தெலங்கானா தேர்தல்: காங்கிரஸிடம் செல்வாக்கை இழந்துவிட்டதா பாஜக? பிபிசி கள ஆய்வு

தெலங்கானா தேர்தல்: காங்கிரஸிடம் செல்வாக்கை இழந்துவிட்டதா பாஜக? பிபிசி கள ஆய்வு

பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

தெலங்கானா உருவானதிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. கடந்த ஆண்டுவரை பின்னடைவைச் சந்தித்துவந்த காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்தது எப்படி? பா.ஜ.கவின் நிலை என்ன?

சில வருடங்களுக்கு முன்வரை, இந்தியாவில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சென்றால் அது ஒரு திருவிழாவிற்குள் சென்றதைப் போல இருக்கும். சுவரொட்டிகள், வாக்குக் கேட்டபடி செல்லும் வாகனங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் என மாநிலமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தப் போக்குக் குறைந்து வருகிறது. தேர்தல் நடப்பதற்கான சுவடே பல இடங்களில் இருப்பதில்லை. இன்னும் சில நாட்களில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் தெலங்கானாவும் அப்படித்தான் இருக்கிறது.

சாலைகளின் நடுவில் உள்ள தூண்களில் முதலமைச்சரும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்)யின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் படங்கள் பளிச்சிடுகின்றன. எப்போதாவது ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்குக் கேட்கும் போஸ்டர்கள் ஒட்டிய வாகனம் கடந்து சொல்கிறது. அவ்வளவுதான். மற்றபடி, மாநில அளவிலான தேசிய அளவிலான தலைவர்கள் வந்தால் மட்டுமே சற்று கூட்டம் கூடுகிறது.

தெலங்கானா தேர்தல - கள நிலவரம்

வெளித்தோற்றம் இப்படி இருந்தாலும், மாநிலத்தில் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கிறது பி.ஆர்.எஸ். (முன்பு டி.ஆர்.எஸ்.). தான் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது அந்தக் கட்சி.

ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த முறை, பி.ஆர்.எஸ்சுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் இந்தக் கட்சி போட்டியிடுகிறது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

பா.ஜ.க. 111 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி 8 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர ஏஐஎம்ஐஎம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன.

பாரத் ராஷ்ட்ர சமிதி – காங்கிரஸ் கூட்டணி – பா.ஜ.க. கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுவதைப் போலத் தோற்றம் இருந்தாலும், களத்தில் பாரத் ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

தெலங்கானா தேர்தல - கள நிலவரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இடங்களைப் பிடித்த பா.ஜ.க. தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், தெலங்கானாவின் தேர்தல் களம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வெகுவாக மாறியிருக்கிறது.

“2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நான்கு இடங்களைப் பிடித்த பிறகு, அக்கட்சி மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. எல்லோரும் அந்தக் கட்சியைப் பற்றியே பேசினார்கள். பி.ஆர்.எஸ்சைப் பிடிக்காதவர்கள் பா.ஜ.க. பக்கம் சாய ஆரம்பித்தார்கள். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பா.ஜ.கவால்தான் பி.ஆர்.எஸ்சைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்தார்கள். ஆகவே, பிஆர்எஸ்சுக்கு மாற்று பா.ஜ.கதான் என்ற தோற்றம் ஏற்பட்டது. வேறு கட்சிகளில் இருந்தெல்லாம் தலைவர்கள் பா.ஜ.கவில் சேர ஆரம்பித்தார்கள். “

“ஆனால், பி.ஆர்.எஸ்சைக் கடுமையாக எதிர்ப்பது காங்கிரசிற்குத்தான் உதவும் என பா.ஜ.க. நினைத்தது. மற்றொரு பக்கம் மதுக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டார். ஆனால், அதே போன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்ட பிஆர்எஸ்சின் கவிதா கைதுசெய்யப்படவில்லை. ஆகவே, இரு கட்சிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள்” என்கிறார் அரசியல் செயற்பாட்டாளரும் தெலங்கானா ஜன சமிதி அமைப்பின் தலைவருமான எம். கோதண்டராம்.

காங்கிரசைப் பொறுத்தவரை என்னதான் கீழ் மட்டத்தில் கட்சிக் கட்டமைப்பு இருந்தாலும், பா.ஜ.கவின் சுறுசுறுப்பின் காரணமாக காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட தோற்றம் ஏற்பட்டது.

