- எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
-
“இது கோடிக்கு ஒருமுறை” மட்டும் நடக்கும் கர்ப்பம். ஆமாம் இது மனித உடலின் அதிசயங்களுள் ஒன்றுதான்.
இரட்டை கருப்பை கொண்ட அமெரிக்கப் பெண், மொத்தமாக 20 மணிநேர பிரசவத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முறை குழந்தை பெற்றெடுத்தார்.
அலபாமா மாநிலத்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் 32 வயதான கெல்சீ ஹேட்சர், கடந்த செவ்வாயன்று ஒரு மகளையும், புதன்கிழமை இரண்டாவது மகளையும் பெற்றெடுத்தார்.
ஹாட்சர் தனது “அதிசய குழந்தைகளின்” வருகையை சமூக ஊடகங்கள் மூலம் உலகுக்கு அறிவித்தார். இரு குழந்தைகளையும் காப்பாற்றி மருத்துவர்களின் பணி “நம்ப முடியாதது” என்று பாராட்டினார்.
இரு பெண் குழந்தைகளும், இரட்டையராக இருந்தாலும், தனித்தனி பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள். இப்படி இரண்டு கருப்பைகளில் பிறப்பவர்களை சகோதர இரட்டையர்கள் என்று கூறுகிறார்கள்.
17 வயதில், ஹேச்சருக்கு இரட்டை கருப்பை இருப்பது கண்டறியப்பட்டது. இது 0.3% பெண்களை பாதிக்கும் ஒரு அரிய குறைபாடு என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
“பத்து லட்சத்தில் ஒருவர்” என்ற அளவில் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இப்படி இரண்டு கருப்பைகள் இருந்தாலும், ஒரே நேரத்தில் இரு கருப்பைகளிலும் கருவுறுவதற்கு வாய்ப்புகள் இன்னும் குறைவு. பல கோடிகளில் ஒருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் இரண்டு கருப்பைகளிலும் கரு உண்டாகும்.
ஹேச்சரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ரோக்ஸி மற்றும் ரெபல் என்ற இரு குழந்தைகளும் சுமார் 10 மணி நேர இடைவெளியில் பிறந்தனர்.
இது ஏன் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது?
பெண்களுக்கு உள்ள இந்த குறைபாடு மிகவும் அரிதானவை.
2019 ஆம் ஆண்டு வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண் ஒரு கருப்பை மூலம், குறைமாத குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு இன்னொரு கருப்பை மூலமாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றனர்.
ஹேட்சர் இதற்கு முன்பு மூன்று முறையில் ஆரோக்கியமான வகையில் கருவுற்றிருந்தார். வழக்கமான அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் இரண்டாவது கருப்பையில் ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் வரை, இந்த முறை ஒரு கருப்பையில் மட்டுமே கரு இருக்கும் என்று நினைத்திருந்தார்.
“எனக்கு மூச்சே நின்றுவிட்டது. நம்ப முடியவில்லை,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
எனவே அவர் தனது அசாதாரண கர்ப்ப காலத்தை இன்ஸ்டாகிராமில் ஆவணப்படுத்தத் தொடங்கினார்.
38வது வாரத்தில், “என்ன ஆச்சு!? எப்படி இவ்வளவு தூரம் வந்தோம்?!” என்று பதிவிட்டிருந்தார்.
வழக்கமாக இரட்டைக் குழந்தைகள் ஒரே கருவறையில் உருவாகும், ஒரு கரு முட்டை பிளவுபடுவதன் மூலமாகவோ, அல்லது இரு கரு முட்டைகள் மூலமாகவோ இரட்டைக் குழந்தைகள் உருவாகலாம். ஆனால் இரண்டு கருப்பைகளில் இரண்டு குழந்தைகள் உருவாவது அரிதினும் அரிது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
“வெவ்வேறு கருவறைகளில்” குழந்தைகள்
அலபாமா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஹேட்ச்சரின் கர்ப்பத்தை ஆரோக்கியமானது என்று கூறியது.
ஒவ்வொரு குழந்தையும் “வளருவதற்கு கூடுதல் இடத்தை” பெற்றிருந்ததாக குறிப்பிட்டார் பேராசிரியர் ரிச்சர்ட் டேவிஸ்.
ஏனென்றால், வழக்கமான இரட்டைக் குழந்தைகளைக் காட்டிலும், இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக சொந்த கருப்பை இருந்தது என்றார் அவர்..
ஹேட்சருக்கு 39 வாரங்களில் பிரசவ வலி வந்தது. அதிசயமான குழந்தைப் பிறப்பு என்பதால் மருத்துவமனையில் இரு மடங்கு கண்காணிப்பும், பணியாளர்களின் ஈடுபாடும் தேவைப்பட்டன.
டிசம்பர் 19 அன்று உள்ளூர் நேரப்படி இரவு 7.45 மணியளவில் முதல் குழந்தை பிறந்தபோது “அறையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்” என்கிறார் பிரசவம் பார்த்த மருத்துவர்.
இரண்டாவது குழந்தை 10 மணி நேரத்திற்குப் பிறகு மறுநாள் காலை 6.10 மணியளவில் சிசேரியன் மூலம் பிறந்தது.
இந்தக் குழந்தைகளை சகோதர இரட்டையர்கள் என்று கருதலாம். இது ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு கருவில் இருந்து உருவாகும் போது பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.
“ஒரே வயிற்றில் இரண்டு குழந்தைகள், அவர்கள் வெவ்வேறு அறைகளைக் கொண்டிருந்தனர்” என்று டேவிஸ் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்