சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பத் துணிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இப்படி குரல் எழுப்பியவர்களில் ஒருவர் தான் ஜிம்மி லாய்.
தனது 12வது வயதில் ஒரு டாலரை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சீனாவிலிருந்து ஹாங்காங் வந்தடைந்த ஜிம்மி, வெளிப்படையாகப் பேசும், அச்சமற்ற, ஒருபோதும் அடங்கிப்போகாத கிளர்ச்சியாளராக விளங்கினார்.
இது தவிர, செல்வாக்கு மிக்க ஹாங்காங் செய்தித்தாளான ஆப்பிள் டெய்லியின் உரிமையாளரான அவர் ஒரு மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆவார். உலகிலேயே பணக்காரர்கள் அரசாங்கத்தை எதிர்த்ததற்கான உதாரணங்கள் மிகக் குறைவு.
ஒரு விதத்தில், ஜிம்மி லாய் ஒரு விதிவிலக்கு, ஏனென்றால் பொதுவாக வணிகர்கள் அரசாங்கத்துடன் ஒத்துப்போகவே விரும்புகிறார்கள்.
கோடீஸ்வரர் ஜிம்மி லாய் ஹாங்காங்கின் ஜனநாயக இயக்கத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவர். இந்நிலையில், அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை சிறையில் அடைத்துள்ளது சீனா. தற்போது அவர் மீது வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து சீனாவுக்கு எதிராக சதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு மற்றும் ஹாங்காங்கில் போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது 76 வயதான ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறத்தும், வழக்கு குறித்தும் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. லாய் உண்மையில் ஒரு பிரிட்டிஷ் குடிமகன். அவரை விடுவிக்குமாறு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹாங்காங்கின் நீதி அமைப்பு அதன் அரசியல் எதிரிகளை மௌனமாக்குவதற்கான ஆயுதமாக மாறியுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மூன்று வருடங்களாக சிறையில் இருக்கும் லாய்க்கு இப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
லாய் ஏன் சீன அரசை எதிர்க்கிறார்?
ஜிம்மி லாய் நீண்ட காலமாக சீன அரசுக்கு எரிச்சலூட்டும் விதத்திலேயே செயல்பட்டு வந்தார்.
ஹாங்காங்கைச் சேர்ந்த மற்ற கோடீஸ்வரர்களைப் போலல்லாமல், லாய் சீன அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவராகவே இருந்து வருகிறார். இஹாங்காங்கில் ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்களில் அவர் ஒரு முக்கிய முகமாக இருந்துள்ளார்.
இதனால் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டில் ‘அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக’ அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, அவர் மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஹாங்காங்கின் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் லாய் மிகவும் முக்கியமானவர்.
2020-இல் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், கிளர்ச்சி என்பது தனது பிறவிக் குணம் என கூறியிருந்தார்.
ஒரு டாலரில் தொடங்கி கோடீஸ்வரராக வளர்ச்சி
ஜிம்மி லாய் தெற்கு சீனாவின் குவாங்சோவில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். ஆனால் 1949-இல் கம்யூனிஸ்ட் ஆட்சி சீனாவில் வந்த பிறகு, அந்தக் குடும்பம் அனைத்து சொத்துக்களையும் இழந்தது.
12 வயதில், மீனவர்களின் படகில் மறைந்திருந்து சீனாவில் இருந்து ஹாங்காங் நகருக்கு ஜிம்மி லாய் சென்றடைந்தார்.
அந்தக் காலகட்டத்தைப் பற்றி, ஜிம்மி லாய் 2021-ஆம் ஆண்டில் பிபிசியிடம் பேசுகையில், “நான் என் பாக்கெட்டில் ஒரு டாலருடன் ஒரு மீன்பிடி படகில் இங்கு வந்தேன். நான் இப்போது எதுவாக இருந்தாலும் அதற்கு இந்த நகரம்தான் காரணம். இந்த நகரத்தின் கருணையை திருப்பிச் செலுத்தும் நேரம் இது என்றால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்,” என்றார்.
12 வயதில், கடைகளில் சிறு சிறு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தவர், ஆங்கிலம் கற்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பினார். சிறிது காலம் கழித்து கூலித் தொழிலில் இருந்து படிப்படியாக சொந்தத் தொழிலுக்கு மாறத் தொடங்கினார்.
தொடர்ந்து வளர்ந்த செல்வாக்கு
ஒரு சர்வதேச ஆடை பிராண்டை உருவாக்குவதில் அவர் முதன்முதலாக வெற்றிபெற்றார். அவருடைய பிராண்டான ஜியோர்டானோ அவருக்கு கணிசமான பொருளாதார முன்னேற்றத்தை அளித்தது.
இந்த பிராண்டின் கடைகள் உலகம் முழுவதும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின.
ஆனால் சீனா 1989-இல் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்திற்கு டாங்கிகளை அனுப்பியபோது, ஜிம்மி லாய் வித்தியாசமான அவதாரம் எடுத்தார்.
தொழிலதிபர் என்றில்லாமல் ஜனநாயகத்திற்காகவும் அப்போது அவர் குரல் எழுப்பத் தொடங்கினார். தியானன்மெனில் நடந்த படுகொலைகள் குறித்து விமர்சனக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். பின்னர் அவர் ஒரு பதிப்பகத்தை நிறுவினார். படிப்படியாக அவர் ஹாங்காங்கின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமை ஆனார்.
ஆனால், அதே நேரம் அவரது எதிர்ப்பையும், வளர்ச்சியையும் சீனா விரும்பவில்லை. சீனாவில் அவரது பிராண்டின் கடைகளை மூடுவதாக அரசு மிரட்டல் விடுத்தது. அதன் பிறகு லாய் தனது நிறுவனத்தை விலைக்கு விற்றுவிட்டார்.
ஆடை பிராண்டிற்குப் பிறகு, அவர் பல ஜனநாயக சார்பு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடத் தொடங்கினார். டிஜிட்டல் இதழான ‘நெக்ஸ்ட்’ என்பதும் இதில் அடங்கும்.
ஆனால் அவரது செய்தித்தாள்களில் ஒன்றான ‘ஆப்பிள் டெய்லி’ பின்னாளில் மிகவும் சக்திவாய்ந்ததாக தன்னை நிரூபித்தது. ஹாங்காங்கின் ஒவ்வொரு நாளிதழும் சீன அரசு குறித்த அச்சத்தில் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், லாய் சீனாவின் கொள்கைகளை வெளிப்படையாக எதிர்த்தார்.
லாய் எதிர்கொண்ட பயங்கர தாக்குதல்கள்
இதன் காரணமாக ஹாங்காங்கில் பலருக்கு அவர் ஹீரோவாகத் தோன்றினார். ஆனால் சீனா தனது தேசிய பாதுகாப்புக்காக அவரை ஒரு ‘துரோகி’யாக பார்க்கிறது. அவர் பலமுறை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி, லாய் எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. அவர் தொடர்ந்து தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்தார். ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு போராட்டங்களின் முக்கிய முகமாக ஜிம்மி லாய் உருவெடுத்தார் என்பதுடன் 2021-இல் இரண்டு முறை கைது செய்யப்பட்டார்.
ஜூன் 2020-இல் ஹாங்காங்கிற்கான புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியபோது, அது ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஆணி என்று லாய் பிபிசியிடம் கூறினார்.
செல்வாக்கு மிக்க இந்தத் தொழிலதிபர், ஹாங்காங்கும் சீனாவைப் போல ஊழல் நிறைந்ததாக மாறும் என்றும் சட்டத்தின் ஆட்சி இல்லாவிட்டால், உலகின் நிதி மையமாக விளங்கும் ஹாங்காங்கின் அந்தஸ்துக்கு களங்கம் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
2021-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்த அவர், “சீனாவிடம் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரே நபர் டொனால்ட் டிரம்ப் தான்,” என்றார்.
அவரது செய்தித்தாள் ஆப்பிள் டெய்லி அவரது கட்டுரை ஒன்றை முதல் பக்கத்தில் வெளியிட்டது. இக்கட்டுரையின் இறுதியில் ‘திரு அமெரிக்க அதிபர் அவர்களே, தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது.
2021-ஆம் ஆண்டில் பிபிசி உடனான தனது சந்திப்பில், ஜிம்மி தனது சிந்தனையின் ஒரு பார்வையை வெளிப்படுத்தினார்.
நான் சிறைக்கு வெளியே இருந்தால், என் வாழ்க்கை அமைதியாக இருக்கிறது. ஆனால் சிறைக்குள்ளும் என்னால் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
தற்போது அவர் மீதான குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில், வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என லண்டனில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்