பனி யுகம் முடிவுக்கு வந்த பிறகு, சுமார் 15 முதல் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சௌதி அரேபியாவின் பாலைவனத்தில் மனிதர்களின் குடியேற்றம் தொடங்கியது.
இஸ்லாம் பரவிய பிறகு, சௌதி அரேபியா கலீஃபாவின் (இஸ்லாமிய அரசை ஆட்சி செலுத்தியவர்கள்) முக்கிய மையமாக இருந்தது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
சிரியா, இராக், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சௌதி அரேபியா ஆட்சி செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக மூன்று முயற்சிகளுக்குப் பிறகு, தற்போதைய சௌதி அரேபியா ஒரு சுதந்திர நாடாக உருவானது.
சுதந்திரமாக வாழ்ந்த பழங்குடிகள்
இந்த பகுதி பல்வேறு பெடோயின் பழங்குடியினரின் நாடோடி பகுதியாக இருந்தது. இங்கு அனைத்துப் பழங்குடியினரும் சுதந்திரமாக வாழ்ந்தனர்.
ஜேம்ஸ் வெயின்பிரான்ட் தனது ‘சௌதி அரேபியாவின் சுருக்கமான வரலாறு’ (A Brief History of Saudi Arabia) என்ற புத்தகத்தில், தில்முன் என்ற நாகரிகம் இன்றைய பஹ்ரைன் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் கி.மு. 32-ம் நூற்றாண்டில் வளர்ந்தது என எழுதியுள்ளார்.
அக்காலகட்டத்தில், அவர்கள் மேகன் (இன்றைய ஓமன்), பாபிலோன் மற்றும் மெசபடோமியா போன்ற நகரங்களுடன் வணிகம் மற்றும் வர்த்தகம் செய்தனர். அந்த காலத்தில் தில்முன் முத்துகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. அக்காலத்தில், ஏமன் சபா அல்லது செபா என்று அழைக்கப்பட்டது. அதேபோல், ஜோர்டான் நபடாயென் என அழைக்கப்பட்டது.
ஆனால், அரபு பள்ளத்தாக்கு மக்கள் தங்களை எப்போதும் அல்-அரபு அல்லது அரேபியர்களின் தீவு மக்கள் என்று அழைத்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பாலைவனத்தின் நாடோடிகளாக இருந்தாலும், ஏன் தங்களை அரேபியர்கள் என்று அழைத்துக் கொண்டனர் என்பதை அறிய முடியவில்லை. அவர்கள் பெட்டூஸ் (Beddus) என்று அழைக்கப்பட்டனர்.
இஸ்லாமுக்கு முந்தைய சமூகத்தில் பெடோயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனி ஆட்சி மற்றும் பழக்கவழக்கங்கள் இருந்தன.
ஜேம்ஸ் வெயின்பிரான்ட் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை, இந்த குழுக்களில் பெரும்பாலானவை ரோமானியர்களால் ஆளப்பட்டன என்று எழுதியுள்ளார். பெடோயின் பழங்குடியின மக்கள் மூன்றாம் நூற்றாண்டில் ஒன்றுபட்டு ஒரு பெரிய பழங்குடி கூட்டத்தை உருவாக்கினர். இது அவர்களின் அதிகாரத்தை மேலும் அதிகரித்தது. அவர்கள் ஐந்தாம் நூற்றாண்டில் சிரியா, பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
மெக்கா முஸ்லிம் வசமானது எப்போது?
இஸ்லாம் பரவலுக்குப் பிறகு, 630-ஆம் ஆண்டில் மெக்கா முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிலிருந்து இஸ்லாம் குறித்த பிரசாரம் மதீனாவிலிருந்து தொடங்கியது. பல்வேறு பகுதிகள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரத் தொடங்கியது.
இஸ்லாத்தின் கடைசி இறைத்தூதர் முகமதுவின் மரணத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட முழு அரபு பகுதியும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அந்தநேரத்தில், அரேபியாவின் பெடோயின் குழுக்கள் இஸ்லாத்தின் கீழ் வந்தன. அவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்தவும், இஸ்லாம் மதத்தை பரப்பவும் முடிவு செய்தனர்.
