
பட மூலாதாரம், MK STALIN / FACEBOOK
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது?
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தை தேர்வுசெய்வதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்படும் நிலையில், இந்தியா முழுவதுமே அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க – அ.தி.மு.க. தலைமையில் பிரதான கூட்டணிகளும் வேறு சில கட்சிகள் தனித்தும் போட்டியிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது.
தற்போது தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.
இதில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சிக்குப் பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இடம்பெறும்; அதைத் தவிர வேறு மாற்றங்கள் இருக்காது எனக் கூறப்பட்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES
ஸ்டாலின்-ராகுல் (கோப்புப்படம்)
பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை
தற்போதுவரை இந்தக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழ்நாட்டில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடம் என பத்து இட போட்டியிட்ட நிலையில் இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்பியது.
இந்த நம்பிக்கையில்தான் கடந்த ஜனவரி 28ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சு வார்த்தையில் இடங்களை அதிகரிக்க எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்பதை தெரிவித்த தி.மு.க குழுவினர், 7-8 இடங்களையே தர முடியும் என்றும் தொகுதிகளிலும் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறியது. இதற்குப் பிறகு அடுத்தகட்டப் பேச்சு வார்த்தை இதுவரை நடக்கவில்லை.
தி.மு.கவுடன் பேச்சு வார்த்தையை இறுதி செய்து அறிவிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரது வருகை ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரத்தில் பானைச் சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இந்த முறை தனது சின்னத்தில் போட்டியிடவும் கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிடவும் விரும்புகிறது அக்கட்சி. ஆனால், தி.மு.க. தரப்பில் கூடுதல் தொகுதிகளைத் தர மறுப்பதால் பேச்சு வார்த்தையில் பெரிய முன்னேற்றமில்லை.
இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே எதிர்பார்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளில் தாமே போட்டியிட விரும்புகிறது தி.மு.க.

பட மூலாதாரம், GETTY IMAGES
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை
கமல்ஹாசனின் நிலை என்ன?
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாக மட்டும் தெரிவித்தனர். மார்ச் 3ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடக்குமெனக் கூறப்பட்டிருக்கிறது.
ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த முறை, மக்களவையில் ஒரு இடமும் மாநிலங்களவையில் ஒரு இடமும் அளிக்கப்பட்டன. ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். மாநிலங்களவைத் தொகுதி வைகோவுக்கு அளிக்கப்பட்டது. இந்த முறை ம.தி.மு.கவுக்கு ஒரு மக்களவை இடத்தை மட்டுமே அளிக்க தி.மு.க. முன்வந்திருக்கிறது. விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளுமே காங்கிரசின் தொகுதிகள் என்பதால் இழுபறி நீடிக்கிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை.
கடைசி கட்டத் தகவல்களின்படி, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் காங்கிரசுடனான கூட்டணி இறுதிசெய்யப்படும் என்றும் அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்திற்கான இடங்களும் முடிவுசெய்து அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. காங்கிரசிற்கு வழங்கப்படும் இடங்களில் இருந்து ம.நீ.மவுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் வகையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.
சி.பி.ஐ.யைப் பொறுத்தவரை மக்களவை இடம் ஒன்றும் மாநிலங்களவை இடம் ஒன்றும் ஒதுக்கி, கூட்டணி இறுதிசெய்யப்படலாம். சி.பி.எம்மிற்கு மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளே திரும்ப வழங்கப்படலாம். அல்லது மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் அளிக்கப்படலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரியவருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்ட அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது தனித்தனியாகப் போட்டியிடுவதால் ரொம்பவும் திண்டாடிப் போயிருப்பது அந்தக் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள்தான்.

பட மூலாதாரம், GETTY IMAGES
பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் அதிமுக தீவிரம் காட்டுகிறது.
அதிமுக, பாஜக என்ன செய்கிறது?
அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில்தான் தீவிரம் காட்டுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தீவிரமாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. சில நாட்களில் அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனுமே பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. ஆனால், அக்கட்சியின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இரு கட்சிகளுமே இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.
“அடுத்த திங்கட்கிழமையை ஒட்டி அறிவிப்புகள் வெளியாகலாம். பெரிய கட்சிகள் எங்களுடன்தான் கூட்டணி அமைப்பார்கள்” என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர்.
பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போது அந்த மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. இடம்பெறாவிட்டால், அக்கட்சிகள் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அறிவித்திருக்கின்றன.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் இந்தக் கூட்டணியில் ஒரு இடத்தை எதிர்பார்க்கிறார். பிரதமர் நரேந்தர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போது அவருடன் மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பெரிய கட்சிகளை கூட்டணிக் கட்சிகளாக மேடை ஏற்ற நினைத்தது பா.ஜ.க. ஆனால், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மட்டுமே கூட்டணிக் கட்சிகளாக பிரதமரைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், FACEBOOK
டிடிவி தினகரன்
கூட்டணிகள் எப்போது இறுதியாகும்?
இதற்கிடையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடனும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற ஆர்வம் காட்டினாலும், அதே போன்ற ஆர்வம், பா.ஜ.க. தரப்பிலிருந்து வெளிப்படவில்லை.
ஆனால், கூட்டணிகள் எல்லாம் இறுதிசெய்யப்பட இன்னும் காலம் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
“இதையெல்லாம் தாமதம் என்றே சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம்வரை கூட்டணியை இறுதிசெய்யலாம். முன்பே கூட்டணிகளை அறிவித்து, இடங்களையும் அறிவிப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள கட்சிக்காரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள், வெளியேறுவார்கள். அதையெல்லாம் பெரிய கட்சிகள் தவிர்க்க நினைக்கும். ஆகவே இன்னும் பல நாட்கள் கழித்தே கூட்டணிகள் இறுதியாகும்” என்கிறார் ஷ்யாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்