கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு சரிந்தது. காஸ்ப்ரோம் மற்றும் ஸ்பெர்பேங்க் போன்ற பெரிய ரஷ்ய நிறுவனங்களின் மதிப்பு லண்டனில் 97% வரை சரிந்தது.
மாஸ்கோவில் உள்ள ஏ.டி.எம்.களுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. சொகுசு படகுகள், கால்பந்து அணிகள், ஆடம்பர பங்களாக்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்களின் கடன் அட்டைகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன. ரஷ்யா கடுமையான பொருளாதார பின்னடைவைச் சந்தித்தது.
யுக்ரேன் மீதான போருக்குப் பிறகு ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட அசாதாரண முயற்சிகளின் விளைவு இது.
ரஷ்ய அரசாங்கத்தின் வெளிநாட்டு சொத்துகள் மற்றும் அந்நிய செலாவணி இருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், ரஷ்யாவின் மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முடக்கப்பட்டது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.
மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள் ‘பொருளாதாரப் போர்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை தான், ஆனால் உண்மையில் அது ரஷ்யா மீது தொடுக்கப்பட்ட ஒரு பொருளாதாரப் போரைப் போலவே தோன்றியது. அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான நேரடி போரை விட இது ஆற்றல்மிக்க ஒரு வழி.
ரஷ்யாவின் பொருளாதாரம்
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, தற்போது பொருளாதார சூழ்நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வாரம் நடைபெற்ற ஒரு பிரபலமான நேர்காணலில், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீண்ட நேரம் பேசினார். மேலும், ரஷ்யாவின் பொருளாதாரம் ஐரோப்பா முழுவதிலும் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறினார்.
கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) ரஷ்யப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் கணிப்பை 1.1 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக உயர்த்தியபோது, அது ரஷ்யப் பொருளாதாரத்தின் வலிமையையும் எடுத்துக்காட்டியது.
ஐ.எம்.எப் தரவுகளின்படி, ரஷ்யாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டு அனைத்து ஜி-7 நாடுகளையும் விட வேகமாக வளர்ந்துள்ளது மற்றும் 2024-ஆம் ஆண்டிலும் நிலைமை அப்படியே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல.
ரஷ்ய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் யுக்ரேனில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் சிக்கலான சூழ்நிலையைத் தொடர ஆதரவு கிடைக்கிறது. யுக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கில் நடந்து வரும் சண்டையில் ரஷ்யாவின் ராணுவ முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த வளர்ச்சியை ரஷ்யா தக்க வைத்துக் கொள்ளுமா?
ரஷ்யாவின் வளர்ச்சி நீண்ட காலம் நீடிக்காது என்று மேற்கத்திய தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கேள்வி என்னவென்றால், அது எவ்வளவு காலம் நீடிக்கும்?
ரஷ்யா தனது பொருளாதாரத்தை ஒரு போர் பொருளாதாரமாக மாற்றியுள்ளது, அதில் பெரும்பாலான பணம் போருக்காக மட்டுமே செலவிடப்படுகின்றன. சோவியத் யூனியன் காலத்திற்குப் பிறகு முதல் முறையாக இவ்வளவு பெரிய தொகையை ரஷ்யா செலவிடுகிறது.
முழு பட்ஜெட்டில் 40% இராணுவம் மற்றும் பாதுகாப்புக்காக செலவிடப்படுகிறது, இது சோவியத் யூனியன் சகாப்தத்தின் கடைசி ஆண்டுகளில் இருந்த நிலையை எட்டியுள்ளது. இது தவிர, டாங்கிகள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் யுக்ரேன் பகுதிகளை பாதுகாப்பதற்கும் ரஷ்ய அரசாங்கம் பெரும் தொகையை செலவழித்து வருகிறது.
சுவாரஸ்யமாக, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான மேற்கத்திய தடைகள் இருந்தபோதிலும், ஹைட்ரோகார்பன் பொருட்களின் விற்பனையின் வருவாய் இப்போதும் ரஷ்ய கருவூலத்தை நிரப்புகிறது.
