ஜவான்: ஐந்தே படங்களில் உச்சம் தொட்ட இயக்குநர் – யார் இந்த அட்லீ?

ஜவான்: ஐந்தே படங்களில் உச்சம் தொட்ட இயக்குநர் - யார் இந்த அட்லீ?

இயக்குநர் அட்லீ

பட மூலாதாரம், Atlee/Twitter

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளிவந்துள்ள ஜவான் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக வளர்ந்தது எப்படி?

ஷாருக் கான் நடித்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம், வசூலில் பெரும் சாதனை படைக்க ஆரம்பித்திருக்கிறது.

தற்போது வரை உலகம் முழுவதும் சேர்த்து 520 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. பாலிவுட்டில் கடந்த ஆண்டுவரை, பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில், துணிந்து களமிறங்கிய ஷாருக்கானுக்கு பெரும் வெற்றியைத் தந்திருக்கிறது ஜவான்.

ஜவானை இயக்கிய அட்லீ இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஜவான் இதுவரை 520 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறும் அட்லீயை நேரில் பார்த்தால், இவரா இந்த சாதனையாளர் என்று தோன்றும். ஒடிசலான தேகமும் சாதாரணமான உடல்மொழியையும் கொண்டிருக்கும் அட்லீ, இதுவரை இயக்கிய எந்தப் படத்தையும் தோல்வியெனச் சொல்ல முடியாது.

அட்லீயின் உண்மையான பெயர் அருண் குமார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 1986 செப்டம்பர் 21ஆம் தேதி பிறந்தார். சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பி.எஸ்சி முடித்த அருண்குமார், இயக்குநர் சங்கரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ஷங்கர் இயக்கிய நண்பன், எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.

இயக்குநர் அட்லீ

பட மூலாதாரம், Atlee/Instagram

படக்குறிப்பு,

ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் ஒரு இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

இதற்குப் பிறகு, சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தப் படம் பெரும் கவனத்தைப் பெற்றது.

இதற்குப் பிறகு, ராஜா ராணி படத்தின் கதையை வைத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்களை அணுகிய நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அந்தப் படத்தை இயக்க முன்வந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ பேனரில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது.

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி, அந்த ஆண்டின் குறிப்பிடத் தகுந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

சுமார் 25 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ராஜா ராணி, கிட்டத்தட்ட 84 கோடி ரூபாயை வசூலைக் குவித்தது. விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வங்க மொழியிலும்கூட இப்படம் ரீ -மேக் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றதால், முதல் படத்திலேயே அட்லீயின் க்ராஃப் உச்சத்திற்குச் சென்றது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளிவந்திருக்கும் ஜவான் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

பட மூலாதாரம், Atlee/Twitter

படக்குறிப்பு,

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளிவந்திருக்கும் ஜவான் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இரண்டாவது படத்தில் தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. கலைப்புலி தாணு தயாரிக்க, விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன் ஆகியோரை வைத்து ‘தெறி’ என்ற பெயரில் அட்லீ இயக்கிய இந்தப் படம், விமர்சன ரீதியாக பாராட்டுதல்களைப் பெறவில்லை. ஆனால், நல்ல வசூலை ஈட்டியது.

இதற்குப் பிறகு, ‘பைரவா’ என்ற படத்தில் நடித்த விஜய், அதற்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் அட்லீக்கே அளித்தார். அந்தப் படம் மெர்சல். விஜய்யோடு காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு ஆகியோர் நடித்த இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

சுமார் 250 கோடி ரூபாயை வசூலித்த இந்தப் படம், தமிழ் சினிமாவில் அந்த காலகட்டத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான கிராண்ட் ரெக்ஸிலும் இந்தப் படம் திரையிடப்பட்டது.

இயக்குநர் அட்லீ

பட மூலாதாரம், Atlee/Instagram

அட்லீயின் அடுத்த படமும் விஜய் நடித்ததுதான். படம் பிகில். இந்தப் படம் முதல் நாளே 58 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. முதல் நான்கு நாட்களில் 75 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தின் வசூல், 300 கோடியைத் தாண்டியதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்தது. விஜய் நடித்து வசூலில் 300 கோடியைத் தாண்டிய முதல் படமாகவும் இந்தப் படம் அமைந்தது.

பிகில் படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அட்லீ தனது அடுத்த படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

முடிவில், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாயின. அட்லீயை பொறுத்தவரை, அவர் இயக்கும் ஐந்தாவது படம்தான் இது. இருந்தபோதும், தயாரிப்பு நிறுவனம் துணிந்து 300 கோடி ரூபாயை முதலீடு செய்தது.

ஜவான் படம் வெளிவந்த பிறகு, கலவையான விமர்சனங்களே வெளிவந்தன என்ற போதும் இந்தப் படம் வசூலில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது.

நான்கு நாட்கள் முடிவில் இந்தப் படம் 287 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. விரைவிலேயே படத்தின் மொத்த வசூல் 300 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சம்  தொட்ட இயக்குநர்

பட மூலாதாரம், Atlee/Twitter

படக்குறிப்பு,

ஒரு நாள் வசூலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜவான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

அட்லீயை பொறுத்தவரை மொத்தம் ஐந்தே படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால், இந்த ஐந்து படங்களிலேயே அவரது படங்கள் குறித்த ஒரு பார்வை உருவாகிவிட்டது.

