
மாசிலாமணியின் சகோதரி துர்கா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்தில் முதல்கட்டமாக 645 ஹெக்டேர் பரப்பளவில் சிப்காட் பூங்கா தொடங்கப்பட்டது. தற்போது இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2,300 ஹெக்டேர் பரப்பில் சிப்காட் பூங்கா உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, சிப்காட் 3 தொழில் பூங்கா அமைக்க செய்யார் வட்டத்தில் மேல்மா, குரும்பூர் காட்டுக்குடிசை உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதை எதிர்த்தும் சிப்காட் தேவையில்லை என்ற கோரிக்கையை முன்வைத்தும் 11 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் நூறு நாட்களுக்கும் மேலாக மேல் கூட்டுச்சாலை பகுதியில் பந்தல் அமைத்துப் போராட்டம் நடத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விவசாயிகள் ஏழு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆறு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார்.
சிப்காட் விரிவாக்கம், அதைத்தொடர்ந்த மக்களின் போராட்டம் ஆகியவற்றில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய அப்பகுதிக்கு நேரடியாகச் சென்றோம்.

வந்தவாசியில் இருந்து மேல்மா கிராமத்திற்கு சனிக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்றோம். கிராமத்தின் உள்ளே நுழையும்போதே போலீசார் குவிக்கப்பட்டு, அங்கு 20க்கும் மேற்பட்ட தடுப்புகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
மேல்மா கிராமத்தைச் சேர்ந்த 80 வயதைக் கடந்த விவசாயி வரதன் பேசத் தொடங்கினார்.
‘எங்களுக்கு எதற்கு சிப்காட்?’
“எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. நான் சிறு வயது முதலே விவசாயத்தில் தான் ஈடுபட்டு வந்துள்ளேன். எங்கள் கிராமத்திற்கு சிப்காட் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எங்களுக்கு எதற்கு சிப்காட்?
எங்களுக்குத் தெரிந்த வேலை விவசாயம் மட்டும்தான். அதைத்தான் உயிருள்ளவரை செய்ய முடியும். ஊருக்கே சோறு போடும் எங்களுக்கு இந்த நிலைமை,” என கூறினார்.

சிப்காட்டிற்காக அரசாங்கம் விவசாய நிலங்களைக் கைப்பற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் 100 நாட்களைக் கடந்தும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர். மேல்மா சிப்காட் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, காவல் துறையினர் தடையை மீறி செய்யார் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 2ஆம் தேதி பேரணியாகச் சென்றனர்.
அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது, இரண்டு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் கைது செய்யப்பட்டு பின்னர் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், போராட்டம் நடத்த அமைக்கப்பட்டிருந்த பந்தலை காவல்துறையினர் அகற்றினர். தொடர்ந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல்துறை வாகனங்களைச் சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது.

விவசாயி வரதன்
இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் மீது இரு தினங்களுக்கு முன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திபாடி கிராமத்தில் வசிக்கும் அருள் ஆறுமுகம் (45), விவசாயிகளான செய்யார் வட்டம் தேத்துறை கிராமத்தில் வசிக்கும் பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தில் வசிக்கும் தேவன் (45), மணிப்புரம் கிராமத்தில் வசிக்கும் சோழன் (32), மேல்மா கிராமத்தில் வசிக்கும் திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தில் வசிக்கும் மாசிலாமணி (45), குரும்பூர் கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ் (38) ஆகிய 7 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நவம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டார்.
மக்கள், விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து ஆறு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
“இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் எங்களுக்காகப் போராடிய அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் சிப்காட் எங்களுக்கு இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே தேவையில்லை,” எனக் கூறி முடித்தார் வரதன்.
விவசாயி தானே என்ற அலட்சியமா?

”விவசாயிகள் தானே என்ற அலட்சியம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது” என்று பேசத் தொடங்கினார், நர்மா பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணியின் சகோதரி துர்கா.
“கடந்த 120 நாட்களுக்கு மேலாக நாங்கள் மேல்மா கூட்டுச்சாலை அருகே பந்தல் அமைத்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். அப்போதெல்லாம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எங்கு சென்றார்கள்? எங்கள் நிலத்தை விட்டு விடுங்கள், எங்களுக்கு விவசாயம்தான் முக்கியம் என்று கூறினோம். ஆனால் அவர்கள் செவி சாய்க்கவில்லை,” எனக் கூறினார் துர்கா.
நர்மா பள்ளம் மட்டுமல்லாமல் மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களும் நல்ல வளமான பூமி எனத் தெரிவித்த துர்கா, மூன்று போகமும் விளையக்கூடிய நிலத்தைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினார்.
“அரசாங்கம் மக்களுக்குத்தானே நன்மை செய்ய வேண்டும். ஆனால், எங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுகிறார்கள். எங்களுக்கு உதவிய அருள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
எங்கள் போராட்டம் தொடரும். இப்போதுகூட எங்கள் கிராம வீடுகள் அனைத்திலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். சிப்காட் அமைத்தே தீர வேண்டும் என்று எண்ணினால் எங்கள் அனைவரையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அதில் சிப்காட் அமைக்கட்டும்,” என்று தன் கருத்தை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தினார்.

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு கட்டப்பட்டுள்ள கருப்பு கொடி.
விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக, தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் சட்டமன்ற உறுப்பினரை நவ. 17 அன்று நேரில் சந்தித்து, அவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே கோரிக்கையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடமும் வைத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும், “இவர்கள் அளித்த மனுவில் வரும் காலங்களில் இதுபோன்ற அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம் என்றும் தெரிவித்து, தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுக்குமாறு கோரிக்கை வைத்ததனர்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட மூலாதாரம், TNDIPR
ஆனால், தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மறுத்துள்ளார், காட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன்.
”தற்போது அரசாங்கத்திற்கு எதிராகவும் திட்டங்களுக்கு எதிராகவும் செயல்பட மாட்டோம் என்று கூறி ஒப்புக்கொண்டதாக, எங்கள் கிராம மக்கள் உத்தரவாதம் தந்துள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாகக் கூறுகின்றார்கள்.
எங்கள் ஊரையே அப்புறப்படுத்துவோம் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாக நாங்கள் எப்படிச் செயல்படுவோம்,” எனக் கேள்வி எழுப்பினார்.

சீனிவாசன்
‘எதற்கும் அஞ்ச மாட்டோம்’
அதே பகுதியைச் சேர்ந்த உமா கூறுகையில், “விவசாய நிலம்தான் எங்களுக்கு குலதெய்வம். எங்கள் சாமியை விலைக்குக் கேட்டால் எப்படித் தர முடியும்?
அதிலும் நன்கு விளையக்கூடிய பகுதி இது. ஏற்கெனவே எங்கள் பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவில் சிப்காட் உள்ளது. அதுவே போதும். மற்றொரு சிப்காட் எங்களுக்குத் தேவையில்லை. எங்களை மிரட்டியும் வற்புறுத்தியும் பார்க்கின்றார்கள். நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்,” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பிட்ட வயது வரைதான் தொழிற்சாலையில் வேலை. பிறகு வெளியே அனுப்பிவிடுவார்கள். ஆனால், விவசாயம் அப்படி அல்ல. எங்கள் உயிருள்ளவரை இந்தப் பணியை வாழ்வியலோடு இணைந்து செய்வோம்,” என்று கூறினார்.

உமா
தொடர்ந்து மேல்மா கூட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்த தயாளன் கூறும்போது, “நாங்கள் மேல்மா கூட்டுச்சாலை அருகில் இந்த இடத்தில் தான் பந்தல் அமைத்து காந்திய வழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
தற்பொழுது நாங்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த இடத்தை அந்தச் சுவடே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். அண்ணா, ‘மக்களிடம் போ, மக்களுக்காகப் பணி செய், மக்களுக்கானதே அரசு’ என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அவர் வழியில் வந்த முதல்வரும் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகின்றார். ஆனால் எங்களுக்குத்தான் இந்த நிலைமை. எங்களுக்கு நீதி கிடைக்கும். கிடைக்க வேண்டும் அதுவரையில் நாங்கள் காந்திய வழியில் போராடுவோம்,” என்று கூறி முடித்தார்.
கூட்டணிக் கட்சிகள் என்ன சொல்கின்றன?
விவசாயிகள் மீது போடப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்திற்கு அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து திமுக தரப்பில் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. ஆனால், திமுகவின் கூட்டணி கட்சிகள் என்ன சொல்கின்றன?

பிபிசி தமிழிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, “விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என நான் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தேன். சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை விவசாய நிலத்தில் அமைக்கக்கூடாது. அதற்கென மக்களுக்குப் பயன்படாத நிலங்களில் சிப்காட் அமைக்கலாம்.
ஒருவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை. அவர் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்,” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்தான் முதல்வர் ஸ்டாலின். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மக்கள், விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டதால் தான் கடந்த அதிமுக ஆட்சி தூக்கியெறியப்பட்டது. அதுவொரு படிப்பினை. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது,” எனவும் கூறினார்.
மேலும், “திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் விரோதச் செயல்பாடுகளை, திட்டங்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்காகத்தான் இந்தக் கூட்டணி. நல்ல விஷயஙகளை பாராட்டுகிறோம், மக்கள் விரோத செயல்களை எதிர்க்கிறோம்,” என்றார்.
பட மூலாதாரம், Vanni Arasu / Twitter
வன்னி அரசு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், “விவசாயிகள் போராட்டம் என்று வருகிறபோது அதை அரசு சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டும். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது.
குண்டர் தடுப்புச் சட்டத்தை சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்காக வைத்திருப்பதாக அரசுகள் கூறுகின்றன. அதையே நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விவசாயிகள் மீது போடக்கூடாது எனக் கூறினோம். அதன் அடிப்படையில் அரசு திரும்பப் பெற்றுள்ளது,” எனத் தெரிவித்தார்.
இம்மாதிரியான விவசாயிகள் பிரச்னைகளில் திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால், மென்போக்கை கடைபிடிக்க வேண்டிய அழுத்தம் உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “செய்யார் விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சென்றபோது எங்கள் அமைப்பை வேண்டாம் எனக் கூறிவிட்டனர். வேறு எந்த அமைப்பையும் வேண்டாம் என அங்கிருந்த போராட்ட அமைப்பினர் தெரிவித்துவிட்டனர். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்வது? வழக்கு போட்டது தவறு எனச் சொல்லிவிட்டோம். அதற்கு மேல் என்ன சொல்வது?” என்றார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருப்பதாகத் தெரிவித்த முத்தரசன், இந்த விவகாரம் குறித்த தகவல்களை முழுமையாக அறிந்திருக்கவில்லை எனக் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