தெலங்கானா தேர்தல - கள நிலவரம்

இந்த நிலையில், 2021ல் காங்கிரஸின் மாநிலத் தலைவராக இருந்த என். உத்தம் குமார் ரெட்டி மாற்றப்பட்டு, மிகச் சுறுசுறுப்பான அரசியல்வாதியான ஏ. ரேவந்த் ரெட்டி மாநிலத் தலைவராக்கப்பட்டார். இதற்குப் பிறகு, மாநில அரசின் மீதான தாக்குதலை காங்கிரஸ் தீவிரப்படுத்தியது. முதன்மை எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து பா.ஜ.க. மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட்டு, காங்கிரஸ் அந்த இடத்தை நெருங்கியது.

இதற்கு நடுவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் பா.ஜ.கவின் மாநிலத் தலைமை மாற்றப்பட்டது. தெலங்கானா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக இருந்த பண்டி சஞ்சய் குமாருக்குப் பதிலாக மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார்.

“ரேவந்த் ரெட்டி மிகப் பெரிய ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தார். அப்போதுதான் காங்கிரசின் வேர்கள் அப்படியே இருக்கின்றன என்பது புரிந்தது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரசிற்குக் கிடைத்த வெற்றியும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்களுக்கு ஊக்கம் அளித்தது. தில்லித் தலைமையும் மாநிலத்தில் கட்சியை மறு கட்டமைப்புச் செய்தது. உள்ளூரில் இருந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது.

பிஆர்எஸ்சுக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், இங்கே பிழைத்திருக்க முடியாது என்பது காங்கிரசிற்குப் புரிந்தது. பா.ஜ.கவைப் போல பி.ஆர்.எஸ்சுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ளக்கூடாது என முடிவுசெய்தார்கள். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார்கள். இதையடுத்துத்தான் காங்கிரசிற்கான செல்வாக்கு வளரத் துவங்கியது” என்கிறார் கோதண்டராம். இப்போது பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு பிரதானமான மாற்றாக காங்கிரஸ் கட்சியே காட்சியளிக்கிறது.

தெலங்கானா தேர்தல - கள நிலவரம்

பாரத் ராஷ்ட்ரிய சமிதியைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளில் பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறது.

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் ரைத்து பந்து, பட்டியலினத்தோருக்கு நிதி உதவி அளிக்கும் தலித்து பந்து, வீடில்லாதவர்களுக்கு இரண்டு அறைகளைக் கொண்ட வீடுகள், முதியோர் உதவித் தொகை அதிகரிப்பு என கடந்த பத்தாண்டுகளில் பாரத் ராஷ்டிர சமிதி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்கள் அந்தக் கட்சிக்கு ஒரு வலுவான ஆதரவு தளத்தை உருவாக்கியிருக்கின்றன.

ஆனால், பாரத் ராஷ்ட்ர சமிதி அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள், அந்த ஆட்சியின் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தன்னிச்சையாக செயல்படுவதாக எழும் விமர்சனங்கள் ஆகியவற்றை வைத்து தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது காங்கிரஸ். குறிப்பாக மிகுந்த பொருட்செலவில் நிறைவேற்றப்பட்ட காலேஸ்வரம் நீர் பாசனத் திட்டத்தில் பெரும் ஊழல் நடந்ததாக தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ்.

“இது தவிர, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் வெற்றி கிடைத்த பிறகு காங்கிரசால் மட்டும்தான் பி.ஆர்.எஸ்சைத் தோற்கடிக்க முடியும் என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது. பி.ஆர்.எஸ்சும் பா.ஜ.கவும் ஒன்றுதான் என்பதையும் மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர். பி.ஆர்.எஸ்சுக்கு எதிராக களத்தில் பெரும் கோபம் இருக்கிறது” என்கிறார் தெலங்கானாவில் காங்கிரசின் வார் ரூம் பொறுப்பாளரான ரோஹன் குப்தா.

ஆனால், ஊழலைப் பற்றியும் குடும்ப ஆட்சியைப் பற்றியும் பேச காங்கிரசிற்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகிறார் பாரத் ராஷ்ட்ர சமிதியின் செய்தித் தொடர்பாளரான டாக்டர் ஷ்ரவண் தஸோஜு.

