
பட மூலாதாரம், Getty Images
வருமான வரித்துறை தங்களது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் வருமான வரித்துறை 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி இளைஞர் காங்கிரசின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலான பணத்தை முடக்கிவிட்டு மீதமுள்ள பணத்தை உபயோகப்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த வரம்புடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சியின் கணக்குகளில் உள்ள நிதியின் அளவு மிகவும் குறைவு என்றும், எனவே உபயோகிப்பதற்கு எந்த நிதியும் மீதமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி, ‘‘தனக்கு முன்பாக யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சட்டம் பார்ப்பதில்லை, விதிமீறல் நடந்ததா இல்லையா என்பதை மட்டும்தான் சட்டம் பார்க்கிறது,’’ என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. மக்கானின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு வருமான வரித்துறையிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. பதில் வரும்போது இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கானின் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், INCINDIA@X
காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான்
வெள்ளிக்கிழமை காலை அஜய் மக்கான் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது” என்று கூறியிருந்தார்.
அடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸின் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அஜய் மக்கான் கூறினார். மேலும், “காங்கிரஸ் கணக்குகள் மட்டும் முடக்கப்படவில்லை, நாட்டின் ஜனநாயகமும் முடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒரு செய்தி,” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “பயப்படாதீர்கள் மோதி, காங்கிரஸ் என்பது பண பலத்தை அல்ல, மக்கள் பலத்தைச் சார்ந்துள்ளது. சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, இப்போதும் தலைவணங்க மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் முழுமூச்சுடன் போராடுவார்கள்,” என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AjayMakenX
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமூக ஊடகங்களில், “அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பாஜக வசூலித்த பணம் தேர்தலில் பயன்படுத்தப்படும், ஆனால் கிரவுட் ஃபண்டிங் மூலம் நாங்கள் வசூலித்த பணம் முடக்கப்படும். இதனால்தான் எதிர்காலத்தில் நாட்டில் தேர்தலே நடக்காது என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்து இரண்டு மணிநேரம் கழித்து, இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடைபெற்ற விசாரணை குறித்த கூடுதல் தகவல்களை அஜய் மக்கான் தெரிவித்தார். வருமான வரித்துறையும், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் காங்கிரஸின் மனுவை விசாரித்து, குறிப்பிட்ட வரம்பு வரை வங்கிக் கணக்கில் பணத்தை முடக்கிவிட்டு மீதித் தொகையை எடுக்க அனுமதி அளித்துள்ளது என்றார்.
“ரூபாய் 115 கோடி வங்கியில் இருப்பதை உறுதி செய்யுமாறு எங்களிடம் கூறப்பட்டுள்ளது. இந்த வரம்புக்கு மேல் எந்தத் தொகையையும் கட்சி பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது 115 கோடி வரை முடக்கப்படும் என்று அர்த்தம். இந்தத் தொகை நமது வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள தொகையைவிட மிக அதிகம்,” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் அஜய் மக்கான், காங்கிரஸின் வங்கிக் கணக்கில் சுமார் 25 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது என்று கூறியிருந்தார்.
பாஜக கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்கியதோடு மட்டுமல்லாது, 210 கோடி ரூபாயை அபாரதமாகச் செலுத்துமாறும் வருமான வரித்துறை தெரிவித்தது என்று அஜய் மக்கான் கூறியிருந்தார். “தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. அதற்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார் மக்கான்.
மேலும், “இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அரசாங்கம் என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறது? நம் நாட்டில் ஒரு கட்சி ஆட்சி அமையும் என்ற செய்தியா அல்லது மற்ற கட்சிகளுக்கு இந்தியாவில் நீடிக்க உரிமை இல்லை என்ற செய்தியா?” என்று கேள்வியெழுப்பினார் மக்கான்.
இந்தக் கட்டுரையை எழுதும் வரை பாஜகவோ அல்லது எந்த அரசு அமைச்சரோ இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. ஆனால், பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தொகை முக்கியமில்லை. என்ன விதிமீறல் நடந்தது, எந்த சட்டம் மீறப்பட்டுள்ளது. இதுதான் முக்கியம்,” என்று கூறியுள்ளார்.
மேலும், “பணக்காரரா அல்லது ஏழையா என்று சட்டம் பார்ப்பதில்லை, விதிமீறல் நடந்ததா இல்லையா என்பதைத்தான் சட்டம் பார்க்கும்” என்று கோலி கூறினார்.
வியாழன் அன்று, உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதித்தது. அவை அரசமைப்பிற்கு எதிரானது மற்றும் தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பிரிவு 19 (1) (A) ஆகியவற்றை மீறுவதாகும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியால், அதை அளித்தவர்களுக்கு வேறு ஏதேனும் முறையில் உதவி செய்யும் போக்கு ஊக்குவிக்கப்படும் என்று கூறியது. கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் பத்திரங்களால் மட்டுமே முடியாது என்றும், இதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன என்றும் அந்த அமர்வு கூறியது.
‘சாமானியர்கள் அளித்த பணம்’

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக மேலும் பேசிய அஜய் மக்கான், “நேற்று முன்தினம் (14ஆம் தேதி) கட்சியினர் வழங்கிய காசோலைகள் வங்கிக் கணக்குகளில் பணமில்லாமல் திரும்பிவிட்டன என எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் விசாரித்தபோது நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று கூறினார்.
இதனால் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவோ, பணம் எடுத்து பயன்படுத்தவோ முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கு அனுப்பும் பணத்தை எங்களால் பயன்படுத்த முடியாது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, பில் கட்டவோ முடியாது. தேர்தல் பிரசாரத்தின்போது மின்கட்டணத்தைக்கூட எங்களால் கட்ட முடியாது,” என்றார்.
“இந்தப் பணம் எந்த கார்ப்பரேட் முதலாளிக்கும் சொந்தமானது அல்ல, க்ரவுட் ஃபண்டிங் மூலம் காங்கிரஸ் வசூலித்த பணம்,” என்றார்.
“கணக்கில் சுமார் 25 கோடி ரூபாய் உள்ளது. அதில் 95 சதவீதத்திற்கும் மேலான பணம் 100, 200 என யூ.பி.ஐ மூலம் சாமானியர்களால் வழங்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள பணம் உறுப்பினர் கட்டணத்திற்காக வசூலிக்கப்பட்ட பணம்.”
“மறுபுறம், உச்சநீதிமன்றம் அரசமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்த கார்ப்பரேட் பத்திரங்களின் பணம் பாஜக வசம் உள்ளது, அதை அது செலவழிக்கிறது,” என்று கூறினார் அஜய் மக்கான்.
விஷயம் எப்போது தெரிவிக்கப்பட்டது?

பட மூலாதாரம், SCI
வியாழன் அன்று, உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதித்தது.
இந்தக் கோரிக்கை 2018-19 வருமான வரிக் கணக்கின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளதாக அஜய் மக்கான் தெரிவித்தார்.
“இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், 2019 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கட்சியின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதில் 40-45 நாட்கள் தாமதம் ஏற்பட்டது. இரண்டாவது காரணம், 2019ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்ததால், காங்கிரஸ் கட்சி 199 கோடி ரூபாய்க்கான ரசீதுகளை சமர்ப்பித்தது.
இந்தத் தொகையில் ரூபாய் 14.40 லட்சத்தை சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து ரொக்கமாக டெபாசிட் செய்துள்ளனர். 14.40 லட்ச ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்ததற்கு வருமான வரித்துறை 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது,” என்றார்.
கட்சியின் மொத்தம் 4 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கணக்குகளை முடக்க வேண்டும் என்றால், பாஜகவின் கணக்கில் உள்ள சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மூலம் கிடைத்த கார்ப்பரேட் பணத்தை முடக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், “இது தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்துள்ளோம், தேவைப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலில் இருந்து நாட்டின் நீதித்துறை நம்மைப் பாதுகாக்கும் என நம்புகிறோம். நீதித்துறை மட்டுமே எங்களின் இறுதி நம்பிக்கை,” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அஜய் மக்கான் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்