத்தை வழங்கியது.
இஸ்ரேலிய கல்வி அமைச்சருக்குத் தெரிவிக்காமல் ஐக்மனைக் கடத்தி இந்த விமானத்தின் மூலம் இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதுதான் திட்டம்.
ஐக்மன் தினமும் மாலை 7:40 மணிக்கு 203-ஆம் எண் பேருந்தில் வீடு திரும்புவதும், சிறிது தூரம் நடந்து தனது வீட்டை அடைவதும் வழக்கம். அப்போது இரண்டு கார்களில் சென்று, ஒரு காரில் அவரைக் கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டது.
பேருந்தில் இருந்து இறங்கியவுடன் ஐக்மன் பிடிபட்டார்.
1960-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி இரவு, ஐக்மன் ஒரு இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் தொழிலாளி போல் உடையணிந்திருந்தார். சேயெவ் சிக்ரோனி (Ze’ev Zikroni) என்ற பெயரில் அவரது சட்டைப் பையில் ஒரு தவறான ஐடி-கார்டு வைக்கப்பட்டது. அடுத்த நாள் அந்த விமானம் இஸ்ரேலின் டெல் அவிவில் தரையிறங்கியது.
அவர் இஸ்ரேலுக்கு வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தச் செய்தி உலகுக்கு அறிவிக்கப்படது.
இதைத்தொடர்ந்து, பல மாதங்களாக நடந்த விசாரணையில் ஐக்மன் 15 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
‘கடவுளின் கடுஞ்சினம்’
அது 1972-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் மியூனிக்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன.
செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு, இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் மியூனிக் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென இயந்திர துப்பாக்கிகளின் சத்தம் எதிரொலித்தது.
பாலஸ்தீனிய ‘கருப்பு செப்டம்பர்’ அமைப்பின் (Black September Organization) 8 போராளிகள், விளையாட்டு வீரர்கள் போல் உடையணிந்து, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 இஸ்ரேலிய வீரர்களும் ஒரு ஜெர்மன் காவலரும் இறந்தனர்.
இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல், சிரியா மற்றும் லெபனானில் உள்ள 10 பாலஸ்தீனிய விடுதலைப் படை (Palestine Liberation Organization – PLO) தளங்களை குண்டுவீசி அழித்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இஸ்ரேலிய நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை, இஸ்ரேல் அப்போது என்ன செய்யத் திட்டமிட்டிருந்தது என்பதைக் குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கையின்படி, “பிரதமர் கோல்டா மேயர் ஒரு கமிட்டியை அமைத்திருந்தார். மொசாட்டின் அப்போதைய தலைவரான ஸ்வி ஜமீர் எதிர் பயங்கரவாத நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தார்,” என்கிறது.
சைமன் ரீவ் எழுதிய ‘ஒன் டே இன் செப்டம்பர்’ என்ற புத்தகம், உலகின் எந்தப் பகுதியிலும் மறைந்திருக்கும் மியூனிக் தாக்குதல்காரர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் நீண்ட நேரம் ஆயத்தமானதாகக் குறிப்பிடுகிறது.
மேலும், இந்நூல், “1972-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ரோமில் உள்ள PLO இத்தாலியின் பிரதிநிதி அப்தெல்-வேல் ஜவைதாரை முகவர்கள் சுட்டுக் கொன்றனர், இது இஸ்ரேலின் நீண்டகால பழிவாங்கல் நடவடிக்கையைக் தொடக்கத்தைக் குறிக்கிறது,” என்கிறது.
பின்னர், 1973-ஆம் ஆண்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி, மொசாட் அமைப்பு பெய்ரூட்டில் ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியது. அன்றிரவு இஸ்ரேலிய கமாண்டோக்கள் ஏவுகணைப் படகுகள் மற்றும் ரோந்துப் படகுகளில் ஆளில்லாத ஒரு லெபனான் கடற்கரையில் வந்திறங்கினர்.
மறுநாள் நண்பகல், ‘கருப்பு செப்டம்பர்’ அமைப்பின் உளவுப் பிரிவான ‘ஃபத்தா’வின் தலைவர் முகமது யூசுப் அல்லது அபு-யூசுப், கமல் அத்வான் மற்றும் PLO-வின் செய்தித் தொடர்பாளர் கமல் நாசர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்ரேல் இந்த பழிவாங்கல் நடவடிக்கையைத் தொடர்ந்ததாகவும் சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
சிரியாவில் மொசாட்டின் ஊடுருவல் (1962–65)
1960களில் சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு மிக மோசமாக இருந்தது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் வாழும் சமூகங்களை கோலன் பகுதியிலிருக்கும் சிரியாவின் இராணுவம் தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டிருந்தது. இது இஸ்ரேலில் அமைதியின்மையை அதிகரித்தது.
சிரியாவின் திட்டங்களைத் தெரிந்துகொள்ள இஸ்ரேலுக்கு ஒரு உளாவாளி தேவைப்பட்டது. அதற்கு எலி கோஹனைத் தேர்ந்தெடுத்தது மொசாட்.
எலி கோஹன் எகிப்தில் சிரியா வம்சாவளியைச் சேர்ந்த யூதர்களின் மகனாகப் பிறந்தவர். அவர் முன்பு இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட்டில் வேலை பெற முயன்றார், ஆனால் இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டார்.
இருப்பினும், 1960-ஆம் ஆண்டு, மொசாட் எலி கோஹனை ஒரு உளவாளியாக நியமிக்க முடிவு செய்தது. அவர் சிரியாவுக்குச் சென்று உளவு பார்க்க பயிற்சியைத் தொடங்கினார்.
இதற்குப் பிறகு, சிரிய பெற்றோருக்குப் பிறந்த ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு எலி கோஹன் அர்ஜென்டினாவுக்குச் சென்றார்.
அங்கு அவர் பல சிரிய அமைப்புகள் மற்றும் குடியேறிகளின் குழுக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் நட்பாக இருந்ததோடு, பின்னர் சிரியாவின் அதிபரான ஒரு நபருடனும் அவர் நட்பு கொண்டார்.
1962-இல், பாத் கட்சி (Ba’ath Party) சிரியாவில் ஆட்சி அமைத்தது. கோஹன் இந்த வாய்ப்பைத்தான் தேடிக்கொண்டிருந்தார்.
அர்ஜென்டினாவில் உள்ள தந்து தொடர்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர், சிரியாவில் வசிக்கும் போது பல உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.
“The Mossad: Six Landmark Missions” என்ற புத்தகத்தில் எழுத்தாளர் மார்க் E. வர்கோ இவ்வாறு எழுதுகிறார், “ஒரு காலத்தில் கோஹன் துணைப் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படக் கூடக் கருதப்பட்டார். சிரிய அதிகாரிகளுக்கு விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் மதுபானங்களை அள்த்து, அவர்களிடமிருந்து அனைத்து உளவுத்துறை தகவல்களையும் சேகரித்து மொசாட்டுக்கு அனுப்பினார்.”
ஜோர்டான் ஆற்றின் அருகே ஒரு பெரிய கால்வாயை அமைத்து இஸ்ரேலின் நீர் விநியோகத்தை சிரியா துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக எலி கோஹன் 1964-இல் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு தெரிவித்தார்.
மொசாட் இஸ்ரேலிய அரசாங்கத்திற்குத் தகவல் அனுப்பியது. உடனடியாக இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவின் கருவிகளையும் முகாம்களையும் குண்டுவீசி சிரியாவின் திட்டத்தை முறியடித்தன.
எலி கோஹென் ஒருமுறை சிரிய-இஸ்ரேல் எல்லையை ஆய்வு செய்யச் சென்றார். பல நாட்கள் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவரிடமிருந்து எல்லை பாதுகாப்பு மற்றும் சிரிய ராணுவத்தின் உண்மையான எண்ணிக்கை மற்றும் பலம் பற்றிய முழுமையான விவரங்கள் பின்னர் மொசாட்டுக்கு ரகசியமாகச் சென்றது.
இந்தத் தகவல் கசிவால் விரக்தியடைந்த சிரியாவின் உளவுத்துறை, தனது நட்பு நாடான சோவியத் யூனியனின் அதிகாரிகளின் உதவியை நாடியது.
1965-ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்குச் செய்தியை அனுப்பும் போது, எலி கோஹனை சிரிய மற்றும் சோவியத் அதிகாரிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி பிடித்தனர்.
கோஹனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையத்தில் தூக்கிலிடப்பட்டார். இஸ்ரேலில் கோஹன் ஒரு தேசபக்திமிக்க வீரராக இன்னும் நினைவுகூரப்படுகிறார்.
