காதல் திருமணம் செய்த மூன்றே நாளில் இளம் தம்பதி தூத்துக்குடியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை: ஆணவப் படுகொலையா? என போலீசார் விசாரணை.
தூத்துக்குடியில் காதலித்த பெண்ணை பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்து மண வாழ்க்கையைத் துவங்கி 3 நாள் கூட முழுமையடையாத நிலையில் வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் ஜோடியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து தப்பியது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கி உள்ளனர்.
ஒரே சமூகத்தில் திருமணம் செய்தும் தூத்துக்குடியில் நடந்தது ஆணவப் படுகொலையா? சம்பவத்தின் பிண்ணனி என்ன? ஒரே சமுதாயமாக இருந்தாலும் பொருளாதார ஏற்ற தாழ்வே கொலைக்கு காரணமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் மாநகர் பகுதியாக இருக்கக் கூடிய முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசிப்பவர் வசந்தகுமார் இவரது மகன் மாரி செல்வம் (24) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் கார்த்திகாவின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது. மாரி செல்வம் வீடு பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியவர்கள் என்பதால் காதலுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தந்தையின் எதிர்ப்பையும் மீறி கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி விட்டில் இருந்து வெளியேறிய கார்த்திகா மாரி செல்வத்துடன் கோவில்பட்டிக்குச் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வம் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மாரி செல்வம் கார்த்திகா இருவரும் வீட்டில் தனியாக இருந்த நேரத்தை அறிந்து வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் அருவாள் உள்ளிட்டப் பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற சிப்காட் போலீசார் இரண்டு பேரின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தூத்துக்குடி புறநகர் டி.எ.ஸ்.பி சுரேஷ் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வசதியுடன் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவத்தை நேரில் பார்த்த மூதாட்டி கூறியது என்ன?
“நான் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தேன். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் வீட்டின் கதவைத் தட்டி உள்ளே சென்றனர்.
அலறல் சத்தம் கேட்டதும் நான் அருகில் சென்று பார்ப்பதற்குள் அவர்கள் இருவரையும் கொலை செய்து ஆயுதங்களுடன் வெளியே சென்றனர். இந்த சம்பவம் மாலை 6:30 மணிக்கு நடந்தது.
நான் அவர்களது உறவினருக்கு தகவல் கொடுத்தேன்.அவர்கள் ஓராண்டுக்கு முன்பாக தான் இந்த பகுதியில் வசிப்பதற்கு வந்தனர்.
கொலை செய்தது யார் எனக்குத் தெரியவில்லை”, என அந்த பகுதியில் இருந்து மூதாட்டி கூறினார்.
கொலை குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படை
கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பார்வையிட்ட தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் செய்தியாளிடம் கூறும் போது “இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது”, எனத் தெரிவித்தார்
இது குறித்து தூத்துக்குடி புறநகர் டி.எஸ்.பி சுரேஷ் பிபிசி தமிழிடம் கூறும் போது
“இந்த புது தம்பதி கொலை தொடர்பாக 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெண்ணின் தந்தையை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை வழக்கு விசாரணையில் இருப்பதால் இது குறித்துக் கூடுதலாக எதுவும் தற்போது தெரிவிக்க இயலாது”, என கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்