
பட மூலாதாரம், GETTY IMAGES
நீங்கள் பல் மருத்துவரிடம் செல்லும்போது, பொதுவாக உங்கள் பற்களை கவனித்துக்கொள்வது பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள். ஆனால், பற்கள் தவிர்த்து வாயின் மற்ற பகுதிகளை கவனிக்க மறந்துவிடுகிறீர்கள்.
உங்கள் வாயின் ஆரோக்கியம் உடலின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதற்கான அறிகுறிகளை காட்டலாம். அதனால் வாய் ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியமாகும்.
“கண்களில் ரத்தம் வந்தால் நீங்கள் புறக்கணிப்பீர்களா? இல்லைதானே. அப்படியிருக்கையில் வாயின் ஈறுகளில் ரத்தம் வந்தால் மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?” என லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ ஆராய்ச்சி துறையின் இயக்குநர் பேராசிரியர் நிகோஸ் டோனோஸ் பிபிசியின் ‘தி எவிடென்ஸ்’ நிகழ்ச்சியில் கேட்டார்.
“ஈறுகளில் ஏற்படும் கடுமையான நோய்களுடன் வாழ்க்கையை கடப்பவர்கள் இருக்கிறார்கள். அது சாதாரணமானது தான் என்றும் அவர்கள் நம்புகின்றனர்,” என்கிறார் அவர்.
பீரியடோன்டிடிஸ் (periodontitis) எனப்படும் ஈறுகளில் ஏற்படும் நோய், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும், இந்த நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தும் பல ஆய்வுகள் உள்ளன.
“மனிதர்களுக்கு அதிகமாக ஏற்படும் நாள்பட்ட நோய்களில் ஈறுகளில் ஏற்படும் இந்த நோய் ஆறாவது இடத்தை வகிக்கிறது. உலகளவில் 110 கோடி மக்களிடையே இந்நோய் உள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இது 11.2 % அகும்.” என்றார் டோனோஸ்.

பட மூலாதாரம், GETTY IMAGES
ஈறு நோயின் அறிகுறிகள் என்ன?
ஈறு நோய் அல்லது பீரியடோன்டிடிஸ் என்பது, “பற்களைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களை பாதிக்கும் தீவிர தொற்று. உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால், உங்கள் பற்களை தாங்கும் எலும்புகளை அழித்துவிடும். இதனால் பற்கள் தளர்ந்துவிடும் அல்லது விழுந்துவிடும்” என்கிறார் அவர்.
ஈறுகளில் ரத்தப்போக்கு, சிவத்தல், வலி அல்லது தொடர்ச்சியான துர்நாற்றம் ஆகியவை இந்நோயின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.
இந்நோயால் வாய் மட்டும் பாதிக்கப்படாது. அதையும் தாண்டி, இது டைப்-2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
“இந்நோய் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதேசமயம், நீரிழிவு நோயாளிகளிக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்” என டோனோஸ் கூறுகிறார்.
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பது ஈறு நோயை கட்டுப்படுத்தவும், தீவிர பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவும் என ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன.
“சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்த ஒரு ஆய்வில், ஈறு நோய்க்கு வழக்கமாக சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், அறுவை சிகிச்சை இல்லாமலேயே, சிறந்த வளர்சிதை மாற்றக் கட்டுப்பாடு ஏற்பட்டு, கிட்டத்தட்ட 12 மாதங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது” என்று டோனோஸ் கூறினார்.
பிரிட்டனில் உள்ள சலிஸ்பரி மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சை மருத்துவரும் பிபிசியின் ‘தி எவிடென்ஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்றவருமான கிரஹாம் லாய்ட் ஜோன்ஸ் கூறுகையில், வாய் சுகாதாரத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் இடையேயான உள்ள உறவு “உண்மையாமானது” என தெரிவித்தார்.
“நாம் வாயை ஒரு நோயெதிர்ப்பு உறுப்பாகப் பார்க்க வேண்டும். நம் வாயில் பொதுவாக நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. வாயின் சுகாதாரத்தில் சமரசம் செய்துகொண்டால் அந்த கிருமிகள் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும். அவை இந்நோய்கள் வளர்வதற்கும் மோசமடைவதற்கும் காரணமாகிவிடும்,” என மருத்துவர் கிரஹாம் லாய்ட் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
வாயிலிருந்து இதயம் வரை
டைப் 2 நீரிழிவு நோய் மட்டுமே ஈறு நோயுடன் தொடர்பான ஒரே நோய் அல்ல: கட்டுப்பாடற்ற பீரியடோன்டிடிஸ் பாக்டீரியாக்கள் ரத்தத்தின் வாயிலாக உடலில் பயணிப்பதால், அவை இதயத்தை பாதிக்கலாம்.