அடுத்த நூறு ஆண்டுகளில், ஸ்பெயின் மற்றும் இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளிலும் இஸ்லாம் பரவியது. ஆனால், அதனுடன் இஸ்லாமியப் பேரரசின் மையம் அல்லது தலைநகரம் அரபுப் பகுதியிலிருந்து டமாஸ்கஸுக்கும் பின்னர் பாக்தாத்துக்கும் மாறியது.
அப்போது அரபு பகுதி ஹெஜாஸ் மற்றும் நஜ்த் என்று இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. மேற்கு கடற்கரை பகுதி ஹெஜாஸ். இது மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா போன்ற நகரங்களைக் கொண்டுள்ளது. உமையாக்கள், அப்பாஸிட்கள், எகிப்தியர்கள் மற்றும் ஒட்டோமான்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்.
பாலைவனம் மற்றும் மலைப்பகுதி நஜ்த் என்று அழைக்கப்பட்டது. நாடோடி மற்றும் போரை விரும்பும் பெடோயின் பழங்குடி மக்கள் அங்கு வாழ்ந்தனர். இந்தப் பகுதியில் ரியாத் போன்ற நகரங்கள் இருந்தன. இந்தப் பகுதி எந்த அந்நிய சக்தியாலும் ஆளப்படவில்லை. அங்கிருந்த மக்கள் எப்போதும் தங்களை சுதந்திரமானவர்களாக கருதினர்.
உஸ்மானியா அல்லது ஒட்டோமான் பேரரசு
1557-இல் ஒட்டோமான் ஆட்சியாளர் முதலாம் சுலைமான் செலிம் ஆட்சியில் சிரியா மற்றும் எகிப்தை ஆளும் மம்லூக்குகளின் தோல்விக்குப் பிறகு துருக்கியர்கள் ஹெஜாஸின் கட்டுப்பாட்டைப் பெற்றனர்.
சுல்தான் சலீம் தன்னை மெக்காவின் பாதுகாவலராக அறிவித்தார். சுல்தான் சலீம் பின்னர் துருக்கிய பேரரசை செங்கடலை ஒட்டிய மற்ற அரபு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார். ஆனால், அரேபியாவின் பெரும்பகுதி சுதந்திரமாக இருந்தது.
முதல் மற்றும் இரண்டாவது சௌதி நாடுகள்
முஹம்மது பின் சௌத் 1744-ல் சௌதி அரேபியாவில் முதல் தேசத்தை நிறுவினார். அப்போது, அரபு மதத் தலைவர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் உதவியோடு, ரியாத்துக்கு அருகிலுள்ள திரியா என்ற பகுதியில் வாழ்ந்த பழங்குடியினரின் தலைவராக அவர் இருந்தார். அவர்கள் ஒஸ்மானின் ஆட்சியில் இருந்து பிரிந்து, எமிரேட் ஆஃப் திரியா என்ற பேரரசை உருவாக்கினர். இது வரலாற்றில் முதல் சௌதி நாடாகும்.
ஜேம்ஸ் வெயின்பிரான்ட் தனது புத்தகத்தில், முகமது இபின் அப்துல் வஹாப்பிற்கு தனது லட்சியங்களை பரப்புரை செய்ய ராணுவ ஆதரவு தேவை இருந்ததாக எழுதுகிறார். மறுபுறம், முகமது பின் சௌத் சுதந்திர அரபு தேசத்தை உருவாக்குவதற்கு மத ஆதரவு தேவைப்பட்டது. இருவரும் சேர்ந்து நஜ்தை ஒன்றிணைக்க முன்முயற்சி எடுத்தனர்.
முகமது இபின் சௌதின் வாரிசான அப்துல் அல்-அஜிஸ் பின்னர் ஒட்டோமான் ஆட்சியாளர்களை தோற்கடித்து இராக்கின் கர்பலா உட்பட சில பகுதிகளை கைப்பற்றினார். அந்த நேரத்தில், நஜ்த் மற்றும் ஹெஜாஸ் பகுதிகள் இணைந்திருந்தன.
