கர்நாடகாவை சேர்ந்த தம்பதி திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த கணவர் கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து, அந்த நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ தொடங்கினார். பின்னர், கள்ளக்காதலனுடன் இந்த பெண் வாழ தொடங்கினார்.
இந்நிலையில், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 (டிவி சட்டம்) பிரிவு 12ன் கீழ் தனது வாழ்க்கைக்கான அடிப்படை செலவுகளுக்கான பராமரிப்பு தொகையை கணவரிடம் இருந்து பெற்று தர வேண்டும் என அந்த பெண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவர் சார்பில் மாதந்தோறும் அந்த பெண்ணுக்கு பராமரிப்பு செலவாக ரூ.1,500, வீட்டு வாடகைக்கு ரூ.1,500 மற்றும் இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கணவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதாவது பராமரிப்பு தொகையாக மனைவிக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டாம் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதையடுத்து, செசன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனைவியான அந்த பெண்ணின் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ராஜேந்திர பதாமிகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ”மனுதாரரான மனைவி தனது கணவருக்கு உண்மையாக இல்லை. அவர் பக்கத்து வீட்டுக்காரருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் உள்ளார். தற்போது அவருடனே வசித்து வருகிறார் என்பது ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. மனுதாரர் இன்னொருடன் வசிக்கும்போது அவர் பராமரிப்பு தொகை கோருவதற்கான கேள்வி என்பது எழுவே எழாது.
மேலும், திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காகவும், மனைவி என்பதற்காகவுமே ஒருவர் பராமரிப்பு தொகை பெற தகுதியுடைவராக முடியாது” எனக்கூறிய நீதிபதி, செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்தார். அதோடு பராமரிப்பு தொகை கோரிய அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தார். இதுமட்டுமின்றி மனைவி தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் உறவினரின் மகளுடன் தகாத உறவில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிமன்றம், தன்னை நேர்மையானவர் என காட்டுவதற்காக கணவர் மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com