பழனி அருகே கிராம மக்கள் விளக்கேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த குழிகள் மனித இனத்துக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வடிவங்கள் என்பதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்து உறுதி செய்து இருக்கிறார்.
இவற்றின் சிறப்பு என்ன? 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதை இனத்தவர் பழனியில் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?
கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் அருகே உள்ளது குரும்பப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பவளக்கொடி அம்மன் கோவிலின் கல்வெட்டுகளை படித்து கோவிலின் வரலாற்றை கூறும்படி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பழனியில் வசிக்கும் தொல்லியல் ஆய்வாளரான நாராயணமூர்த்தியை கடந்த 2017 ஆம் ஆண்டு அழைத்து இருக்கின்றனர்.
இதனையடுத்து அங்கு சென்ற அவர் கோவிலைச் சுற்றியுள்ளப் பகுதியில் ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது அருகில் வயல் வெளியில் பாறையின் மீது இருந்த குழிகளில் என்னவென்று கிராம வாசிகளிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற மக்களால் பயன்படுத்தப்பட்ட இடம் என கூறி இருக்கின்றனர்.
அதன் அருகே சென்று தூய்மை செய்து அந்த குழிகளை பார்த்த போதுதான் அவை பழங்காலக் கல்லாங்குழிகள் என தெரியவந்தது. பாறையின் மீது இருப்பது கல்லாங்குழிகள் அவற்றின் வரலாறு பற்றி மக்களுக்கு கூறிவிட்டு பாதுகாக்கும் படி கூறியிருக்கிறார்.
கல்லாங்குழியை வேலி அமைத்து பாதுகாத்த கிராம மக்கள்
7 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, உலகம் முழுவதும் பழங்குடி மக்கள் ,கல்லாங்குழிகள் பற்றி ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளரான ரொமைன் சைமனஸ் என்பவரை அழைத்து வந்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கல்லாங்குழிகள் பற்றி ஆய்வு செய்ய சென்றபோது வயல்வெளியின் அருகே கல்லாங்குழிகள் இருந்தப் பகுதியை மக்கள் வேலி அமைத்து மண் போட்டு மூடி பாதுகாத்து வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த வேலிகளை அகற்றி மண்ணைத் தோண்டி கல்லாங்குழிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த கல்லாங்குழிகள் ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் (தற்போது வாழும் மனிதர்களை ஹோமோ சேப்பியன்ஸ் என்றும் நமக்கு முன்பு முதன் முதலில் நிமிர்ந்து நடந்த தொடங்கிய மனித இனத்தை ஹோமோ எரக்டஸ் என கூறுவார்கள்) உருவாக்கப்பட்டது என தெரிந்தது.
கல்லாங்குழிகளை தகவல் பறிமாற்ற ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் உருவாக்கியதாக கூறுகிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் ரொமன் சைமனஸ்.
“இந்தப் பாறைகளில் கிடைத்த வடிவங்களில் எந்த ஒரு மிருகங்களின் உருவமும் இல்லை. ஒரு பெரிய வட்டத்தை சுற்றி சிறு சிறு வட்ட வடிவிலான அமைப்பை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.”
“கல்லாங்குழிகளை தொடர்ச்சியாக உருவாக்கிய ஹோமோ எரக்டஸ் இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கதை வழியாகக் கடத்த முயற்சி செய்து இருக்கிறார்கள் என்பதை நாம் இதன் உணர முடிகிறது.”
“தென்னிந்தியாவில் இது போல கல்லாங்குழிகள் கோயில்களின் அருகிலேயே கிடைக்கின்றன. தற்போது கூட மாரியம்மன் கோயிலுக்கு அருகே தான் இந்த கல்லாங்குழிகள் கிடைத்துள்ளது. இவை, 2லட்சம் ஆண்டுகள் முதல் 4 லட்சம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது”, என்றார் சைமனஸ்.
கல்லாங்குழிகளின் வயதை அறிந்தது எப்படி?
தொடர்ந்து பேசிய அவர் “கல்லாங்குழிகளின் வயதை நேரடியாக கணக்கிட இயலாது. அதன் அருகே இருந்து கிடைக்கக்கூடிய மனித எலும்புகள், எரிந்த நிலையில் உள்ள விறகு கட்டை, சாம்பல்களை ஆய்வு செய்து அது உருவாக்கப்பட்ட காலத்தை கண்டறியலாம்.
