பட மூலாதாரம், RSS
நேபாளத்தில் பல்வேறு குழுக்கள் இந்து தேசத்தை மீட்டெடுப்பதற்காக பிரச்சாரம் செய்கின்றன.
நேபாளத்தை ‘இந்து ராஷ்டிரா’ (இந்து நாடு) ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை, அடுத்த வாரம் நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முன்பை விட தீவிரமாக எழுப்பப்படலாம் என்று நேபாள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுக்குழு கூட்டம் நெருங்கும் நேரத்தில், ‘இந்து நாடு’ என அறிவிப்பதற்கான பரப்புரை செய்யும் சில தலைவர்கள், தனி அறிக்கையை வெளியிடும் திட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
நேபாளி காங்கிரசுக்குள் ‘இந்து நாடு’ பற்றிய கருத்து அதிகரித்து வருவதாக அரசியல் நிபுணர்களும், காங்கிரசை நன்கு அறிந்தவர்களும் கூறுகின்றனர்.
அவர்களது பார்வையில், இதற்கு ஒரு பெரிய காரணம், சில தலைவர்கள் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தலாம் என்று நம்புவது தான்.
நேபாளி காங்கிரஸில் ‘இந்து நாடு’ கோரிக்கையின்தேவை அதிகரித்து வருவதை, இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் தாக்கம் நேபாள நாட்டில் அதிகரித்து வருவதற்கான அறிகுறியாகவும் சிலர் பார்க்கிறார்கள்.
பட மூலாதாரம், LOKESH DHAKAL/FB
சங்கர் பண்டாரி மற்றும் லக்ஷ்மன் கிமிரே
நேபாள காங்கிரஸின் ‘இந்து நாடு’ பரப்புரை
நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாறியதிலிருந்து, நேபாள காங்கிரஸின் சில தலைவர்கள் இந்து நாடாக மீண்டும் மாற்றுவதற்கான பரப்புரையைச் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் கும் பகதூர் கட்கா தான் இறக்கும் வரை அத்தகைய கோரிக்கையை முன்னெடுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியின் மத்திய உறுப்பினரும், எம்.பி.யுமான சங்கர் பண்டாரி இப்போது இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
பண்டாரி, ‘சனாதன் ஹிந்து ராஷ்டிர நேபாள ஸ்தாபனா மஹாபியன்’ அமைப்பின் அழைப்பாளராக இருந்து, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சித் தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளர் லோகேஷ் தாக்கல் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டது. இது தவிர சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.” என்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் நேபாள காங்கிரஸின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாகவே நேபாள காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் திட்டமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சனாதன் ஹிந்து ராஷ்டிர நேபாளத்தின் ஸ்தாபனப் பிரச்சாரமே பிரதான நிகழ்ச்சி நிரலாகும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, நேபாள காங்கிரஸின் பல செல்வாக்கு மிக்க தலைவர்களும் பலமுறை இந்து நாடு கோரிக்கைக்கு தங்கள் ஆதரவையும் கூட்டாட்சி முறைக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்பும் பண்டாரி தலைமையில் இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டு பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பட மூலாதாரம், LOKESH DHAKAL/FB
சனாதன் ஹிந்து ராஷ்டிர நேபாள ஸ்தாபனா அபியானின் சமீபத்திய கூட்டத்தில் பங்கேற்ற மக்கள்
இந்து நாடு கோரிக்கைக்கு ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
காங்கிரஸின் முன்னாள் மத்திய உறுப்பினர் லக்ஷ்மன் பிரசாத் கிமிரே, நேபாள காங்கிரஸின் தலைமைக் கொறடாவாக இருந்து வருகிறார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான விவாதத்திலும் அவர் பங்கேற்றார். பரப்புரையின் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் உள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தது ஒரு ‘மோசமான தவறு’ என்று அவர் கூறுகிறார்.
2006-07 மக்கள் இயக்கம் நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக மாற்றிய பிறகு மீண்டும் பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.
“அப்போது நடந்தது ஒரு தவறு மட்டுமல்ல, அது குறித்த விவாதமும் நடக்கவில்லை” என்றார்.
மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி ஆட்சி முறை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் பலமுறை தான் கூறியதாக அவர் கூறுகிறார்.
நேபாளத்தின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்து ராஷ்டிரா பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
“தற்போதைய அரசியலமைப்பு மதச்சார்பின்மை பற்றி பேசுகிறது, ஆனால் அது சனாதன தர்மத்தை பாதுகாப்பது பற்றியும் பேசுகிறது. இது ஒரு முரண்பாட்டை உருவாக்கியுள்ளது. இதை மனதில் வைத்து, மக்களின் உணர்வுகளை மதித்து, காங்கிரஸ் இந்து நாட்டை உருவாக்க வேண்டும்” என்று கிமிரே கூறினார்.
நேபாள காங்கிரஸின் இந்து ராஷ்டிரா பிரச்சாரத்தில் இந்தியாவின் ஆளும் பாஜகவின் செல்வாக்கு குறித்து கேட்டபோது, ”இந்தியாவின் செல்வாக்கு அல்லது பக்க விளைவு ஒருபுறம் இருக்கட்டும். பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளால் இந்த நாடு ஆளப்பட வேண்டும் என்பது என் கருத்து. மரியாதை மற்றும் மத சுதந்திரம் கொண்ட நித்திய இந்து தேசம் இது இருக்க வேண்டும்” என்றார்.
நேபாளத்தை இந்து நாடாக மாற்ற, முதலில் கட்சியை அந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், NEPALI CONGRESS/FB
நேபாளி காங்கிரஸ் அலுவலகம்
மதச்சார்பின்மை ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
நேபாள சமூகத்தில் இந்து தேசத்திற்கான கோரிக்கை இருப்பதால், அது தனது கட்சியிலும் பிரதிபலிப்பது இயற்கையானது என்று காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான பிரதீப் பவுடல் கூறுகிறார்.
இருப்பினும், ஒரு ‘தலைமைக் கட்சி’ என்ற வகையில் அரசியலமைப்பை செயல்படுத்துவது காங்கிரஸின் பொறுப்பு என்றும் பாடெல் கூறுகிறார்.
“அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது மதத்தைப் பற்றி பேசாமல் மௌனமாக இருந்திருந்தால், அது வேறுவிதமாக இருந்திருக்கும், ஆனால் இப்போது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுவிட்டதால், அதைச் செயல்படுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
மேலும், “அரசியலமைப்பின் எந்தவொரு பெரிய பிரிவையும் அல்லது கருத்தையும் மாற்றுவது இதற்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. அப்படி செய்தால் அரசியலமைப்பை செயல்படுத்துவது மேலும் சிக்கலானதாக மாறும்.” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையில் வெளியிடப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதும் எங்கள் பொறுப்பு. அதே நேரத்தில் அரசியலமைப்பை உடனடியாக மாற்றுவது என்பது இயற்கையானது அல்ல.”
இந்து நாடாக மாற்றக் கோரும் பண்டாரி தலைமையிலான குழு, கூட்டாட்சி ஆட்சி முறை குறித்தும் தங்களுக்கு உள்ள கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
இருப்பினும், பாடெல் குழுவிலும் இந்த வகையான விவாதம் நடந்து வருகிறது. ஆனால் அரசியலமைப்பின் விதிகளை மாற்றும் திசையில் கட்சி செல்லாது என்று பாடெல் நம்புகிறார்.
பட மூலாதாரம், NEPALI CONGRESS/FB
நேபாள காங்கிரஸுக்குள் மதச் சார்பின்மைக்கு எதிர்ப்பு
சமீப காலமாக காங்கிரசுக்குள் மதச்சார்பின்மைக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்களது கூற்றுப்படி, இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலாவது: இழந்த பொது மக்கள் ஆதரவை மீட்க மதத்தைப் பயன்படுத்தும் காங்கிரஸின் நடவடிக்கை
இரண்டாவது: காங்கிரஸுக்குள் இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவது.
அரசியல் அறிவியல் பேராசிரியரான கிருஷ்ணா கானல் கூறும்போது, “இப்போது காங்கிரஸ் வீழ்ச்சியடைந்து வருகிறது. மத அரசியல் மூலம் வாக்காளர்களைக் கவர முடியுமா என்று அரசியல்வாதிகள் யோசிக்கலாம். மற்றொரு விஷயம் இந்தியாவின் தாக்கமும் உள்ளது. இந்தியாவில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. நேபாள அரசியலில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நேபாளத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு செல்வாக்கு உள்ளது” என்கிறார்.

“இந்து ராஷ்டிராவுக்கு பெருகும் ஆதரவு”
நேபாளத்தின் ஜனநாயக இயக்கம் மற்றும் காங்கிரஸின் வரலாறு குறித்து பேராசிரியர் ராஜேஷ் கௌதம் ஒரு தொடரை எழுதியுள்ளார்.
காங்கிரஸிற்குள் ‘இந்து நாடு’ போன்ற கோரிக்கைகள் அதன் தொடக்க காலத்தில் இருந்தே சில நேரங்களில் அதிகரித்தும் சில சமயங்களில் குறைந்தும் வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும், இந்த ஆண்டு காங்கிரஸின் ஒரு பிரிவினர் எழுப்பிய ‘இந்து நாடு’ கோரிக்கை, கட்சிக்குள் முன்னர் எழுப்பப்பட்ட மற்ற கோரிக்கைகள் மற்றும் சர்ச்சைகளிலிருந்து வேறுபட்டது என்று அவர் கூறுகிறார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “காங்கிரஸுக்குள் இந்து தேசியவாதத்துக்கு எதிரான குரல் எப்போதும் வலுவாக இருந்ததில்லை. இப்போது காங்கிரஸைத் தவிர, மற்ற கட்சிகளும் இந்து நாட்டை உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றன, காங்கிரஸிலும் இந்த கருத்து அதிகரித்து வருகிறது” என்கிறார்.
அவரைப் பொறுத்தவரை, சமீபத்திய ஆண்டுகளில், காங்கிரஸுக்குள் ‘இந்து ராஷ்டிரா’வின் மௌன ஆதரவாளர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர்.
கௌதம் மேலும் கூறும்போது, “வெளியில் இருந்து பார்த்தால், ஒரே ஒரு குழுதான் ‘இந்து ராஷ்டிரா’ கோரிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிகிறது. உண்மையில் கட்சியில் உள்ள பலரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். நேபாள காங்கிரஸ் அந்தக் கண்ணோட்டத்தில் படிப்படியாக முன்னேறி வருவதாகத் தெரிகிறது. சரிந்து வரும் பொது மக்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்க்க, காங்கிரஸும் இந்து நாடு என்ற யுக்தியை கையில் எடுக்கலாம்” என்றார்.

நேபாள காங்கிரஸ் ஆதரவாளர்கள்
‘சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்’
அரசியலில் மதத்தைக் கலப்பது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் பேராசிரியர் கானல்.
முன்னதாக நேபாளத்தில், காங்கிரஸ் மத அரசியலைச் செய்யவில்லை. மாறாக நேபாள மன்னர் தன் பக்க நியாயத்தை நிரூபிக்க ‘இந்து நாடு’ கருத்தியலை உருவாக்கினார் என்று அவர் வாதிடுகிறார்.
நேபாள அரசியல் பாஜகவை சார்ந்து இருக்கும் என்கிறார் கனால். இந்து நாடு கோரிக்கை நாட்டில் அமைதியின்மையை பரப்பி வேறு வகையான மோதலுக்கு வழிவகுக்கும் என்று அவர் நினைக்கிறார்.
“மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், அதை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சிப்பது, சமூகத்தில் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என பேராசிரியர் ராஜேஷ் கௌதமும் ஒப்புக்கொள்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
