- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
-
அயோத்தியில் புதிதாக திறக்கப்படவுள்ள ராமர் கோவிலின் அழைப்பிதழ்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பரவலாக விநியோகித்து வருகின்றனர். இந்த முயற்சி பாஜகவின் அரசியலுக்கு பலன் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாறுபட்ட கருத்துகள்
அண்மையில், சென்னையில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் பேசும்போது ராமர் கோவில் திறப்பு விழா பற்றி எழுந்த கேள்விக்கு ‘முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு திறப்பு விழா நடத்துவதை விமர்சிக்கும் சங்கரச்சார்யார்களின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
அதேநேரம் திறப்பு விழாவுக்கு செல்லக்கூடிய ஒருவரின் விருப்பத்தைக் குறைகூற மாட்டேன். நானே வேறு ஒரு சமயத்தில் அங்கே செல்வேன்” என்று பதில் கூறினார். காங்கிரஸ் கட்சி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஊடகங்களில் பேசும்போது பக்தர்களின் அயோத்தி பயணத்திற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார். அதேநேரம், திராவிட முன்னேற்றக் கழகம், ராமர் கோவில் திறப்பு விழாவின் அரசியலை விமர்சித்துள்ளது.
பாஜக கூட்டணியிலிருந்து முறித்துக்கொண்டு வெளியே வந்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராமர் கோவில் விழாவிற்கு செல்வேன் எனச் சொல்வதில் தயங்கவில்லை. இருப்பினும் அவர் உடல்நிலை காரணமாக பங்கேற்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதிமுக சார்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, கரசேவைக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எடுத்திருந்தார் என நினைவுகூர்ந்தார்.
முக்கிய அரசியல் கட்சிகள் எச்சரிக்கையாக கருத்து வெளியிடுவதன் காரணம் பக்தர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான். எனவே, ராமர் கோவில் கட்டுவதையும், அந்த விழாவையே தனது அரசியல் மேடையாக மாற்றுவதிலும் வெளிப்படையாகச் செயல்பட்டு வரும் பாஜகவிற்கு, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரலாற்றில் கண்டது என்ன?
ராமர் மீதான பற்றினை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திடும் முயற்சிகள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும் பலமுறை நடந்துள்ளன.
கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ராமர் படத்தை செருப்பால் அடித்தார் என்று ஒரு சர்ச்சை பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. அந்தச் சம்பவம் உண்மையா என்பது ஒருபக்கம் இருக்க, அதே ஆண்டில் தேர்தல் களத்தில் இந்த பிரசாரம் திமுகவிற்கு எதிராக கடுமையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தேர்தல் களத்தில் திமுகவே வென்றது.
கடந்த 1990ஆம் ஆண்டில் எல்.கே.அத்வானி முன்னெடுத்த ரத யாத்திரை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த யாத்திரை தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் எதையும் செலுத்தவில்லை.
அயோத்தியை நோக்கிய கர சேவையை 1992ஆம் ஆண்டில், அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆதரித்தார். ஆனால், அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பும், அதை ஒட்டிய வன்முறைகளும் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையானது. பின் நாட்களில் கர சேவையை ஆதரிப்பது தனது நிலைப்பாடு அல்ல என்று அவரே மறுத்தும் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் ராமர் கோவில் ஆதரவு நிலைப்பாட்டால் பலன் எதுவும் இல்லை என்பதுதான் அதற்கு காரணமாகப் பார்க்கப்பட்டது.
வங்காள விரிகுடாவில் ராமர் திட்டுகள் உள்ள பகுதியில், சேது கால்வாய் அமைப்பதற்கான திட்டம் பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியில் திமுகவும் இடம்பெற்றபோது அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு மிக முக்கியமானதாக அமைந்த இந்தத் திட்டம், பின் நாட்களில் ராமர் கட்டிய பாலம் என்ற நம்பிக்கையை முன்னிறுத்தி, பாஜகவால் எதிர்க்கப்பட்டது. இதைக் கண்டித்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி “ராமர் ஒரு பொய், ஒரு இமாலய பொய்.. வரலாற்றைப் பற்றி நன்கு தெரிந்த நேரு, ராமாயணத்தை ஒரு காவியம் என்று கூறியுள்ளார்,” என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தலைவர் எல்.கே.அத்வானி கூறியபோது, அதை ஏற்க மறுத்தார் கருணாநிதி. ராமாயண புராணங்களில் ராமரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ராவணன் தென்னகத்தைச் சேர்ந்த மன்னன், எனவே, திராவிடர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆரிய ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் காவியம் என்ற பார்வையும் தமிழ்நாட்டில் உள்ளது.