இதற்குப் பிறகு, 1803-ம் ஆண்டில் ஒரு பயங்கரமான தாக்குதலில் அவர் இறந்த பிறகு, அவரது மகன் சௌத் பின் அப்துல் அஜீஸும் மெக்கா மற்றும் மதீனாவைக் கைப்பற்றினார். ஆனால், துருக்கிய மக்களின் தொடர் தாக்குதல்களால் அந்த தேசம் பிழைக்கவில்லை.
1818-ஆம் ஆண்டில், டிரியா மீண்டும் துருக்கியர்களால் கைப்பற்றப்பட்டது. ஏழு மாத முற்றுகையின் முடிவில், அப்துல்லா இப்னு சௌத், எகிப்திய ராணுவத் தளபதி இப்ராஹிம் பாஷாவிடம் சரணடைந்தார். பின்னர் கான்ஸ்டான்டினோபிளில் அவரது தலை துண்டிக்கப்பட்டது.
துருக்கியின் இப்னு அப்துல்லா இப்னி முஹம்மது இப்னே சௌத் இரண்டாவது முறையாக சௌதி தேசத்தை நிறுவினார். அவர் திரியா எமிரேட்டின் கடைசி ஆட்சியாளரான அப்துல்லாவின் உறவினர் ஆவார்.
முதல் சௌதி தேசத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் அல் சௌத் குடும்பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களுடன் தப்பியோடி, பாலைவனத்தில் பழங்குடியினருடன் தஞ்சம் புகுந்தார்.
மடாபி அல் ரஷீத் ‘சவுதி அரேபியாவின் வரலாறு’ (A History of Saudi Arabia) என்ற புத்தகத்தில் “அவர் 1823-இல் துருக்கி மற்றும் எகிப்துக்கு எதிராக போரைத் தொடங்கி ரியாத் மற்றும் திரியாவை மீண்டும் கைப்பற்றினார். அவர் ரியாத்தை தலைநகராக்கினார் மற்றும் நஜ்த் எமிரேட் என்ற இரண்டாவது சௌதி தேசத்தை அறிவித்தார். ஆனால், அதுவும் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. 1834-இல் உறவினர் ஒருவர் அவரைக் கொன்றார். இதற்குப் பிறகு, இரண்டாவது சௌதி தேசமும் 1891-இல் சரிந்தது. அதன் கடைசி ஆட்சியாளரான அப்துல் ரஹ்மான் பின் பைசல், அவரது மகன் அப்துல் அஜீஸுடன், முர்ரா என்ற பெடோயின் பழங்குடியினரிடம் தஞ்சம் புகுந்தார்.
தற்போதைய சௌதி அரேபியா
இப்னு சௌத் என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்ட அப்துல் அஜிஸ் பின் அப்துல் ரஹ்மான் பின் பைசல், 1902-ல் ரியாத்தைக் கைப்பற்றிய பின்னர் மூன்றாவது முறையாக சௌதி தேசத்தை நிறுவினார். ஆனால், அது தனி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.
வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் வெயின்பிரான்ட், “இப்னு சௌத் ரியாத்தைக் கைப்பற்றச் சென்றபோது, அவருடன் 40 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் ரியாத் செல்லும் வழியில் பெடோயின் பழங்குடியின மக்கள் பலர் அவருடன் இணைந்தனர். அப்போது, சௌதி அரேபியாவின் மெக்கா, மதீனா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் ஒட்டோமான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன” என எழுதியுள்ளார்.
மறுபுறம், ஹெஜாஸ் பகுதி ஷெரீப் ஹுசைன் என்ற ஆட்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும், நஜ்த், இபின் சௌத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அவர் நஜ்தில் ரஷிதிகளுக்கு எதிரான போரைத் தொடர வேண்டியிருந்தது.
அப்போது பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாட்டு சக்திகள் அந்தப் பகுதியைக் கைப்பற்ற முயன்றன. முதல் உலகப் போர் தொடங்கிய பிறகு, ஷெரீப் ஹுசைன் ஆங்கிலேயர்களுடன் இணைந்தார். அப்போது, ஒட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு எதிரான போராட்டத்தில் அரேபியர்களுக்கு பிரிட்டிஷ் ராணுவம் உதவியது. பயிற்சி அளிப்பது மட்டுமின்றி ஆயுதங்களை விநியோகிக்கவும் தொடங்கினர்.
