ஜம்மு -காஷ்மீர்: இந்திய ராணுவ நாய் உயிர்த் தியாகம் செய்து ராணுவ வீரர்களை காத்தது எப்படி?

ஜம்மு -காஷ்மீர்: இந்திய ராணுவ நாய் உயிர்த் தியாகம் செய்து ராணுவ வீரர்களை காத்தது எப்படி?

இந்திய ராணுவம்  மோப்ப நாய் படைப்பிரிவு

பட மூலாதாரம், DEFENSE PRO

படக்குறிப்பு,

ராணுவ நாய்களுக்கான 21வது படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு வயது பெண் லேப்ரடோர் ‘கென்ட்’

இந்திய ராணுவத்தின் நாய்களுக்கான 21வது படைப்பிரிவைச் சேர்ந்தது லாப்ரடோர் வகை பெண் நாய் ‘கென்ட்’. கடந்த சில நாட்களாக இந்த நாய் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட நர்லா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (செப்டம்பர்12) துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது படை வீரர்களைக் காப்பாற்ற முற்பட்டபோது தீவிரவாதிகள் சுட்டதில் கென்ட் உயிரிழந்தது.

முன்னதாக, நர்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து, நாய்கள் படைப்பிரிவைச் சேர்ந்த கென்ட்டின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் நாய் இறந்தது.

இதுகுறித்து ஜம்முவை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான லெப்டினன்ட் கர்னல் சுனில் பக்ட்வால் கூறும்போது, “ரஜோரி மாவட்டத்தில் ‘ஆபரேஷன் சுஜாலிகலா’ எனும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையில் நாய்களுக்கான 21வது படைப்பிரிவைச் சேர்ந்த கென்ட் என்னும் மோப்பநாயும் ஈடுபடுத்தப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “அப்போது தப்பியோடிய தீவிரவாதிகளைத் துரத்திப் பிடிக்க முற்பட்டபோது கடுமையான துப்பாக்கிச் சூட்டிற்கு அது இலக்கானது.

இருப்பினும், தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து ராணுவ வீரர்களைப் பாதுகாக்க முற்பட்டு, இந்திய ராணுவத்தின் சிறந்த மரபின்படி கென்ட் தனது உயிரைத் தியாகம் செய்துள்ள,” என்று சுனில் பக்ட்வால கூறினார்.

இதனிடையே, ‘‘ராஜேரி மாவட்டம், நர்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை இரண்டு தீவிராவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார்.

இவர்களைத் தவிர, இந்த சம்பவத்தின்போது, சிறப்பு காவல் அதிகாரி ஒருவரும், மூன்று பாதுகாப்பு அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்’ என்று ஜம்மு சரக கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் முகேஷ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம்  மோப்ப நாய் படைப்பிரிவு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையான நாய் கென்ட்டின் இறுதிச் சடங்கில் ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

கென்ட்டின் இறுதிச் சடங்கு

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையான நாய் கென்ட்டின் இறுதிச் சடங்கில் ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். கண்ணீர் மல்க அவர்கள் கென்ட்டிற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

நர்லா பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த வேட்டையில் அவர்களுக்கு உதவ, 21வது படைப்பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களும் களமிறக்கப்பட்டன.

இதனிடையே, தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குறித்து, ஒயிட் நைட் படைப்பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “தீவிரவாதிகளுக்கு எதிரான “ஆபரேஷன் சுஜாலிகலா” நடவடிக்கையின்போது தனது உயிரை தியாகம் செய்ய ராணுவ வீரர் ரைஃபிள்மேன் ரவியின் வீரமரணத்துக்கு ஒயிட் நைட் படைப்பிரிவு மரியாதை செலுத்துகிறது. தேசப்பாதுகாப்பில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்றும் நினைவுகூரப்படும்,” என அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் முக்கியப் படைப்பிரிவுகளில் ஒன்றான ஒயிட் நைட் படைப்பிரிவு, ஜம்மு – காஷ்மீரின் நக்ரோட்டாவில தளமாகக் கொண்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கை

பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கடந்த 2016 அக்டோபர் 23ஆம் தேதி பிறந்த, லாப்ரடோர் இனத்தைச் சேர்ந்த நாயான கென்ட், 2018 மே 23இல் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் மோப்ப நாய்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட கென்ட், 2022 டிசம்பர் 30ஆம் தேதி முதல் துப்பறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட தேடுதல் வேட்டைகளை கென்ட் மேற்கொண்டிருந்தது.

கடந்த ஜனவரி 27இல், கென்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டது என்று ஜம்முவில் உள்ள ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு தேடுதல் வேட்டையை, ராணுவ வீரருடன் சேர்ந்து கென்ட் மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி, திருட்டு தொடர்பான ஒரு வழக்கைத் தீர்ப்பதற்காக கென்ட் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்திய ராணுவம்  மோப்ப நாய் படைப்பிரிவு

பட மூலாதாரம், MOHIT KANDHARI

படக்குறிப்பு,

கென்ட்டை போல, ஜம்மு -காஷ்மீரில் கடந்த ஆண்டும் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது நாய்கள் உயிர் தியாகம் செய்துள்ளன.

வீரம் மற்றும் தியாகம்

தனது பணியின்போது கடமை தவறாமல் உயிர்த் தியாகம் செய்துள்ள கென்ட்டின் துணிச்சலை சமூக ஊடகங்களில் பலர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

கென்ட்டை போல, ஜம்மு -காஷ்மீரில் கடந்த ஆண்டும் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது நாய்கள் உயிர் தியாகம் செய்துள்ளன.

அவற்றில் குறிப்பாக, ராணுவத்தின் நாய்களுக்கான 26வது படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு வயதான ஆக்ஸல் எனும் நாய், தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையின்போது, அவர்களால் சரமாரியாக சுடப்பட்டதில் உயிரிழந்தது.

ராணுவத்தில் மிகவும் இளம் வயது நாய்களில் ஒன்றாக ஆக்ஸல் திகழ்ந்தது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பட்டன் பகுதியில், ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் 2022 ஜூலை 30ஆம் தேதி இந்நாய் களமிறக்கப்பட்டது.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கருதப்பட்ட வீட்டைத் துல்லியமாக அடையாளம் காண வேண்டிய அவசியம் பாதுகாப்புப் படையிருக்கு இருந்தது.

அதையடுத்து தனது பயிற்சியாளரின் உத்தரவுப்படி, குறிப்பிட்ட வீட்டிற்குள் ஆக்ஸல் நுழைந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பெல்ஜிய மாலினோயிஸ் இனத்தைச் சேர்ந்த ஆக்ஸல், போதைப்பொருள், வெடிகுண்டு மற்றும் விஷவாயுவை கண்டறிதல், வழக்கமான தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தது.

இதற்கு முன்பும் இறந்துள்ள நாய்கள்

இந்திய ராணுவம்  மோப்ப நாய் படைப்பிரிவு

பட மூலாதாரம், DEFENSE PRO

படக்குறிப்பு,

கடந்த 2022 அக்டோபர் 9இல் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தின்போது, ஜூம் என்ற இரண்டு வயது நாய் உயிர் தியாகம் செய்தது.

ஆக்ஸலை போலவே, 2022 அக்டோபர் 9இல் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தின்போது, ஜூம் என்ற இரண்டு வயது நாய் உயிர் தியாகம் செய்தது.

நாய்களுக்கான படைப்பிரிவில் மிகவும் இளம் வயது நாய்களில் ஒன்றாக ஜூம் இருந்தது.

ஜம்மு -காஷ்மீரின் அனத்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது குண்டு பாய்ந்ததில் இந்த நாய் உயிரிழந்தது.

ஜம்முவில் வசித்து வரும் முன்னாள் நாய் பயிற்சியாளர் ஒருவர் கூறும்போது, “ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கடமையாற்றும் பயிற்சி பெற்ற நாய்கள், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது உயிர் தியாகம் செய்வது கடந்த முப்பது ஆண்டுகளாக நிகழும் சம்பவமாக உள்ளது,” என்கிறார்.

“தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய, ராணுவத்தின் படைப்பிரிவைச் சேர்ந்த நாய்கள் அனுப்பப்படுகின்றன,” என்றும் அவர் கூறுகிறார்.

“தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படும் நாய்களின் உடலில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் தற்செயலாக நுழைய பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் தீவிரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததும், குரைக்காமல் இருக்கவும் அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது,” எனவும் முன்னாள் பயிற்சியாளர் விளக்குகிறார்.