இவரது படங்களைப் பொருத்தவரை, மிகச் சிறந்த தொழில்நுடபக் கலைஞர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது இவரது பாணி. இவருடைய முதல் இரண்டு படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார். அடுத்த இரண்டு படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். ஜவானுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, முதல் இரண்டு படங்களுக்கு ஜார்ஜ் சி. வில்லியம்சையும் அடுத்த மூன்று படங்களுக்கு ஜி.கே. விஷ்ணுவையும் பயன்படுத்தி வருகிறார். படத்தொகுப்பைப் பொறுத்தவரை இவரது எல்லாப் படங்களையும் ரூபனே தொகுத்திருக்கிறார்.

இப்படி ஒரே தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்துவதால், அட்லீ நினைப்பது பெரும்பாலும் திரையில் வந்துவிடுகிறது.

இது தவிர, அட்லீயின் முக்கியமான பலமாக இருப்பவர் எஸ். ரமணகிரி வாசன். விஜய் டிவியில் வெளியான கனா காணும் காலங்கள், ஆஃபீஸ், மதுரை ஆகிய தொலைக்காட்சி தொடர்களை எழுதிய ரமணகிரி வாசனை தெறி படத்திலிருந்து தன்னோடு இணைத்துக் கொண்டார் அட்லீ.

உச்சம்  தொட்ட இயக்குநர்

பட மூலாதாரம், Atlee/Instagram

அந்தப் படத்தில் வசனங்களை மட்டும் அட்லீயுடன் சேர்ந்து எழுதிய அவர், அடுத்த படங்களான மெர்சல், பிகில் ஆகிய படங்களின் திரைக்கதையிலும் பங்களித்தார். ஜவான் படத்தின் திரைக்கதையிலும் ரமணகிரிவாசன் பங்களிப்பு செய்திருக்கிறார்.

ஆனால், அட்லீயின் திரைப்படங்கள் குறித்து வேறு சில விமர்சனங்கள் உண்டு. அதாவது, அட்லீயின் திரைப்படங்கள் அனைத்துமே வேறு பல திரைப்படங்களின் சாயல்களைக் கொண்டவை எனக் கூறப்படுவதுண்டு.

குறிப்பாக ராஜா ராணி திரைப்படத்தில் தமிழில் வெளிவந்த மௌன ராகம், கன்னடத்தில் வெளிவந்த மிலனா படங்களின் சாயல் இருந்தது. அதேபோல, தெறி படத்தில் 1990இல் விஜயகாந்த் நடித்து வெளிவந்த சத்ரியன் படத்தின் சாயல் இருந்ததாக ரசிகர்கள் கருதினர்.

மெர்சல் படத்தைப் பொறுத்தவரை, தந்தையைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான கதையே இடம் பெற்றிருந்தது.

பிகில் படத்தில் வரும் பல காட்சிகளை, ஷாருக் கான் நடித்து வெளியான சக்தே இந்தியாவின் காட்சிகளுடன் ரசிகர்கள் ஒப்பிட்டனர்.

தற்போது வெளியாகியிருக்கும் ஜவான் திரைப்படமும் இதுபோன்ற விமர்சனத்திற்கே உள்ளாகியிருக்கிறது. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல திரைப்படங்களின் சாயல்கள் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

குறிப்பாக ஒரு ரசிகர், வேறு 23 படங்களின் சாயல் ஜவான் படத்தில் இருப்பதாகக் கூறியது இணைய தளங்களில் வைரலானது.

அட்லீயின் சினிமா எப்படிப்பட்டது?

உச்சம்  தொட்ட இயக்குநர்

பட மூலாதாரம், Atlee/Instagram

இவருடைய படங்கள் அதீதமான சினிமாதன்மைகளைக் கொண்டவை. இயல்பு வாழ்க்கையில் காண முடியாத பிரம்மாண்டங்கள் இவருடைய படங்களில் உண்டு. அந்த வகையில் பார்த்தால், இவருடைய குருநாதர் ஷங்கரின் பாணியை இவரும் பின்பற்றுவதாகச் சொல்லலாம்.

“அட்லீ ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநர். பழைய படங்களை உல்டா செய்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதை 2K கிட்ஸ் ரசிக்கும்படி செய்வதுதான் அவருடைய திறமை. அதில்தான் அவருடைய வெற்றி இருக்கிறது.

அதுதவிர, அட்லீ தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ளார். விமர்சன ரீதியாக அவரைப் பற்றி ஆயிரம் சொல்லலாம். ஆனால், வர்த்தகரீதியான சினிமாவில் வசூல் சாதனைதான் முக்கியம்.

ஒரு இயக்குநர் வர்த்தகரீதியாக வெற்றி பெறக்கூடிய சினிமாவை தருகிறாரா என்பதுதான் முக்கியம். அந்த வகையில், அட்லீ மிக முக்கியமானவர்,” என்கிறார் இயக்குநரும் விமர்சகருமான கேபிள் சங்கர்.

சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்தே எஸ்.எஸ். வாசனில் துவங்கி, தமிழ்த் திரையுலகிலிருந்து இந்திக்குச் சென்ற பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். 80களில் பாலச்சந்தர் சில திரைப்படங்களை இயக்கினர்.

அதற்குப் பிறகு, ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், மணிரத்னம் ஆகியோர் தமிழிலும் இந்தியிலுமாக இருமொழிப் படங்களை இயக்கியுள்ளனர். சமீப காலங்களில் பிரபுதேவா சில படங்களை இயக்கியிருக்கிறார். லாரன்ஸ் ஒரு படத்தை இயக்கினார். இந்த வரிசையில், அட்லீயின் இடம் என்ன என்பது விரைவில் தெளிவாகிவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *