மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராமர் கோயில் திறப்பு விழா மூலம் பா.ஜ.க தொடங்கிவிட்டது என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறது. இத்தகைய சூழலில், 2019-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட, அதேசமயம் நாடளவில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்த குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (CAA) லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக நடைமுறைக்கு கொண்டுவர பா.ஜ.க மும்முரம் காட்டிவருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `சி.ஏ.ஏ இந்த நாட்டின் சட்டம். யாரும் இதைத் தடுக்க முடியாது. நிச்சயம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்’ என சமீபகாலமாக தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அதற்கேற்றவாறு, சி.ஏ.ஏ-வுக்கான விதிமுறைகளை வகுக்கும் பணியில் பா.ஜ.க அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்த நிலையில், லோக் சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, சி.ஏ.ஏ விதிமுறைகள் அறிவிக்கப்படும் என அரசு மூத்த அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த அதிகாரி பேசுகையில், “விரைவில் சி.ஏ.ஏ விதிமுறைகளை வெளியிடவிருக்கிறோம். அவை வெளியிடப்பட்டதும், சட்டம் செயல்படுத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியும். சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாகிவிட்டதால், அதனைச் செயல்படுத்துவதற்கு விதிமுறைகள் அவசியம். எனவே, லோக் சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, சி.ஏ.ஏ விதிமுறைகள் அறிவிக்கப்படும். விதிமுறைகள் தயாராக இருக்கின்றன. ஆன்லைன் போர்ட்டலும் நடைமுறையில் இருக்கிறது. இதில் குறிப்பாக, முழு செயல்முறையும் ஆன்லைனில் இருக்கும்.
விண்ணப்பதாரர்கள், பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டை அறிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்த ஆவணமும் கேட்கப்படாது. அதோடு, ஏற்கெனவே குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.
ஒருவேளை, லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com