‘மிஷன் ஈரான்’
இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் பதற்றமானவை — முக்கியக் காரணம் இரானின் அணுசக்தி திட்டம்.
ஆனால் 2012-இல் வெளியிடப்பட்ட ‘Mossad: The Greatest Missions of the Israeli Secret Service’ என்ற புத்தகம், இரானின் அணுசக்தி திட்டத்தைக் ‘கட்டுப்படுத்த’ இஸ்ரேலின் உளவுத்துறை முயற்சிகளை குறிப்பிடுவது மட்டுமல்லாமல், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வருவது போலவே இந்த நிறுவனம் நிஜ வாழ்க்கையில் எப்படி ஆபத்தான பணிகளைச் செய்தது என்பதையும் விவரிக்கிறது.
ப்இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மைக்கேல் பார்-ஜோஹர் மற்றும் நிசிம் மிஷால் ஆகியோரின் கூற்றுப்படி, “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை தடுக்க, இஸ்ரேல் அவர்களில் கருவிகளை நாசப்படுத்த முயன்றது. இந்த நோக்கத்திற்காக, மொசாட் கிழக்கு ஐரோப்பியாவில் சில நிறுவனங்களை நிறுவியது. இவை இரானுக்குக் குறைபாடுள்ள கருவி பாகங்களை விற்றதாகக் கூறப்படுகிறது. அவற்றைப் பயன்படுத்தியதால் இரானின் கருவிகள் பழுதாகின.”
மெலும் இந்நூல், ஜனவரி 2010-இல், இரானின் அணுசக்தித் திட்டத்தின் ஆலோசகர் “தனது காருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருளால் கொல்லப்பட்டார்,” என்றும் தெரிவிக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, “2011-ஆம் ஆண்டில், இரானிய அணுசக்தித் திட்டத்தின் தலைவர் தனது காரில் எங்கோ சென்று கொண்டிருந்தபோது, அவரை கடந்து சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் காரின் பின்புற கண்ணாடியில் ஒரு சிறிய சாதனத்தை மாட்டியது. சில வினாடிகளில் அது வெடித்தது. 45 வயதான அந்த அணு விஞ்ஞானி கொல்லப்பட்டார். அவரது மனைவி காயமடைந்தார்.”
கடந்த 2021-இல், இரானிய அணுசக்தித் தளத்தில் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்தது. ஒரு பெரிய வெடிப்பு அத்தளத்தின் மின்சாரத்தைத் துண்டித்து, யுரேனியம் செறிவூட்டும் கருவியின் செயல்பாட்டை நிறுத்தியது.
“அதிகாரப்பூர்வ பொறுப்பை அந்த அமைப்பு ஏற்கவில்லை என்றாலும், மின்வெட்டு மொசாட்டின் செயல்,” என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஹமாஸைப் பழிவாங்கிய மொசாட்
பாலஸ்தீனிய அமைப்பான ‘ஹமாஸ்’, துனிசியாவில் வசிக்கும் அதன் தளபதிகளில் ஒருவரான முஹம்மது அல்-ஸ்வாரியை, மொசாட் அமைப்பு கொன்றதாகக் குற்றம் சாட்டியது.
உண்மையில், 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி, முஹம்மது அல்-ஜவாரியை, துனிசியாவின் ஸ்ஃபாக்ஸில் (Sfax) உள்ள அவரது வீட்டிற்கு அருகே, ஓடும் காரில் இருந்து சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.
ஸ்வாரி ஒரு தொழில்முறைப் விமானவியல் பொறியியலாளர். அவர் ஹமாஸிற்காகவும், ஹெஸ்புல்லாவுக்காகவும் பல்வேறு வகையான ட்ரோன்களை வடிவமைத்துக் கொடுத்தார்.
சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளின்படி, நீருக்கடியில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கக்கூடிய ஆளில்லா கடற்படைக் கப்பலையும் வடிவமைத்திருந்தார்.
கொலையாளிகளை அடையாளம் காண உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் ஒரு மொபைல் போன் சிம் மற்றும் மூன்றாவது நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாடகை கார்.
ஹமாஸின் உயர்தொழில்நுட்ப ஆயுத வல்லுநர்கள் கொல்லப்பட்டது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டதாகப் பார்க்கப்பட்டது. மொசாட் தாக்குபவர்களை மட்டுமல்ல, அவர்களுக்குப் பின்னால் உள்ள ஆதரவு அமைப்பையும் குறிவைத்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்