சிறப்பு விருதுகள்

இந்திய ராணுவம்  மோப்ப நாய் படைப்பிரிவு

பட மூலாதாரம், DEFENSE PRO

படக்குறிப்பு,

இந்திய ராணுவத்தில் வீர செயல்கள் புரிந்ததற்காக நாய்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காணும்போது, அவர்கள் தாக்கினால், பதிலுக்கு நாய்களும் அவர்களைத் தாக்கும். இத்தகைய சூழலை நாய்கள் படைப்பிரிவு அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்கவும் செய்வார்கள்.

வெடிகுண்டு கண்டறிதல், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளுதல் என ஜம்மு -காஷ்மீரில் மோப்ப நாய்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நாய்களின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில், இந்திய ராணுவத்தின் உயரதிகாரிகள், நாய்களின் படைப்பிரிவுகளுக்கு அவ்வபோது புகழுரைகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றனர்.

இந்திய ராணுவத்தில் வீர செயல்கள் புரிந்ததற்காக நாய்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

பல்வேறு ராணுவ நடவடிக்கைகளின்போது சிறப்பாகச் செயல்படும் நாய்களுக்கு, ராணுவ தலைமைப் பணியாளர் மற்றும் துணைத் தலைமைப் பணியாளரின் பாராட்டு பட்டயம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்திய ராணுவத்தின் நாய்கள் படைப்பிரிவைச் சேர்ந்த ஆக்ஸல் எனும் இரண்டு வயது நாய், கடந்த 2022 ஜூலை 30ஆம் தேதி, தேடுதல் வேட்டையின்போது உயிரிழந்தது.

தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உயிர் தியாகம் செய்த ஆக்ஸலுக்கு, சுதந்திர தினத்தன்று வீரதீரத்துக்கான சிறப்பு விருதை அளித்து இந்திய அரசு கௌரவித்தது.

இந்திய ராணுவ பிரிவில் நாய்கள்

இந்திய ராணுவம்  மோப்ப நாய் படைப்பிரிவு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

இந்திய ராணுவத்தில் நாடு முழுவதும் 27க்கும் மேற்பட்ட நாய்களுக்கான படைப் பிரிவுகள் உள்ளன.

இந்திய ராணுவத்தின் நாய்களுக்கான படைப் பிரிவில் பல்வேறு இன நாய்கள் உள்ளன.

லாப்ரடோர், ஜெர்மன் ஷெப்பர்ட், பெல்ஜியன் மாலினோயிஸ் மற்றும் கிரேட் மவுன்டன் சுவிஸ் இன நாய்கள் இதில் அடங்கும். முதோல் ஹவுண்டு இன நாயும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

காவல் மற்றும் ரோந்து பணி, ஐஇடி உள்ளிட்ட வெடிபொருட்களை மோப்பம் பிடித்தல், கண்ணிவெடிகளைக் கண்டறிதல், போதைப்பொருட்கள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை மோப்பம் பிடித்தல், இலக்குகளைத் தாக்குதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய ராணுவத்தில் உள்ள நாய்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கவும், வழிகாட்டவும் பயிற்சியாளர் ஒருவர் இருப்பார்.

மீரட்டில் உள்ள ரீமவுண்ட் மற்றும் கால்நடை மருத்துவப் படை மையம் மற்றும் கல்லூரியில் இவற்றுக்கான முக்கிய பயிற்சி தொடங்குகிறது.

ஒன்பது மாதங்களுக்கு மேலாகவும், பிறகு மூன்று மாதங்களுக்கும் இவற்றுக்கு தரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்திய ராணுவம்  மோப்ப நாய் படைப்பிரிவு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

மீரட்டில் உள்ள ரீமவுண்ட், கால்நடை மருத்துவப் படை மையம் மற்றும் கல்லூரியில் நாய்களுக்கான முக்கியப் பயிற்சி தொடங்குகிறது.

இந்த நாய்களின் சுறுசுறுப்பு மற்றும் திறமையின் அடிப்படையில் சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை ராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

இவை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க சிறப்பு ஊட்டசத்து உள்ள உணவுகள் இவற்றுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்திய ராணுவத்தில் நாடு முழுவதும் 27க்கும் மேற்பட்ட நாய்களுக்கான படைப் பிரிவுகள் உள்ளன.

ஒரு படைப்பிரிவில் சுமார் 24 நாய்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தப் படைப் பிரிவுகளில் உள்ள சில நாய்கள் மீரட்டில் உள்ள மையத்தில் பிறந்தவை. சில வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டு படையில் சேர்க்கப்படுபவை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *