இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்குப்பின் உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்று ரசிகர்களும், இந்திய அணியினரும் நம்பி இருந்தநிலையில் அனைத்தும் கானல் நீராகிவிட்டது.
லீக் சுற்றுகளில் தோல்வியே இல்லாமல் தொடர்ந்து 9 வெற்றிகள், அரையிறுதியில் மிகப்பெரிய வெற்றி என்று வெற்றி நடையுடன் வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்திய அணி இப்போது இருக்கும்ஃபார்மில் எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இருப்பதாக இருந்தது. இந்த உலகக் கோப்பையோடு பல மூத்த வீரர்கள் விடைபெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆதலால், நிச்சயமாக கோப்பையை வென்றுகொடுப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், அனைத்தும், இறுதிப்போட்டியில் எதிர்மறையாக நடந்துவிட்டது.
உலகக் கோப்பையை நடத்தும் அணிகள்தான் அந்த கோப்பையை வெல்லும் என்ற டிரண்ட் கடந்த 3 தொடர்களாக இருந்தது. அதை மாற்றி இந்தியாவில் நடத்தப்பட்ட உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன்பட்டத்தை வென்றுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, தங்களை உலக சாம்பியன் என்று நிரூபித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசியின் டி20 உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை என 3 கோப்பைகளையும் வென்று உலகக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செய்து ஆட்சி செய்துள்ளது.
இந்திய அணி லீக் ஆட்டங்களிலும், அரையிறுதியிலும் பெரிதாக தவறு ஏதும் செய்யவில்லை, அல்லது குறைவாக தவறுகள் செய்ததால்தான் வென்றது என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியால் ஏன் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களையும், தவறுகள் குறித்தும் பார்க்கலாம்.
இந்திய அணியின் தோல்விக்கு காரணங்கள் என்ன?
- அஸ்வின் இல்லாதது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியில் அவர் முக்கிய பங்காற்றினார். அதேபோல் இறுதிப்போட்டியிலும் அஸ்வின் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது என்பதால், கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளராகவும், ஆல்ரவுண்டராகவும் அஸ்வின் இருப்பது பலமாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.ஆனால், இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், ஜடேஜா ஆட்டமிழந்தபின், கடைசி வரிசையில் நிலைத்து ஆட எந்த பேட்டரும் இல்லாமல் ஸ்கோரை உயர்த்த முடியாமல் போனது. அது மட்டுமல்லாமல் அஸ்வின் ஒரு விக்கெட் டேக்கர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் பைனலில் விளையாடி இருந்தால் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்திருப்பார் என்பதையும் மறுக்க முடியாது.
- பந்துவீச்சு மோசம்: இறுதிப் போட்டியில் சிராஜ் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் சிராஜ் பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இல்லை. பும்ரா, ஷமி இருவரும் முதல் 10 ஓவர்களை கட்டுப்படுத்திய நிலையில், அதன்பின் பவுண்டரிகளை வழங்கி ஹெட்டுக்கு நம்பிக்கையூட்டியது சிராஜ் பந்துவீச்சுதான். அனைத்து லீக் ஆட்டங்களிலும் சிராஜ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூற முடியாது. சிராஜுக்குப் பதிலாக அஸ்வினையோ அல்லது சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக அஸ்வினையோ பைனலில் அணியில் சேர்த்து மாற்றம் செய்திருக்கலாம்.
- ஸ்லிப்பில் பீல்டர் இல்லை: இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஸ்லிப்பில் பீல்டர்கள் வைக்காதது பெரிய தவறாகும். ஸ்லிப்பில் இரு கேட்சுகள் பிடிக்க முடியாமல் போனது காரணம் அங்கு பீல்டர்கள் இல்லை. பீல்டர்களை வைத்து குல்தீப், ஜடேஜாவை பந்துவீச வைத்திருந்தால், ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டுகளை இழந்திருப்பார்கள்.
- பவுண்டரியே வரவில்லை: இந்திய அணி பேட்டிங்கின்போது ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரைதான் பவுண்டரி, சிக்ஸர்கள் கிடைத்தன. ரோஹித் ஆட்டமிழந்து சென்றபின், பவுண்டரியை பார்ப்பதே கடினமாக இருந்தது. இந்திய அணி சேர்த்த 240 ரன்களில் ரோஹித் சர்மாவின் 4 பவுண்டரிகளை கழித்துப் பார்த்தால் 8 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. பவுண்டரிகள்மூலமே அதிகமாக ஸ்கோர் செய்ய முடியும் ஆனால், ஆடுகளத்தின் தன்மை, ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் பவுண்டரிகளை இந்திய பேட்டர்கள் அடிக்காதது ஸ்கோரை உயர்த்த முடியாதமைக்கு முக்கியக் காரணமாகும்.
- ஸ்ரேயாஸ், கில், சூர்யா ஆட்டமிழப்பு: இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்ரேயாஸ், கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3 பேரும் பெரிதாக ஸ்கோர் செய்தாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துத. 360 டிகிரி வீரர் எனப் புகழப்படும் சூர்யகுமார் யாதவ் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது பரிதாபம். இந்தத் தொடரில் சூர்யகுமார் பெரிதாக ஏதும் செய்யவில்லை.
- பனிப்பொழிவு: இந்திய அணியின் தோல்விக்கு இயற்கை முக்கியக் காரணமாகும். இரவு 7 மணிக்கு மேல் ஆகமதாபாத்தில் பனிப்பொழிவு அதிகமானதால் ஆடுகளத்தின் தன்மை மாறத்தொடங்கியது. பந்து பேட்டரை நோக்கி வேகமாக வரத் தொடங்கியதால் எளிதாக அடித்து ஆட உதவியது. இதனால் இந்தியப் பந்துவீச்சு பெரிதாக எடுபடமுடியாமல் போனது.
- உதிரிகள் அதிகம்: இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 16 உதரிகள் ரன்களை வழங்கிவிட்டது. ஆஸ்திரேலிய அணி 12 உதரிகள் வழங்கிய நிலையில் இ்ந்திய அணி 18 உதரிகளை வழங்கியது. உதரிகள் வழங்கியதைக் குறைத்திருக்கலாம்.
- ஆடுகளத்தின் தன்மை: ஆமதாபாத்தில் இன்று போட்டி நடந்த ஆடுகளம் சற்று வித்தியாசமானது. சமனற்ற வகையில், சற்று காய்ந்தநிலையில் இருந்தது. இதைப் பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்றவுடனே தாமதிக்காமல் சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆடுகளம் தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் சாதகமாக இருந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
- கம்மின்ஸ் கேப்டன்ஷிப்: இந்திய அணியை களத்தில் மட்டுமல்லாமல், களத்துக்கு வெளியேயையும் ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டது. ஒவ்வொரு பேட்டருக்கும் தனித்தனியாகத் திட்டங்கள், பீல்டிங் அமைப்பு, தேவைப்படும் நேரத்தில் பந்துவீச்சு மாற்றம், பந்துவீச்சாளர்களைக் கையாண்டது என கேப்டன்ஷிப்பில் கம்மின்ஸ் பட்டையைக் கிளப்பிவிட்டார்.
- ஆஸ்திரேலியாவின் பீல்டிங், பந்துவீச்சு: ஆஸ்திரேலியாவின் பீல்டிங், பந்துவீச்சு இறுதிப் போட்டியில் அற்புதமாக அமைந்தது. அதிலும் வார்னர், டிராவிஸ் ஹெட்டின் பீல்டிங். ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய ஹெட்டின் கேட்ச், கோலியின் விக்கெட் ஆகியவை ஆட்டத்தின் திருப்புமுனை. முதல் 10ஓவர்கள் மட்டுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தது, ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவுடன் ஆட்டத்தை ஆஸ்திரேலியா கையில் எடுத்துக்கொண்டு 40 ஓவர்களையும் கட்டுப்படுத்தியது.
1983ம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சார்ட்ஸுக்கு இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பிடித்த கேட்ச்தான் திருப்புமுனையாக அமைந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அதுபோல், இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோஹித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான் திருப்புமுனையாகும். இந்த இரு கேட்சுகளும்தான், போட்டியின் முடிவுகளை எதிரணியின் கைகளில் இருந்து பறித்த தருணங்களாகும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்