எண்ணெய் டேங்கர்கள் இப்போது இந்தியா மற்றும் சீனாவை நோக்கி நகர்கின்றன. அமெரிக்க டாலருக்கு பதிலாக சீன நாணயமான யுவானில் பெரும்பாலான பணப்பரிமாற்றங்கள் நடக்கின்றன.
‘2024, புட்டினுக்கு சாதகமாக இருக்கும்’
ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி இப்போதும் ஒரு நாளுக்கு 950 கோடி பீப்பாய்களாக உள்ளது, ஆனால் போருக்கு முன்பு இருந்ததை விட சற்று குறைவாகவே உள்ளது.
ரஷ்யா நூற்றுக்கணக்கான டேங்கர்களை ரகசியமாக வாங்கி, அவற்றை அனுப்பி வைத்தது. ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் வைரங்களின் மூலம் கிடைத்த வெளிநாட்டு பணமும், ரஷ்ய ரூபிளின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உதவியது.
இது நீண்ட காலம் நீடிக்காது என்று மேற்கத்திய தலைவர்கள் கூறுகின்றனர், ஆனால் அதன் தாக்கம் குறித்து அவர்களுக்கும் தெரியும்.
ஒரு உலகத் தலைவர் சமீபத்தில் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவித்திருந்தார், “2024 நாங்கள் நினைத்ததை விட புட்டினுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். தனது நாட்டின் தொழில்துறையை மறுசீரமைப்பதில் நாம் நினைத்ததை விட அவர் அதிகளவு வெற்றி பெற்றுள்ளார்.”
ரஷ்யாவின் உண்மை நிலை என்ன?
ஆனால், இந்த முறையிலான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக எண்ணெய் வருமானம் மற்றும் சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு உருவாகியுள்ளது. போரில் தேவையற்ற செலவினங்களையும் இது அதிகரித்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை உச்சத்தை அடைந்த பிறகு, எண்ணெய் உற்பத்தியில் போட்டி நாடுகளாக இருக்கும் அரபு வளைகுடா நாடுகளின் உற்பத்தி பற்றிய தகவல்களும் அடுத்த ஆண்டு ஆன்லைனில் வந்தவுடன், ரஷ்யாவின் யதார்த்தம் தெரியும்.
கிழக்கு யுக்ரேனில் போரில் பயன்படுத்தப்படும் டாங்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்தியின் அதிகரிப்பு காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது, ஆனால் இது ரஷ்யாவிற்கு நிரந்தரமாக எதையும் கொடுக்காது.
இதற்கிடையில், ரஷ்யாவின் பல குடிமக்களும் தங்கள் நாட்டின் செயல்பாடுகளால் ஏமாற்றத்தில் உள்ளனர்.
ரஷ்ய பொருளாதாரத்தை முற்றுகையிடுவது அல்ல மேற்கத்திய நாடுகளின் உத்தி. மாறாக, அவர்கள் ரஷ்யாவை ஒரு குழப்ப நிலைக்குள் தள்ள விரும்புகிறார்கள். அதாவது தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்துவது, நாட்டின் வருமானத்தை கட்டுப்படுத்துவது, பணவீக்கத்தை அதிகரிப்பது.
இனியும் இதை தாங்கிக்கொள்ள முடியாது என்ற நிலையை உருவாக்குவதே அந்த யுக்தி.
கச்சா எண்ணெய் சந்தைகள்
ஒரு அமெரிக்க அதிகாரி என்னிடம் கூறினார், “ரஷ்யா தனது பணத்தை டாங்கிகளுக்கு பதிலாக எண்ணெய் டேங்கர்களை வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டுமென விரும்புகிறோம்.”
உதாரணமாக, எண்ணெய் சந்தை தொடர்பான கொள்கைகளின் நோக்கம் என்பது, ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதைத் தடுப்பது அல்ல. மாறாக, ரஷ்யாவுக்கு எண்ணெய் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஆனால் ரஷ்யாவின் இந்த ஸ்திரத்தன்மையும் வலிமையும் குறைந்தது இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் என்று நம்பப்படுகிறது. இந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்படும், அரசாங்கமும் மாறக்கூடும்.
யுக்ரேனுக்கு மேற்கத்திய நிதியுதவி குறையும் வாய்ப்பும் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இது நிச்சயமாக ரஷ்யாவுக்கு உதவும்.
இதனால் தான் ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் மதிப்பிலான முடக்கப்பட்ட நிதிச் சொத்துக்களின் மீது கவனம் திரும்பியுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்கள்
“உலக நாடுகளிடம் 30,000 கோடி டாலர்கள் மதிப்பிலான ரஷ்யாவின் முடக்கப்பட்ட நிதிச் சொத்துக்கள் இருந்தால், அதை ஏன் பயன்படுத்தக்கூடாது,” என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த மாதம் என்னிடம் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து நிதியும் யுக்ரேனின் மறுசீரமைப்புக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பிரிட்டனின் அதிபர் ஜெரமி ஹன்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் ஆகியோரும் இந்த நடவடிக்கையை ஆதரித்தனர்.
கேமரூன் என்னிடம், “இந்தச் சொத்துக்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். அவற்றைப் பயன்படுத்துவோமா என்பதுதான் கேள்வி,” என்றார்.
“இப்போது இந்தப் பணத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்துவது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு ஈடுசெய்ய முன்பணமாகச் செலுத்தப்படும். மேலும் இது யுக்ரேனுக்கு உதவவும் மேற்கத்திய நாடுகளின் வரிப் பணத்தை சேமிக்கவும் பயன்படுத்தப்படலாம்,” என்று கேமரூன் சுட்டிக்காட்டுகிறார்.
ஜி-7 நாடுகள் அந்தந்த மத்திய வங்கிகளின் இயக்குநர்களிடம் தொழில்நுட்ப மற்றும் சட்டப் பகுப்பாய்வைத் தயாரிக்குமாறு கேட்டுள்ளன. இந்தப் பிரச்னை அவரை மிகவும் தொந்தரவு செய்வதாகக் கருதப்படுகிறது.
ரஷ்ய சொத்துகளை பயன்படுத்துவதன் அபாயங்கள்
முடக்கப்பட்ட சொத்துகளை டாலர்களாக மாற்றிப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் இருப்பதாக ஒரு சிறந்த நிதியாளர் என்னிடம் கூறினார். பாரம்பரியமாக, மத்திய வங்கிகளுக்கு அத்தகைய நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
யுக்ரேனுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் கிடைக்கும் வகையில் ரஷ்ய நிதியைப் பயன்படுத்த அல்லது முதலீடு செய்ய ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரஷ்யாவின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டால் அது மற்ற நாடுகளுக்கு என்ன செய்தியை கூறும்? முக்கியமாக வளைகுடா, மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மேற்கத்திய நாடுகளின் மத்திய வங்கிகளின் நிதி இருப்புக்களின் பாதுகாப்பு குறித்து.
இந்த உறவுகள் சர்வதேச நிதி அமைப்புக்கு இன்றியமையாதவை. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஆற்றல் தொடர்பான தயாரிப்புகளில் முதலீடு செய்ய இந்த நிதி பயன்படுகிறது.
உலக பொருளாதாரம்
உலகில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு சீனா ஒரு மாற்றாக இருப்பதைக் காட்ட முயற்சித்துள்ளார் புதின்.
ரஷ்யாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிலுக்கு ரஷ்ய வங்கிகளில் உள்ள மேற்கத்திய நிறுவனங்களின் சொத்துக்களும் கைப்பற்றப்படும் என்றும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த மோதலும் உலகப் பொருளாதாரமும் எதை நோக்கிச் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீதான மேற்கத்திய நாடுகளின் நிழல் யுத்தம் இன்றியமையாதது.
ரஷ்யாவின் போர் பொருளாதாரம் நீண்ட காலம் நீடிக்க முடியாது, ஆனால் அது குறைந்தபட்சம் நாட்டிற்கு சிறிது அவகாசத்தை கொடுத்துள்ளது. ரஷ்யா இதில் உறுதியாக நிற்கும் விதத்தில், மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கை மேலும் தீவிரமடையலாம்.
இந்த நிதி சார்ந்த போர் எந்த வடிவத்தை எடுத்தாலும், அதன் தாக்கம் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் அப்பால் இருக்கும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்