அந்த முறையில்தான் தென்ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட கல்லாங்குழிகளுக்கு 4 லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகள் வயது என கணக்கிடப்பட்டது. பழனியில் கிடைத்த கல்லாங்குழிகள் கிட்டத்தட்ட அதே வடிவத்திலும், அளவிலும் ஒத்துப் போய் இருக்கிறது. எனவே, இதனை ஒப்பீட்டு முறையில் 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் என நாம் கணக்கிடுகிறோம்”, என்றார்
பழனியில் கிடைத்தது உலகின் மூன்றாவது பழமையான கல்லாங்குழிகள் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி.
“பழனி குரும்பப்பட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்ட கல்லாங்குழிகளில் 191குழிகள் இருந்தன. இதில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான குழிகள் உள்ளது. சிறிய குழிகள் 4 செ.மீ விட்டமும் 1 செ.மீ ஆழம், பெரிய குழிகள் 15 செ.மீ விட்டமும் 13 செ.மீ ஆழமும் உடையதாக இருந்தன”, என கூறுகிறார் நாராயணமூர்த்தி.
குழிகள் அமைப்பு சொல்வது என்ன?
தொடர்ந்து பேசிய அவர் கூறும் போது ” இந்த குழிகள் சமமற்ற முறையில் உள்ளன. ஒரு பெரிய குழியைச் சுற்றி பல சிறிய குழிகள் உள்ளன. அதே போல் பெரிய குழிகள் வரிசையில் தொடர்ச்சியான குழிகளாக பாறையின் சரிவில் ஒழுங்கற்று இருக்கின்றன. இந்த வடிவங்கள் கீழ்த்தொல் பழங்காலத்தைச் (lower Paleolithic) சேர்ந்தவையாக இருக்கும்” என்கிறார்.
மேலும் கூறிய அவர் “இதற்கு முன்பாக மத்தியபிரதேச மாநிலம் பீம் பேட்காவில் 7 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவே உலகின் மிக பழமையான பல்லாங்குழிகள். அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லாங்குழிகள் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது.
“தமிழ்நாட்டில் திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பல மாவட்டங்களில் கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் புதைகுழிகள் அருகில் கண்டறியப்பட்டவையே அது முன்னோர்கள் நினைவாக உருவாக்கப்பட்டு இருக்கலாம்.”
“அதேபோல் பழனியில் எடுக்கப்பட்ட கல்லாங்குழிகள் உருவாக்கப்பட்ட பாறை ஆர்க்கியன் புரட்டரோசோயிக் காலத்தைச் சேர்ந்தது, இவையும் முன்னோர்களின் நினைவாக உருவாக்கப்பட்டு இருக்கலாம்”, என்கிறார்.
ஆற்றங்கரை நாகரிக மனிதன் உருவாக்கிய வடிவமே அந்த கல்லாங்குழியாக இருக்கும் என புவியியல் ஆய்வாளர் மணிகண்ட பாரத் கூறுகிறார்.
“பழனி அருகே கல்லாங்குழிகள் எடுக்கப்பட்ட பாறையின் புகைப்படத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் அனுப்பினார்கள். அதனை (static graphic Mapping) புவியியல் அமைப்பை ஆய்வு செய்தால் முன்பு அந்த பகுதியில் இருக்கும் புவியியல் அமைப்பின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்.”
“இந்த கல்லாங்குழிகள் பாறையை ஜியோமார்பாலஜி( geomorphology), ஸ்டாட்டிக் கிராபிக் மேப்பிங் முறையில் குரும்பப்பட்டி பகுதியில் காவிரியின் கிளை ஆறுகளாக இரண்டு ஆறுகள் குறுக்கே பாய்ந்தது அழிந்து போய் இருப்பது தெரிகிறது. மேலும், அந்தப் பாறைகள் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என கண்டறிய முடிந்தது.”
தொடர்ந்து பேசிய அவர் “அந்தக் குழிகள் எரிமலை வெடிப்பினால் உருவாகவில்லை. ஏனென்றால் அந்தப் பகுதியைச் சுற்றியும் பழனி, கொடைக்கானல் மலைகள் மட்டுமே உள்ளன. எனவே இந்த வட்ட வடிவிலான அமைப்பு கற்களை கொண்டு ஆற்றங்கரையில் வாழ்ந்த மனிதர்கள்தான் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நம்மால் உறுதி செய்ய முடிகிறது”, என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்