`சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானத்தின்போதே எழுந்த சர்ச்சை:
சமீபத்தில்தான் `சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானத்தின்போதே மத்திய அரசு வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய விவரங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின. குறிப்பாக, கட்டடத்தில் மக்களவை, மாநிலங்களவைக் கூட்டம் நடக்கும் `மீட்டிங் ஹாலின்’ இருக்கைகள் ஏற்கெனவே உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்ததைவிட இரு மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, தற்போது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543-ஆகவும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245-ஆகவும் இருக்கின்றன. அதற்கேற்ற வகையில்தான் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் இரு அவைகளின் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கைகள், மாநிலங்களவையில் 384 இருக்கைகள் என மொத்தம் 1272 இருக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன.


இதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள் அப்போதே, `நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பா.ஜ.க மறுசீரமைப்பு செய்யவிருக்கிறது’ என சந்தேகங்களை முன்வைத்தன. குறிப்பாக, தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை பின்னடைவைச் சந்திக்கும் என்றும், பா.ஜ.க ஆதிக்கமுள்ள உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், தென் மாநிலத் தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலையில், கார்னேஜி அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.


`தலைக்கு மேல் தொங்கும் கத்தி’ – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசின் இந்த தொகுதி வரையறை விவகாரத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின்மீது… தென்னிந்தியாவின்மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்” என கண்டனம் தெரிவித்திருப்பதோடு, “மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும்” எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com