
பட மூலாதாரம், DHARASHIV DISTRICT OFFICE
மராத்வாடா என்ற பெயரை கேட்டவுடன், விவசாயிகள் தற்கொலை, திட்டங்கள் அமல்படுத்தப்படாதது, நிதி போதாமை போன்ற விஷயங்களே மனதில் வருகின்றன. ஆனால், மராத்வாடா ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளின் மையமாக ஒரு காலத்தில் இருந்தது பலருக்குத் தெரியாது.
மராத்வாடாவில் உள்ள தெர், பெதான், போகர்தான் உள்ளிட்ட சிறிய நகரங்களிலிருந்து வரும் சரக்குகள், சஹ்யாதிரி மலைத்தொடரில் உள்ள நானேகாட் வழியாக, வரலாற்று சிறப்பு மிக்க நலாஸொபாரா துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சரக்குகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
தெற்கு இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மராத்வாடா வழியாக நடத்தப்பட்டன. இது ஒரு முக்கிய வர்த்தக பாதையாக இருந்ததால், பாதுகாப்புக்காக இந்த சாலையோரம் பல கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக, வெவ்வேறு வம்சங்கள் மராத்வாடாவின் இந்தப் பகுதியை ஆட்சி செய்தன. எனவே, உஸ்மானாபாத் மாவட்டத்தில் பல முக்கிய கோட்டைகள் கட்டப்பட்டன.
நலாதுர்க், பரந்தா, ஆவுசா, உத்கிர் மற்றும் ராம்துர்க் கோட்டைகள் மராத்வாடாவின் சுடும் வெயிலிலிருந்து பாதுகாப்பாகவும், சில சமயங்களில் பேரரசைப் பாதுகாக்கவும், வேறு சில சமயங்களில் விவசாயிகளை சிக்கல்களிலிருந்து காப்பாற்றவும் உதவின.
மஹாராஷ்டிராவில் உள்ள மிகப்பெரிய பிரமாண்ட கோட்டை நலாதுர்க் ஆகும்.
இந்தக் கோட்டை நலாதுர்க்கையும் ரன்மண்டலையும் இணைக்கிறது. வேறு எங்கும் இத்தகைய கோட்டை இல்லை. ஏனென்றால், இந்தக் கோட்டையில் நீர்வள ஆதாரங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கு அப்பாற்பட்டு, ஆட்சியாளர்கள் இந்தக் கோட்டையிலிருந்து சுற்றியுள்ள பகுதிகளின் கட்டுப்பாட்டை எவ்வாறு பெற்றார்கள் என்பதை ஒருவர் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.
இந்த நலாதுர்க் கோட்டை மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது. நான்காவது பக்கத்தில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு உள்ளது.

பட மூலாதாரம், DHARASHIV DISTRICT OFFICE
நலாதுர்க் கோட்டை கட்டப்பட்டிருக்கும் இடம் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது, எனவே யாரும் நெருங்கி வரும் வரை கோட்டை இருப்பது தெரியாது.
சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கோட்டையில் ‘பானி மஹால்’ (நீர் மாளிகை) மிகவும் சிறப்பானது.
கோட்டையின் அருகே ஓடும் போரி நதி கோட்டையைப் பாதுகாக்க திசை திருப்பப்பட்டது. பருவமழைக்குப் பிறகு, வண்ணமயமான ஆண், பெண் நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
பாதுகாப்புக்காகவே இந்த பிரமாண்ட கோட்டை கட்டப்பட்டது. இதில் மொத்தம் 114 தூண்கள் உள்ளன.
பரந்தா, உபாலி, சங்கராம், நவபுருஜ் ஆகியவை நலாதுர்க் கோட்டையின் முக்கிய அமைப்புகள். கோட்டையின் மேல் அடுக்கு மூன்று பீரங்கிகளை வைக்கக் கூடிய அகலமான இடத்தைக் கொண்டுள்ளது. இதுவே கோட்டையில் உள்ள உயரமான புள்ளி.
கோட்டைக்குள் நுழைய முக்கிய வாயில் ‘ஹல்முக் தர்வாஜா’. இந்தக் கோட்டை எதிரியை தடுப்பதற்காக கட்டப்பட்டது என்று வாயிலை பார்த்தாலே தெரிகிறது.