முதல் உலகப் போரின் தோல்விக்குப் பிறகு, சௌதி அரேபியா ஒட்டோமான் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து வெளியேறியது. ஆனால் போர் முடிவுக்கு வந்த பிறகு, ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டனும் பிரான்ஸும் மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டன. அந்த நேரத்தில், அரபு பகுதிகளின் கட்டுப்பாட்டுக்காக ஷெரீப் ஹுசைன் மற்றும் இபின் சவுத் இடையே சண்டை தொடங்கியது.
இப்னு சவுத் முதலில் ரஷிதிகளை தோற்கடித்து நஜ்தைக் கைப்பற்றினார் என்று மதாபி அல் ரஷீத் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இதற்குப் பிறகு, 1924-ல், ஹஜ் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி, அவர்கள் ஹெஜாஸில் ராணுவ தாக்குதலையும் தொடங்கினர்.
இதற்கிடையில், பிரிட்டனுடனான ஷெரீப் ஹுசைனின் உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆங்கிலேயரின் உதவி கிடைக்காததால் ஷெரீப் அகபாவை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இப்னு சௌத் ஹெஜாஸ் மற்றும் நஜ்த் மீதான கட்டுப்பாட்டைப் பெற்றார்.
1926-ம் ஆண்டில், மெக்கா-மதீனா மற்றும் ஜெட்டாவைக் கைப்பற்றிய பிறகு, அப்துல் அஜிஸ் பின் சௌத் தன்னை ஹெஜாஸ் மன்னராக அறிவித்தார். அவர் ஏற்கனவே நஜ்தின் சுல்தானாக இருந்தார். அடுத்தாண்டு ஜனவரியில், நஜ்த் மற்றும் ஹெஜாஸை இணைத்து ‘நஜ்த் மற்றும் ஹெஜாஸ் சாம்ராஜ்ஜியத்தை’ (Kingdom of Najd and Hejaz) உருவாக்குவதாக அறிவித்தார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் இதற்கான அங்கீகாரத்தையும் பெற்றார். அப்போது அவர் இமாம் என்ற பட்டத்தை பயன்படுத்தி வந்தார். ஆனால் அரசு பணியின்படி அவர் பாட்ஷா என்று அழைக்கப்பட்டார்.
சௌதி அரேபியா எப்போது ஒரு நாடாக மாறியது?
இதற்குப் பிறகு, அரேபியர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை மாற்றும்படி கட்டளையிட்டார். இபின் சௌத் பெடோயின் பழங்குடியினரிடையேயான சண்டைகள், தாக்குதல்கள் மற்றும் கொள்ளைகளுக்கு தடை செய்தார். செப்டம்பர் 18, 1932-ல், ஹெஜாஸ் மற்றும் சௌத் இரண்டையும் ஒரே நாடாக அறிவிக்கும் அரசாணையை இபின் சவுத் வெளியிட்டார்.
அதன் பிறகு, செப்டம்பர் 23 அன்று, அரபு பகுதி இனி அல் மம்லகத்துல் அரேபியா அஸ்-சவுதியா அல்லது சௌதி அரேபியாவின் ராஜ்ஜியம் (Kingdom of Saudi Arabia) என்று அழைக்கப்படும் என்று அரச கட்டளையை பிறப்பித்தார். ஆனால், அந்த நேரத்தில் சௌதி அரேபியாவின் பெரும்பாலான மக்கள் நாடோடி வாழ்க்கைக்குப் பழகிவிட்டனர். அந்த சமயத்தில் அவருடைய நிதிநிலையும் நன்றாக இல்லை.
ஆனால், எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்த பகுதியின் நிலையே மாறிவிட்டது. சௌதி அரேபியாவில் 1922-ல் எண்ணெய் தேடும் பணி தொடங்கியது.
கார்ல் அஸ்க் விட்ஸெல் (Carl Asch Witsel) என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற சார்லஸ் கிரேன் என்பவரின் உதவியுடன் 1932-ம் ஆண்டு சௌதி அரேபியாவுக்கு வந்து எண்ணெய் தேடும் பணியை தொடங்கினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்