செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் நீர் திறப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டும் எச்சரிக்கை குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாற்றில் 8000 கன அடி நீர் விநாடிக்கு திறந்து விடப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது.
செம்பரம் ஏரியில் இரண்டு நாட்கள் முன்பு வரை விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக 1000 கன அடி, 2500 கன அடி என உயர்த்தப்பட்டு தற்போது 6000 கன அடி திறந்து விடப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே அதிக மழை சென்னையில்
தெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது.
இதில் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் அதிக மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 96.7 மில்லி மீட்டர் மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 மில்லி மீட்டர் மழையும் அடுத்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 76 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக சென்னை நகரில் தி.நகர், கோடம்பாக்கம், வடபழநி, கொளத்தூர், பட்டாளம் என பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. பிரதான சாலைகளிலேயே மழை நீர் தேங்கியிருந்ததால் நேற்று மாலை பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் 145 இடங்களில் நேற்று தேங்கியிருந்ததாகவும் அதில் 70 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மழையின் காரணமாக, சென்னை ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை. திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் எரி அல்லாமல் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பூண்டி, சோழவரம், தேர்வாய்கண்டிகை என மற்ற ஏரிகளில் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையவுள்ளது.எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்
படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள்.
தி.நகர் ,மேற்கு மாம்பலம் உள்ளிட்ட எந்தெந்த தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே சென்று தயாராக இருக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்