“பீரியடோன்டிடிஸ் காரணமாக உடலில் இருக்கும் இந்த அழற்சி கூறுகள் ரத்த ஓட்டத்தை அடைகின்றன,” என்று டோனோஸ் கூறினார். “இஸ்கிமிக் எனப்படும் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் பிரச்னை முதல் மாரடைப்பு வரை நோயாளிகளுக்கு இது விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என்கிறார் அவர்.
நோயெதிர்ப்பு குறைபாடு அல்லது போதைப்பொருள் பயன்பாடு காரணமாக வாய் ஆரோக்கியம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் போது ஏற்படும் நோய்த்தொற்று எண்டோகார்டிடிஸ் (endocarditis) எனப்படுகிறது. இது மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.
“அதிர்ஷ்டவசமாக இது ஒரு அரிதான நோயாகும். ஆனால் இது ஒரு தொற்று நோய். இதில் வாயில் உள்ள சில கிருமி தொற்றுகள் கட்டுப்பாட்டை இழந்து இதயத்தின் உள் திசுக்களைப் பாதிக்கின்றன,” என்று டாக்டர் லாயிட்-ஜோன்ஸ் விளக்குகிறார்.
“காலப்போக்கில், அதிகப்படியான பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டம் மூலமாக உடலின் மற்ற பகுதிகளை அடைகின்றன. இது நோய்களுக்கு வழிவகுக்கும் அல்லது ஏற்கனவே உள்ள நோய்களை மோசமாக்கும்,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
அறிவாற்றலுடன் தொடர்பு
முந்தைய நிகழ்வுகளைப் போல ஆதாரங்கள் உறுதியானதாக இல்லாவிட்டாலும், சில ஆராய்ச்சியாளர்கள் இந்த பாக்டீரியாக்களுக்கும் முதுமையில் அறிவாற்றல் குறைபாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விவான் ஷா, தனது ஆய்வில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட பற்களுடன் முதுமை அடையும் நபர்களுக்கு, அதைவிட குறைவான பற்களை உடையவர்களைவிட, குறைந்தளவிலேயே அறிவாற்றல் குறைபாடு இருப்பதாக உறுதியாக தெரிவித்தார்.
“சான்றுகள் ஒப்பீட்டளவில் சமீபத்தியவை என்றாலும், உங்களுக்கு சில வகையான அறிவாற்றல் குறைபாடு இருந்தால் நீங்கள் பல் துலக்குவது அல்லது பற்களின் இடுக்குகளுக்கிடையே சுத்தம் செய்யும் திறன் பாதிக்கப்படலாம்,” என்று ஷா கூறுகிறார்.
“இது ஒரு ஊட்டச்சத்து பிரச்னையுடன் தொடர்புடையது. உங்களுக்குக் குறைவான பற்கள் இருந்தால், நிச்சயமாக ஊட்டச்சத்துக் குறைபாடும் இருக்கும். இது அறிவாற்றல் சரிவுக்கு வழிவகுக்கிறது,” என்றார்.
“ஈறு நோயின் வளர்ச்சி மற்றும் அது மோசமடைவதில் தொடர்புடைய குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் உள்ளன.” என்கிறார் லாய்ட்-ஜோன்ஸ்.
“ஜிங்கிவாலிஸ் (gingivalis) என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா மிகவும் சுவாரஸ்யமானது. இது நரம்பு செல்களைக் கொல்லும் நியூரோடாக்சின்களால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த பாக்டீரியா வாயில் மட்டும் தங்காது, அது வீக்கமடைந்த ஈறுகளை விட்டு வெளியேறி உடலுக்குள் செல்கிறது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவம் இரண்டிலும் இந்த பாக்டீரியா காணப்படுகிறது.” என்றார்.
பேராசிரியர் டோனோஸைப் பொறுத்தவரை, வாய் மற்றும் உடலின் வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையிலான இந்த உறவுகள், பீரியடோன்டிடிஸ் நோயை முதலில் தடுப்பதன் முக்கியத்துவத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
வாய் பராமரிப்பின் அவசியம்
“புற்றுநோய் தவிர அனைத்து வாய்வழி நோய்களும் தடுக்கக்கூடியவை மற்றும் ஓரளவுக்கு சிகிச்சையளிக்கக்கூடியவை,” என டோனோஸ் கூறினார்.
வாய் சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் உரிய நேரத்தில் பல் மருத்துவரை அணுகுதல் இந்நோய்களை தடுக்க உதவும் என்கிறார் அவர்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வலிமை பெற்று தாய் மற்றும் குழந்தை இருவரையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று டாக்டர் ஷா கூறினார்.
“பேறு காலத்திற்கு முன்பே குழந்தைகள் பிறப்பது, குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பிறக்கும் அபாயத்தை இது அதிகரிக்கிறது, அதனால்தான் தாய்மார்களுக்கு போதுமான கவனிப்பை வழங்குவது மிகவும் முக்கியம்,” என்கிறார் ஷா.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்