நிலாவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 மெதுவாக தரையிறங்கியதன் வாயிலாக அங்கு சென்றடைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
நிலவில் தங்கள் லேண்டரை தரையிறக்க முடிந்த உலகின் உயர் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அவ்வாறு செய்யும் நான்காவது நாடு இந்தியா. முன்னதாக அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவின் மேற்பரப்பில் தங்கள் லேண்டர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன.
இதே மாதத்தில் ரஷ்யாவும் தனது லூனா -25 ஐ சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரயான் -3 க்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நிலவின் மேற்பரப்பில் அதை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கிவிட்டது.
இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றிக்கு பின்னால் நூற்றுக்கணக்கான இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி உள்ளது. இருப்பினும் குறிப்பாக இந்த விஞ்ஞானிகள் முக்கியப்பங்கு வகித்தனர்.
பி வீரமுத்துவேல், சந்திரயான்-3 திட்ட இயக்குநர்
இவரின் தந்தை ஒரு ரயில்வே ஊழியர். இஸ்ரோவின் பல்வேறு மையங்களுடன் சந்திரயான் 3 யின் ஒருங்கிணைப்பு பணியை அவர் கையாண்டார்.
2019 இல் அவர் இந்த பணிக்கு பொறுப்பேற்றார்.
மூன் மிஷன் தொடங்குவதற்கு முன் வீரமுத்துவேல், இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்தார்.
சந்திரயான்-2 திட்டத்தில் வீரமுத்துவேல் முக்கிய பங்கு வகித்தார். நாசாவுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் வசிக்கும் இவர், சென்னை ஐஐடியில் இருந்து பட்டம் பெற்றவர்.
வீரமுத்துவேல் லேண்டரின் நிபுணர். விக்ரம் லேண்டரை வடிவமைப்பதில் அவர் முக்கியப்பங்கு வகித்துள்ளார்.
கல்பனா.கே , துணை திட்ட இயக்குநர், சந்திரயான்-3
சந்திரயான்-3 குழுவிற்கு கல்பனா துணை திட்ட இயக்குநராகப் பணியற்றினார். கொரோனா தொற்றுநோய் காலத்தின் போதும் கூட மன உறுதியுடன் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு இந்த மிஷனின் பணிகளை முன்னெடுத்துச்சென்றார்.
இந்தியாவின் செயற்கைக்கோள் திட்டத்தில் இந்த அர்ப்பணிப்பு மிக்க பொறியாளருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
சந்திரயான்-2 மற்றும் மங்கள்யான் திட்டத்திலும் கல்பனா முக்கியப்பங்கு வகித்தார்.
“பல ஆண்டுகளாக எந்த இலக்கை அடைய முயற்சித்துவந்தோமோ, எந்தத்தருணத்திற்காக காத்திருந்தோமோ, இன்று அதன் துல்லியமான பலனை அடைந்துள்ளோம்,” என்று கல்பனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இது எனக்கும் எனது குழுவிற்கும் மறக்க முடியாத தருணம். நாங்கள் எங்கள் இலக்கை அடைந்துவிட்டோம்,” என்றார் அவர்.
எம் சங்கரன், யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர்
எம்.சங்கரன், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் தலைவராக உள்ளார். இஸ்ரோவுக்காக இந்தியாவின் எல்லா செயற்கைக்கோள்களையும் தயாரிக்கும் பொறுப்பு அவரது குழுவுக்கு உள்ளது.
சந்திரயான்-1, மங்கள்யான் மற்றும் சந்திரயான்-2 செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியிலும் சங்கரனின் முக்கிய பங்களிப்பு உள்ளது.
சந்திரயான்-3 செயற்கைக்கோளின் வெப்பநிலை சமநிலையில் இருப்பதை உறுதி செய்வது சங்கரனின் பொறுப்பாக இருந்தது.
செயற்கைக்கோளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை சோதிப்பது முழு செயல்முறையின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும்.
நிலவின் மேற்பரப்பின் ’மாதிரியை’ உருவாக்க அவர் உதவினார். அதில் லேண்டரின் இறங்கும் திறன் சோதிக்கப்பட்டது.
எஸ் சோம்நாத், இஸ்ரோ தலைவர்
இந்தியாவின் லட்சிய நிலவு பயணத்தின் பின்னணியில் எஸ் சோம்நாத்தின் முக்கிய பங்கு இருக்கிறது.
ககன்யான் மற்றும் சூரிய ஆய்வுத் திட்டம் ஆதித்யா-எல்-1 உள்ளிட்ட இஸ்ரோவின் மற்ற விண்வெளிப் பயணங்களுக்கு வேகம் அளித்த பெருமையும் இவருக்கு உண்டு.
எஸ் சோம்நாத் இஸ்ரோவின் தலைவர் பொறுப்பை ஏற்கும் முன் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார்.
லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் மையம் முக்கியமாக இஸ்ரோவிற்கான ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது.
“சந்திராயன்-3 தன் துல்லியமான சுற்றுப்பாதையை அடைந்து, நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. வாகனம் நன்றாக இருக்கிறது,” என்று சந்திரயான் 3 விண்வெளியில் ஏவப்பட்டபோது சோம்நாத் கூறினார்.
”சந்திரயான் -2 தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். இன்று நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.” என்று புதன்கிழமை சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு எஸ் சோம்நாத் குறிப்பிட்டார்.
”சூரிய ஆய்வுக்காகக் ஆதித்யா எல்-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படக்கூடும்,” என்றார் அவர்.
”சந்திரயான்-3 க்கு அடுத்த 14 நாட்கள் முக்கியமானதாக இருக்கும்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மோகன் குமார், மிஷன் இயக்குநர்
எஸ் மோகன் குமார், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ஒரு மூத்த விஞ்ஞானி. அவர் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.
மோகன் குமார் NVM3-M3 திட்டத்தின் கீழ் ஒன் வெப் இந்தியா 2 செயற்கைக்கோளை வணிக ரீதியாக வெற்றிகரமாக ஏவுவதிலும் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
“எல்எம்3-எம்04, இஸ்ரோவின் கனரக லிப்ட் வாகனம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இஸ்ரோ குடும்பம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதற்கு வாழ்த்துகள்,” என்று மோகன் குமார் கூறினார்.
எஸ் உண்ணிகிருஷ்ணன் நாயர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், இயக்குநர்
எஸ் உண்ணிகிருஷ்ணன் நாயர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராவார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியின் முக்கிய நடவடிக்கைகளுக்கு அவரும் அவரது குழுவும் பொறுப்பேற்றனர்.
லாஞ்ச் வெஹிக்கிள் மாக்-III என்று மறுபெயரிடப்பட்ட, ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (ஜிஎஸ்எல்வி) மாக்-III யும் (புவி ஒத்திசைவு செயற்கைகோள் செலுத்துவாகனம்), விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் தயாரிக்கப்பட்டது.
தகவல் தொடர்பு, வழிகாட்டல், ரிமோட் சென்சிங், வானிலை ஆய்வு மற்றும் பிற கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்ற துறைகளில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இஸ்ரோவுக்கான எல்லா செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை மேற்பார்வையிடும் மையத்தின் தலைவராக 2021 ஜூன் மாதம் அவர் பொறுப்பேற்றார்.
ஏ ராஜராஜன், ராக்கெட் செலுத்து அனுமதி வழங்கும் வாரியத்தின் தலைவர்
ஏ ராஜராஜன், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் இயக்குனர் மற்றும் விஞ்ஞானி ஆவார்.
மனித விண்வெளி பணி திட்டம் – ககன்யான் மற்றும் SSLV இன் மோட்டார் தொடர்பாக அவர் பணிபுரிகிறார்.
ராக்கெட் செலுத்து அனுமதி வழங்கும் அமைப்பு, ராக்கெட் செலுத்தலுக்கு பச்சை கொடி காண்பிக்கிறது.
சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்றினர் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்