அந்த வாயிலைப் பார்த்தால் அதுவே முக்கிய வாயில் போல் தோன்றுகிறது. ஆனால், இன்னும் கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, அது முக்கிய வாயில் இல்லை என்பது தெரிகிறது. இது ஒருவரை இதுதான் முக்கிய வாயில் என்று நினைக்க வைப்பதற்காக கட்டப்பட்டது என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
கொஞ்சம் வளைந்து நெளிந்து உள்ளே சென்ற பிறகு, முக்கிய வாயில் தென்படுகிறது. அங்கிருந்து நலதுர்க்கின் ஒவ்வொரு பகுதியையும் தெரிந்து கொள்ளும் பயணம் தொடங்குகிறது.

பட மூலாதாரம், DHARASHIV DISTRICT OFFICE
நலாதுர்க் கோட்டை – பெயர்க் காரணம் என்ன?
நலாதுர்க் கோட்டை பெயரின் தோற்றம் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:
புராணங்களில் குறிப்பிடப்படும் நளன் மற்றும் தமயந்தியுடன் இந்தக் கோட்டையின் பின்னணி தொடர்புடையது. நளன் இந்தக் கோட்டையைக் கட்டியதாக ‘தாரிக்-இ-பாரிஷ்டா’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இந்தக் கோட்டைக்கு நலாதுர்க் என்ற பெயர் வந்திருக்கலாம்.
வரலாற்று ஆய்வாளர் மற்றும் அறிஞர் ஜெயராஜ் கோச்ரே, நலாதுர்க் முன்னர் மைலார்பூர் என்று அறியப்பட்ட ஒரு நகரம் என்று கூறுகிறார். மைலார் என்பது காண்டோபா தெய்வத்தின் பெயரிலிருந்து வந்தது.
மேலும், தெலுங்கில் நல்லா என்றால் கருப்பு என்று பொருள், துர்க் என்றால் துர்கா. அதன்படி, கருப்பு கற்களால் கட்டப்பட்டதால் இது நலாதுர்க் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம்.
ஆதில்ஷாஹி காலத்தில் இந்தக் கோட்டைகள் ஷாஹ்துர்க் என்று அழைக்கப்பட்டாலும், அந்தப் பெயர் பிரபலமடையவில்லை.
நலாதுர்க் கோட்டை சாளுக்கியர்கள், பானி சுல்தான்கள், நிஜாம்ஷாஹிகள், ஆதில்ஷாஹிகள், முகலாயர்கள், மராத்தியர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் காலத்தைக் கடந்து வந்துள்ளது. சுதந்திர இந்தியாவிலும் இந்தக் கோட்டை தனித்துவமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
நலாதுர்க் கோட்டையின் வரலாறு
நலாதுர்க் கோட்டையின் வரலாற்றைப் பற்றி ஜெயராஜ் கோச்ரே எழுதிய “துர்க் நலாதுர்க்” என்ற புத்தகத்தில், 1351 மற்றும் 1480 க்கு இடையில் பாமினி ஆட்சியின் போது மண் கோட்டை மறுமுறை கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மண்ணுக்குப் பதிலாக கற்களால் கட்டப்பட்டதால் நலாதுர்க் வலுவடைந்தது. அதன் அருகே ரன்மண்டல் என்ற மற்றொரு பழைய கோட்டையும் உள்ளது.
1481 ஆம் ஆண்டு பீஜப்பூரின் ஆதில் ஷா நலாதுர்க் கோட்டையை கைப்பற்றினார். பின்னர் 1558 ஆம் ஆண்டு ஆதில் ஷா இந்தக் கோட்டையை கல் கட்டமைப்புகளுடன் வலுப்படுத்தினார். பின்னர், 1613 ஆம் ஆண்டு இப்ராஹிம் ஆதில் ஷா-2 போரி நதியில் அணை கட்டி ‘பானி மஹாலை’ கட்டினார். இதன் மூலம் நலாதுர்க் மற்றும் ரன்மண்டல் கோட்டைகள் இணைக்கப்பட்டன.
பின்னர் 1676 -ல், ஔரங்கசீப் இந்தக் கோட்டையை கைப்பற்றினார். அப்போதிருந்து இந்தக் கோட்டை முகலாயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
1724 ஆம் ஆண்டில், கமருதீன் என்கிற நிஜாம் உல் முல்க் ஆசப்ஜா முகலாயர்களிடமிருந்து பிரிந்து தனி ராஜ்ஜியத்தை நிறுவினார். பின்னர் நலாதுர்க் நிஜாம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1758 ஆம் ஆண்டில் இந்தக் கோட்டையைப் பெஷாவர்கள் கைப்பற்றினர். அப்போது நலாதுர்க்கை மராத்தியர்கள் ஆட்சி செய்தனர். அதன் பிறகு நிஜாம் மீண்டும் இந்தக் கோட்டையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
அதன் பிறகு 1853 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடன் வாங்குவதற்காக நிஜாம் வாரஹாத், நலாதுர்க் மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர், 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியை அடக்குவதில் உதவி செய்ததற்காக பிரிட்டிஷ் அரசு நலாதுர்க் மற்றும் ராய்ச்சூரை நிஜாமுக்கு பரிசாக அளித்தது.
1948 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தக் கோட்டையையும் முழு மராத்வாடாவையும் நிஜாம் ஆட்சியிலிருந்து விடுவித்தது. நிஜாம் ஆட்சி ராணுவ நடவடிக்கையின் மூலம் முடிக்கப்பட்ட பிறகு, இந்த ராஜ்ஜியம் சுதந்திர இந்தியாவில் இணைக்கப்பட்டது.

பட மூலாதாரம், DHARASHIV DISTRICT OFFICE
கோட்டைக்குள் ஆறு, அணை, அரண்மனை, நீர்வீழ்ச்சிகள்
இப்ராஹிம் ஆதில் ஷா 2 ஆட்சியின் காலத்தில், கட்டிடக்கலைஞர் மிர் இமாதின் நீர்வள ஆதாரத்திற்காக போரி நதியில் ஒரு அணையையும், அதன் நடுவில் ஒரு அரண்மனையையும் (பானி மஹால்) கட்டினார்.
சுமார் 1022 ஹிஜ்ரி (1613 CE), அதே பானி மஹாலில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு இந்த அணையை விரிவாக விவரிக்கிறது.
பானி மஹாலில் கிடைக்கும் தகவல்களின்படி, இந்த நீர்த்தேக்கத்தின் கட்டுமானம் அலி ஆதில் ஷா I (1558-1579) ஆட்சியின் காலத்தில் தொடங்கியது. இந்த அணையின் கட்டுமானம் 40 ஆண்டுகள் கழித்து இப்ராஹிம் ஆதில் ஷா-II ஆட்சியின் காலத்தில் நிறைவடைந்தது.
இந்த நீர்த்தேக்கம் ஒரு மூலோபாய கட்டமைப்பு மட்டுமல்ல, ஆதில்ஷாஹி சுல்தான்களுக்கான ஓய்வு இடமாகவும் இருந்தது.
பானி மஹாலில் உள்ள நீரூற்று மற்றும் பானி மஹாலின் ஜன்னல்களிலிருந்து பார்க்கப்படும் அழகிய நீர்வீழ்ச்சிகள் இதற்குச் சான்று.
நலாதுர்க் கோட்டையின் வரலாறு பல சகாப்தங்களைக் கடந்து வந்துள்ளது. இந்தியாவின் வரலாற்றில் இது முக்கியமான கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
1520களில் விஜய நகர மன்னர்களால் ஆதில் ஷாஹிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, உத்திப்பூர்வமான பாதுகாப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த அணை கண்களுக்கு அழகாக இருப்பது போலவே மனதுக்கும் அழகாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மராத்வாடாவில் கடுமையான மழை பெய்வதால், கோட்டை பகுதியில் வாழும் ராணுவத்திற்கும் விவசாயிகளுக்கும் நீர் பிரச்சனையைத் தடுக்கவே இந்த அணை கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தின் பரப்பளவு சுமார் 82,569 சதுர கிலோமீட்டர். இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், விவசாய நிலத்தின் உயரமும் நீர்த்தேக்கத்தின் உயரமும் ஒன்றாக இருந்தது. இது விவசாயத்திற்கு நீர் வழங்குவதை மிகவும் எளிதாக்கியது.
நல்ல காற்று மற்றும் ஒளியை அனுமதிக்கும் வகையில் இந்த அணைச் சுவருடன் இணைத்து கட்டப்பட்ட பானி மஹால், நீரை தடுத்து நிறுத்தியது. இங்கு சேமித்து வைக்கப்பட்ட தண்ணீர், பானி மஹாலின் ஆண் மற்றும் பெண் நீர்வீழ்ச்சிகள் எனப்படும் வாயில்கள் வழியாக வெளியேறுகிறது. இருப்பினும், தண்ணீர் பானி மஹாலில் நுழையாதவாறு கட்டுமானம் செய்யப்பட்டது.
பானி மஹாலுக்குள் செல்ல படிகள் உள்ளன. பானி மஹாலின் சுவர்கள் ஒன்றில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு உள்ளது.
அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ”அஸ் தீன்-இ-சஷாம் முஹிபான் ரோஷன் மீக் தார்ட் வா சஷாம் துஷ்மனான் கத்தார்-இ-குர். அதாவது, இந்த மஹாலில் நீங்கள் நட்பு ரீதியுடன் பார்த்தால், உங்கள் கண்கள் மகிழ்ச்சியால் மின்னும். இல்லையெனில், பகையுடன் பார்த்தால், உங்கள் கண்கள் இருளில் சிக்கிவிடும். “

பட மூலாதாரம், Getty Images
நீர் மேலாண்மை மூலம் ராஜ்ஜிய நிர்வாகம்
பண்டைய காலத்தில் மலை உச்சிகளில் கோட்டைகள் கட்டப்பட்டன. காலப்போக்கில் போர் முறைகள் மாறிவிட்டன. ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மலைகளில் கோட்டைகள் கட்டும் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது.
குன்றுகளின் உச்சிகளில் உத்திப்பூர்வமாக கட்டப்பட்ட கோட்டைகள் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டால், கோட்டைக்குள் வாழும் ராணுவத்தினரும் விவசாயிகளும் மழைநீரையே நம்பியிருக்க வேண்டும். அதனால்தான், கோட்டைகளில் பெரிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டன.
ஆனால், நலாதுர்க் கோட்டை வேறுபட்டது. நீர்வள ஆதாரங்களைத் திறம்பட நிர்வகிப்பதன் மூலம் விவசாயத்தை எளிதாக்கி, அதன் மூலம் நிதி பற்றாக்குறை இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது நலாதுர்க் கோட்டை.
பழங்காலத்திலிருந்தே, தக்காண சுல்தான்கள் நீர் மேலாண்மையை ஒரு அரசியல் கருவியாக மாற்றி, நீருக்கு மத சம்பந்தத்தையும் புனிதத்தையும் சேர்த்துள்ளனர். அந்தக் காலத்தில் அணைகள் அரசனின் நீர் மற்றும் நிலத்தின் மீதான அதிகாரத்திற்கு சான்றாக இருந்தது. அணை போன்ற கட்டமைப்பில், “பானி மஹால்” கட்டப்பட்டது. கட்டடங்கள் அரசனின் அதிகாரத்தின் சிறப்புச் சின்னமாக மாறின. இவை தக்காண ஆட்சியாளர்களின் பேரரசு சின்னங்களாக மாறின.
நலாதுர்க் கோட்டை ராஜ்ஜியத்தின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட எல்லைப்புறக் கட்டமைப்பு மட்டுமல்ல, ‘நீர்’ என்ற மிக முக்கியமான வளத்தை நிர்வகிக்கும் ஒரு நிரந்தரக் கட்டமைப்பாகவும் இருந்தது. ஆதில்ஷாஹிகள் காலத்தில் இந்த அணை கட்டப்பட்டாலும், நலாதுர்க் கோட்டையில் கட்டப்பட்ட இந்த அணை நிஜாம்ஷாஹிகள் மற்றும் பிரிட்டிஷ் காலத்திலும் விவசாய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.

பட மூலாதாரம், Getty Images
கோட்டை இப்போது எப்படி இருக்கிறது?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புறக்கணிக்கப்பட்டிருந்த நலாதுர்க் கோட்டை, கோட்டையின் நிர்வாகம் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு சுற்றுலா மையமாக மாறிவிட்டது. லத்தூர், உஸ்மானாபாத் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கோட்டையில் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்காக நீரூற்றுகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மின்சார கார்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மழைக் காலத்தில் கண்களைக் கவரும் ஆண் மற்றும் பெண் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர்.
இருப்பினும், நலாதுர்க் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கோட்டையின் கட்டுமானம் மற்றும் வரலாற்றை விளக்கும் அவசியமான ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
மும்பை-ஹைதராபாத் நெடுஞ்சாலை மீது இருந்தாலும், இந்த நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக பணிகள் நடந்து வருவதால், இங்கு சாலை வழியாக செல்ல கட்டுக்குலா சாலையை கடந்து வர வேண்டும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்