“காங்கிரஸ் ஆட்சியின் மீது இல்லாத ஊழல் புகார்களா? மோதிலால் நேருவிலிருந்து ராகுல் காந்திவரை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்துவிட்டு, குடும்ப ஆட்சி பற்றி பேசலாமா? கடந்த 70 ஆண்டுகளில் எந்த முதலமைச்சரும் நிறைவேற்றாத பல திட்டங்கள் இந்தப் பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்கள், நாங்கள் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை வைத்து தேர்தலைச் சந்திப்போம்” என்கிறார் டாக்டர் ஷ்ரவண் தஸோஜு.

இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இரு கட்சிகளுமே மேலும் பல சமூக நலத் திட்டங்களையும் நேரடி பணப் பலன்களையும் அறிவித்துள்ளன.

தெலங்கானா தேர்தல - கள நிலவரம்

பாரத ராஷ்ட்ர சமிதியின் தேர்தல் வாக்குறுதிகள்

1. தற்போது அளிக்கப்பட்டுவரும் முதியோர் ஓய்வூதியம் 2016 ரூபாயில் இருந்து ஓராண்டில் 3016 ரூபாயாக மாற்றப்படும் என்றும் அதற்கடுத்த நான்காண்டுகளில் 5 ஆயிரம் ரூபாயாக மாற்றப்படும்.

2. விவசாயிகளுக்கான ரயுது பந்து திட்டத்தில் தற்போது ஏக்கருக்கு 10,000 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த ஐந்தாண்டில் 16,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

3. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தகுதியானவர்களுக்கு எரிவாயு சிலிண்டர் 400 ரூபாய்க்கு வழங்கப்படும்.

4. மாநிலத்தில் உள்ள வீடில்லாதவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும். தற்போதுள்ள வீடு வழங்கும் திட்டங்களும் தொடரும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஆறு முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளது.

1. மகாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும். பேருந்தில் இலவசப் பயணம் அளிக்கப்படும். எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு அளிக்கப்படும்.

2. விவசாயிகளுக்கான ரயுது பரோசா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் வழங்கப்படும். விவசாயக் கூலிகளுக்கு 12,000 வழங்கப்படும்.

3. க்ருஹஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

4. இந்திரம்மா இந்துலு திட்டத்தின் கீழ் தெலங்கானா மாநில தியாகிகளுக்கு 250 சதுர அடி நிலம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு நிலமும் ஐந்து லட்ச ரூபாய் பணமும் அளிக்கப்படும்.

5. யுக விகாசம் திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவிசெய்யப்படும்.

6. செய்யுதா என்ற திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகையாக மாதம் 4 ஆயிரம் ரூபாய் தரப்படும்.

தெலங்கானா தேர்தல - கள நிலவரம்

பா.ஜ.கவின் வாக்குறுதிகள்

1. இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

2. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு நான்கு எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும்.

3. மாநிலத்தில் பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும்.

4. ஹைதராபாத் விடுதலை தினம் அரசால் கொண்டாடப்படும்.

5. பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

ஆக, பிஆர்எஸ் அரசின் சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம், அக்கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பி.ஆர்.எஸும் காங்கிரசும் முன்வைத்துள்ள தேர்தல் அறிக்கைகள் ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கியப் பேசுபொருளாக இருக்கின்றன.

ஆந்திராவிலிருந்து பிரிந்து, தெலங்கானா என்ற மாநிலத்தை உருவாக்க 2001ல் துவங்கப்பட்டது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியின் பெயரை பாரத ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றினார் கே. சந்திரசேகர ராவ்.

“தேசியப் பிரச்சனைகளை மாநில மட்டத்தில் விவாதிக்க ஏதுவாக இதனைச் செய்தார்கள். மேலும் பிற மாநிலங்களிலும் சில நாடாளுமன்ற இடங்களை வெல்ல நினைத்தார்கள். ஆனால், கே.சி.ஆர். தனது உள்ளூர் அடையாளத்தை இழந்துவிட்டார். மக்கள் இப்போது அதனை தெலங்கானாவுக்கே உரிய கட்சியாகப் பார்ப்பதில்லை” என்கிறார் எம். கோதண்டராம்.

இந்தத் தேர்தலின் முடிவுகள், மாநிலத்தோடு நின்றுவிடாமல் தேசிய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பி.ஆர்.எஸ். – காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே வாழ்வா, சாவா என்ற தீவிரத்துடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

தெலங்கானா மாநிலத்திற்கான வாக்குப் பதிவு டிசம்பர் 30ஆம் தேதி நடக்கவிருக்கிறது. முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *