மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ‘தேசத்திற்காக நன்கொடை’ (Donate for Desh) என்ற பெயரில் இணையம் வாயிலாக கூட்டுநிதி (crowdfunding) திரட்டும் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.
இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் மூலம் கட்சிக்கு ரூ.138, 1,380, 13,800 அல்லது அதற்கு மேல் நன்கொடை அளிக்கலாம்.
இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், ‘‘பொதுமக்களிடம் இருந்து உதவி பெற்று நாட்டைக் கட்டியெழுப்ப காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இதுவே முதல் முறை,’’ என்றார்.
இந்த பிரசாரத்தின் கீழ் ரூ.6 கோடிக்கு மேல் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளது என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேர் இந்த பிரசாரத்தில் இணைந்துள்ளதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பிபிசியிடம் பேசிய காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான், காங்கிரஸுக்கு வளங்கள் குறைவாக இருப்பதால் இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாக அர்த்தம் இல்லை எனத் தெரிவித்தார்.
“இது எங்கள் தேர்தல் செலவுகளை ஈடுசெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்கள் இலக்குகூட இல்லை. இந்தப் பிரசாரம் ஒரு அரசியல் செயல்பாடு, இதன் மூலம் மக்களை இணைக்க முயல்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (Association for democratic Reforms) கருத்துப்படி , 2021-22ஆம் ஆண்டில், நாட்டின் எட்டு பெரிய அரசியல் கட்சிகளில், பாஜக சுமார் 6,046.81 கோடி ரூபாய் சொத்துகளுடன் முன்னணியில் உள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸின் சொத்து மதிப்பு சுமார் 806 கோடி.
அதாவது, காங்கிரஸைவிட ஏழு மடங்குக்கும் அதிகமான சொத்துகள் பாஜகவுக்கு உள்ளது. இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவது மிகவும் விலை உயர்ந்தது என்பது இங்கு தெளிவாகிறது.
‘தேசத்திற்காக நன்கொடை’
‘தேசத்திற்காக நன்கொடை’ பிரசாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கொள்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அஜய் மக்கான், ”இது முன்னதாகவே நடந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முன்னதாகச் செய்திருந்தால், இன்னும் சிறப்பாக நாங்கள் பொதுமக்களுடன் இணைந்திருப்போம்,” என்பதை ஒப்புக்கொள்கிறார்.
தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் ‘தேசத்திற்கு நன்கொடை’ பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது குறித்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஆராத்யா சேத்தியா கூறுகையில், “இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. ‘தேர்தல் பிரசாரத்திற்காக பணம் தேவை, அதற்கு நாம் பணம் வழங்குகிறோம்’ என்ற ரீதியில் மக்கள் இதை எடுத்துக் கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.
’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தித்தாளின் அரசியல் ஆசிரியர் வினோத் ஷர்மாவின் கூற்றுப்படி, “தாமதம்தான் என்றாலும் இது சிறந்த முயற்சி. தாமதமாகச் செய்ததால் எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாது,” என்றார்.
அதேநேரம் , காங்கிரஸின் இந்தப் பிரசாரத்தை காந்தி குடும்பத்தை வளப்படுத்தும் மற்றொரு முயற்சி என்று ஆளும் பாஜக வர்ணித்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனாவாலா கூறுகையில், “அறுபது ஆண்டுகளாக நாட்டைக் கொள்ளையடித்து வரும் நிலையில், இன்று, ‘தேசத்திற்கு நன்கொடை’ என்ற பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். ‘ஜீப் ஊழல்’ முதல் ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்’, ‘நேஷனல் ஹெரால்டு ஊழல்’ என அறுபது ஆண்டுகள் ஊழல்கள் செய்து வருகின்றன.
அதுவரை நாட்டின் ஒவ்வொரு பைசாவையும் கொள்ளையடித்து, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, நாட்டையே கொள்ளையடித்து, இன்று ‘தேசத்திற்காக நன்கொடை’ என்ற பிரசாரத்தை நடத்துகிறார்கள்,” என்றார்.
காங்கிரஸின் இந்தப் பிரசாரம் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னர்தான், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸை பாஜக தோற்கடித்தது. அதேநேரத்தில், தேர்தல் பிரசாரத்தின்போது ‘இந்தியா’ கூட்டணியின் நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிரதமர் நரேந்திர மோதி நாட்டின் மிகவும் பிரபலமான தலைவர் என்று கூறுகின்றன.
மூன்றாவது முறையாக அவர் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையை பாஜக வெளிப்படுத்தி வரும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறவிடாமல் தடுப்பது எப்படி என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முன் உள்ள சவாலாக உள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பை மீறியதாக நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட அமளிக்குப் பிறகு சுமார் 150 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதலின் சமீபத்திய உதாரணம்.
காங்கிரஸின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறுகையில், அடுத்த தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ‘செய் அல்லது செத்து மடி’ என்ற நிலை எனத் தெரிவித்தார்.
பணம்தான் நோக்கமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தப் பிரசாரத்தின் நோக்கம், பணம் சேகரிப்பதைத் தவிர, கட்சியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக ஆதரவாளர்களை உணர வைப்பதாகும் என்கின்றனர். இந்தப் பிரசாரத்தில் எவ்வளவு பேரை இணைக்க முடியும் என்பதும் காங்கிரசுக்கு சவாலாக இருக்கும்.
“பாரதிய ஜனதா கட்சி அமலாக்க இயக்குநரகத்தை (ED) பயன்படுத்துவது நிச்சயமாக ஒரு சவாலாக உள்ளது. இருப்பினும் எங்கள் பொருளாதார நிலை மோசமாக இல்லை,” என அஜய் மக்கான் கூறுகிறார்.
அரசு நிறுவனங்களை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இந்தப் பிரசாரத்தின் மூலம் காங்கிரஸ் எவ்வளவு பணம் திரட்ட விரும்புகிறது என்ற கேள்விக்கு, “இதற்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான பணம் யூ.பி.ஐ மூலம் வருகிறது. பிரசாரத்தின் மூலம் சேகரிக்கப்படும் பணத்தில் 50 சதவீதத்தை நிரந்தர வைப்புத் தொகையாக வைப்போம்.
இதன் மூலம் கிடைக்கும் வட்டி, கட்சிப் பணிக்கு செலவிடப்படும். மீதமுள்ள பணம் மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு வழங்கப்படும். ஆனால் அதுவும் பணமாக வழங்கப்படாது,” என அஜய் மக்கான் கூறுகிறார்.
நாக்பூரில் நடைபெற உள்ள காங்கிரஸ் பேரணியில் அனைத்து இடங்களிலும் கியூ.ஆர் கோட் (QR Code) வைத்து மக்கள் நன்கொடை அளிக்கும் திட்டம் உள்ளது.
“கூட்டு நிதி மூலம் தேர்தலை நடத்துவது பற்றி யாரும் சிந்திக்க முடியாது. அது சாத்தியமில்லை. எங்களுக்கு இதைத் தவிர ஆதாரங்கள் தேவைப்படும்,” என அஜய் மக்கான் கூறுகிறார். ஆயிரக்கணக்கில் இணைய தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், தரவுகளைத் திருடுவதுதான் பல தாக்குதல்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
“ஆனால், இதில் ஒரு தாக்குதல்கூட வெற்றிபெற நாங்கள் அனுமதிக்கவில்லை, எங்கள் வலைதளம் ஒரு நிமிடம்கூட மெதுவாக இல்லை. நிமிடத்திற்கு 5,000 பரிவர்த்தனைகள் செய்யும் அளவில் இதன் திறன் உள்ளது,” என அவர் கூறினார்.
பணம் திரட்ட போட்டி
தேர்தல் நெருங்கி வரும் நேரங்களில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவாதங்கள் எழுகின்றன. தேர்தல் பத்திரங்களை எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கி, அரசியல் கட்சிக்கு அநாமதேயமாக நன்கொடை அளிக்கலாம்.
இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது, தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் நிதியளிப்பு முறையைத் தூய்மைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது.
ஆனால், கடந்த ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே இது கறுப்புப் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தைச் சேர்ந்த திரிலோச்சன் சாஸ்திரி கூறுகையில், “உலகிலுள்ள எந்த ஜனநாயகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு பைசா குறித்தும் வெளிப்படையான தகவல்கள் கிடைக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். ஆனால் இந்தியாவில் அது இல்லை,” என்றார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) அறிக்கையின்படி, ஆளும் பாஜக 2016-17 மற்றும் 2021-22க்கு இடையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தில் மிகப் பெரிய பங்கைப் பெற்றது.
மக்களிடையே காங்கிரஸின் செல்வாக்கு
’ஹிந்துஸ்தான் டைம்ஸின்’ அரசியல் ஆசிரியர் வினோத் ஷர்மா கூறுகையில், “காங்கிரஸ் மக்களிடம் தனது செய்தியை வெளிப்படுத்தி வருகிறது. கட்சிக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்கும், எத்தனை பேர் சேருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று கூறுகிறார்.
“இன்று, எந்தத் தொழிலதிபரும் எதிர்க்கட்சிகளுக்குப் பணம் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில் அவர்களுக்குப் பயம் இருக்கிறது,” என்றார்.
“அவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வெளிப்படையாகப் பணம் கொடுக்க பயப்படுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் ஆட்சியில் இருக்கும் கட்சி தங்கள் மீது கோபப்படும் என்று தொழிலதிபர்கள் பயப்படுகிறார்கள்,” என்கிறார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படிக்கும் ஆராத்யா சேத்தியாவின் கூற்றுப்படி, தேர்தலில் செலவழிக்கும் தொகை பெரும்பாலும் பண வடிவத்திலேயே வருவதாகக் கூறுகிறார்.
அவர் கூறும்போது, “20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை என்றால் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், ஒருவர் ரூ.20,000 அல்லது அதற்கும் குறைவாக எத்தனை முறை நன்கொடை அளிக்கலாம் என்று கூறப்படவில்லை,” என்றார்.
மேலும், “தேசிய கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள் இந்தத் தகவலைத் தருவதில்லை. தங்களுக்கு வரும் நன்கொடை ரூ.20,000க்கும் குறைவு என்று வாதிடுகின்றனர்,” என்றார் அவர்.
காந்தியின் பிரசாரம்
சுதந்திரத்திற்கு முன் ஒத்துழையாமை இயக்கத்திற்காக 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க திலக் ஸ்வராஜ் நிதித்திட்டம் மூலமாக இந்தப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டதாக காங்கிரஸ் கூறுகிறது.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தனது கட்சி உருவான பிறகு கூட்டுநிதி மூலம் பணம் திரட்டியது. மேற்கத்திய நாடுகளில், கட்சிகள் கூட்டு நிதி மூலம் பணம் சேகரிக்கின்றன. கட்சியில் உறுப்பினர் ஆவதற்கும் கட்டணம் உண்டு.
“ஆம், நாங்கள் பலமாக இருக்கிறோம், பாஜகவுக்கு எதிராக நாங்கள் பெரிய சக்தியாக இருக்கிறோம், அரசியலில் ஈடுபட விரும்பினால் பணம் கொடுங்கள்,” என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் சென்றால், பணம் வசூலிக்கும் முயற்சிகள் வெற்றியடையும் என்கிறார், ஆராத்யா சேத்தியா.
மேலும், ”அரசியலில் பணம் முக்கியம். ஆனால் பணத்தால் மட்டுமே எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. கட்சியின் செயல்திறனில் கட்சியின் முகம், தலைமை, அமைப்பு மற்றும் சித்தாந்தமும் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்றார்.
காங்கிரஸுக்கு பதிலாக 28 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ’இந்தியா’ கூட்டணி இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தால், ஒருவேளை சிறப்பான விளைவுகள் ஏற்படலாம். இதனால் எதிர்க்கட்சிகள் முன்னேற முடிந்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்