அதனால் ராவணனுடன் சேர்த்தே தங்களை உருவகப்படுத்திக் கொள்வதும் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளது. இவ்வகையில் ராமர் கோவில் விஷயம் அரசியலில் அதற்குரிய இடத்தைப் பெற்றுள்ளது.
அழைப்பிதழில் அரசியல்!
ராமர் கோவிலை பிற கட்சிகளின் அரசியலாக்கும் நடவடிக்கைகளால் பாஜகவிற்கு பலன் கிடைக்கும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
“ராமர் கோவில் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றுதான் பாஜகவும் கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது என்பது உண்மை. வேறு கட்சிகள் ராமர் கோவில் விவகாரத்தை அரசியலாக்குவதால் பாஜகவுக்கு பலன் கிடைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?
பக்தர்கள் கோரிக்கையை ஏற்று அயோத்தியாவுக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தால் அதை நாங்கள் வரவேற்கத்தான் செய்வோம்,” என்று குறிப்பிட்டார்.
அழைப்பிதழ் கொடுக்கும் விஷயத்தில் தனது அரசியலை முன்னெடுக்கக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே பாஜக முயல்கிறது. ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பு முதலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டில் வழங்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் பிஎம் நாகராஜன், ஆர்எஸ்எஸ் மாநில சேவைப் பிரிவு தலைவர் ராமராஜசேகர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினர்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின், விரைவில் தரிசனம் செய்ய வருவதாகத் தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களிடமும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
எதற்காக இத்தனை செலவு?
சாமானிய இந்து மத உணார்வாளரான, வேலூரைச் சேர்ந்த ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் தான். ஆனால், ராமர் கோவில் திறக்கப்படுவதில் ஒரு உற்சாகம் ஏற்படவில்லை. பல இந்துக் கோவில்கள் விளக்கு ஏற்றவே எண்ணெய் இல்லாமல் இருக்கின்றன.
இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்டிருக்கும் கோவிலை ராமர் நேரில் பார்த்திருந்தால் ஏன் இவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்று அவரே கேட்டிருப்பார். இந்துக்களுக்கு செய்ய வேண்டும் என்றால், எவ்வளவோ விஷயங்கள் செய்யலாம். இதே மாதிரி செலவு செய்துதான் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் சிலை வைக்கப்பட்டது.
அந்தச் செலவு அதிகம் என்றாலும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டவர் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளலாம். பாஜக கொண்டு வந்த முக்கியமான தீர்வுகளில் ஒன்று சட்டப்பிரிவு 370. ஆனால் ராமர் கோவில் நிச்சயமாக தேர்தலுக்காக மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ராமரை மறந்துவிடுவார்கள். பாஜக ராமர் கோவிலை அரசியல் உத்தியாகத்தான் பயன்படுத்தி வருகிறது,” என்றார்.
“முதல்வரின் மனைவிக்கு ராமர் கோவிலுக்கான அழைப்பிதழ்களை நேரில் சென்று வழங்குகிறார்கள். ஆனால் இந்தியாவின் முதல் குடிமகளுக்கு பல விமர்சனங்கள் எழுந்த பிறகுதான் அழைப்புகள் வழங்கப்படுகிறது. துர்கா ஸ்டாலினைவிட திரௌபதி முர்முவுக்கு பக்தி குறைவா?” எனக் கேள்வி எழுப்புகிறார் ஆன்மீக பெரியவர் கலையரசி.
மேலும் அவர், “தமிழர்களிடம் சாதி, மதம் என்ற வார்த்தையே கிடையாது. ராமர் கடவுள் இல்லை என்பது தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டின் ஆன்மீகம் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பு கனியன் பூங்குன்றனார் கூறிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்பதில் வெளிப்படுகிறது,” எனக் குறிப்பிட்டதுடன் கம்பர் தான் மனிதரை கடவுளாக்கிவிட்டார் என்றார்.
ராமர் இந்திய பண்பாட்டின் அடையாளமா?
ஆனால் இதை ஏற்க மறுக்கிறார் நாராயண திருப்பதி. “ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது தவறு. ராமர் கோவில் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் கிடையாது. ராமர் கோவில் என்பது நமது நாட்டின் பண்பாட்டு அடையாளம்,” என்கிறார் அவர்.
எனினும், ராமர் வழிபாடு என்பது வெகுஜன மக்களின் வழிபாட்டு முறை கிடையாது என்று கூறும், வரலாற்றுப் பேராசிரியர் வீ.அரசு, ராமர் கோவில் பிரச்னை தமிழ்நாட்டில் எடுபடாது என்கிறார்.
“தமிழின் பழமையான சங்க இலக்கியங்களில் இயற்கை வழிபாடு, குடும்பப் பெரியவர்கள், இறந்தவர்களின் வழிபாடு உள்ளிட்ட சிறுதெய்வ வழிபாடுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைக்கும் இதுதான் மரபாக இருந்து வருகிறது.
பேரரசர்கள் பெரிய கோவில்களைக் கட்டி பெருதெய்வ வழிபாட்டைத் தொடங்கினர். அத்தகைய கோவில்களில் வாழும் பெருதெய்வங்கள் மேல்தட்டு மக்கள் வழிபடக் கூடியவர்களாக இருந்தனர்.
மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை சாதிய காப்பியங்கள் என பெரியார் பேசினார். இன்றைய ஊடகங்களின் தாக்கம் மத்திய தர வகுப்பினரிடையே காணப்படலாம். அதனால் பாஜகவுக்கு ஆதரவாக சொற்ப சதவீத வாக்குகள் கிடைக்கலாம்,” என்றார்.
திமுகவின் எதிர்வினை
இந்தப் பின்னணியில்தான் மத ராஷ்ட்டிரா அமைப்பதற்கான கால்கோள் விழாவா ராமர் கோவில் திறப்பு எனக் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து வகையிலும் மக்களைப் பத்தாண்டு காலமாக வேட்டையாடி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்காத அயோத்தி ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறோம் என்று சொல்லி வாண வேடிக்கை காட்ட முயல்கிறது” என்று விமர்சித்துள்ளார். அத்துடன் பக்திக்குத் தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பல்லாயிரக் கணக்கான ஆலயங்களில் திருப்பணிகள், ஆயிரம் கோவில்களுக்குக் குடமுழுக்குகள் செய்தும், லட்சோப லட்சம் மக்கள் திரளும் திருவிழாக்களில் இறையன்பர்களுக்குத் தக்க வசதிகளைச் செய்தும், 5381 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகளை மீட்டும் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆன்மீகத் தரப்பு மக்களும் போற்றி வருகின்றனர். இவற்றையெல்லாம் தேர்தல் மேடைகளில் பேசி வாக்கு அரசியல் ஆதாயத்தை நாங்கள் நாடியதில்லை. இறை நம்பிக்கை ஒருவரது ஆன்மத் தேடல்; தனிப்பட்ட உரிமை,” என்றும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.
‘தென்னகம் ஏற்காது’
தமிழ்நாடு எப்போதுமே எதிர் கதையாடலை முன்னெடுக்கும் பண்பாட்டைக் கொண்டது, ராமர் கோவில் பிரச்னையும் அப்படித்தான் எதிர்கொள்ளப்படும் என்கிறார் அரசியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இஸ்லாமியர்களுக்கு மெக்கா இருப்பது போல கிறித்தவர்களுக்கு ரோம் இருப்பது போல இந்துக்களுக்கு அயோத்தி என்று உருவாக்க பாஜக முயல்கிறது. ஆனால் அது நடக்காது,” என்கிறார் அவர்.
“ராமருக்கு ஒரு கோவில்தான் இருக்க வேண்டுமா? தமிழ்நாடு எப்போதுமே எதிர் கதையாடலைத்தான் முன்வைத்து வந்துள்ளது. வடக்கில் காசி இருந்தால் தெற்கில் ராமேஸ்வரம் உள்ளது. இதுதான் தமிழ்நாட்டின் போக்கு. எனவே ராமர் கோவில் முன்னெடுப்புகள் தமிழ்நாட்டின் அரசியலில் அவர்களுக்குப் பலன் அளிக்காது.
தென்னிந்தியாவே பொதுவாக இந்த வாதத்துக்கு இணங்கவில்லை. கர்நாடகா வேண்டுமானால் சற்று பிளவுபடுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு இதைப் பகுத்தறிவு கொண்டு பார்க்கிறது. கேரளா இதைத் தத்துவார்த்த ரீதியாகப் பார்க்கிறது. ஆந்திராவுக்கு இது மத உணர்வுகள் சம்பந்தப்பட்டது மட்டுமே. இதில் அவர்களுக்கு அரசியல் கிடையாது,” என்று தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்