ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்று பரவலாக அறியப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாரதிய ஜனதா கட்சியும் ஆழமான பிணைப்பு கொண்டவை என்பது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆனாலும் மிக சொற்பமான மேடைகளிலேயே பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகிய இருவரையும் ஒன்றாக காண முடிகிறது.
அப்படி 2020ஆம் ஆண்டு அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது இருவரையும் சேர்த்து ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது.
அதற்கு பின் திங்களன்று நடந்த ராமர் கோவில் திறப்பு விழாவின் போது மோதி மற்றும் பாகவத் இருவரையும் இணைந்து காண முடிந்தது.
முதலில் மோதியுடன் இணைந்து ராமர் கோவில் கருவறையில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பாகவத் பின்னர் மேடையில் உரையாற்றினார்.
உறவுகளில் மாற்றமா?
பாகவத் தனது உரையில், பிரதமரைப் பாராட்டுவதில் எந்த ஒரு சிறு செய்தியையும் மறக்கவில்லை. “இந்த கும்பாபிஷேக திருவிழாவுக்கு வருவதற்கு முன், பிரதமர் கடுமையான விரதத்தை கடைபிடித்தார். முன்பு அவருக்கு சொல்லப்பட்டதை விட பல மடங்கு கண்டிப்பான விரதத்தை கடைபிடித்தார். அவருடன் எனக்கு பழைய அறிமுகம் உண்டு, அவர் ஒரு துறவி என்று எனக்கு தெரியும்.” என்று அவர் கூறியிருந்தார்.
ஆர்எஸ்எஸ் பாஜகவின் தாய் அமைப்பு என்பதால், பாஜக மீது அது செல்வாக்கு செலுத்துவது இயற்கையானது தான். அது தவிர, பிரதமர் நரேந்திர மோதியும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தவர் தான்.
ஆனால், கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து விவாதத்தில் இருந்த வரும் விஷயம் என்னவென்றால், பாஜக எப்போதும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறதா? இல்லையென்றால், ஆர்எஸ்எஸ் எந்த எல்லை வரை பாஜகவை கட்டுப்படுத்துகிறது? என்பதே அது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மதத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான கோடு மங்கலாகத் தெரிந்தாலும், பாகவத்தின் வருகையை ஒட்டியும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
‘அதிகார சமநிலையில் மாற்றம்’
இதுகுறித்து எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய் சில கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார். இவர் பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முக்கிய தலைவர்கள் குறித்த புத்தகங்களை எழுதியவர்.
மோகன் பாகவத்தை மேடைக்கு அழைத்து, பேசுவதற்கான வாய்ப்பை கொடுப்பது முக்கியம் என்கிறார் அவர். 2020 ஆகஸ்ட் மாதத்தில், கோவிலின் பூமி பூஜையின் போதும், அதே இடம் பாகவத்திற்கு வழங்கப்பட்டதாகவும், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இடையேயான அதிகார சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
“அந்த காலகட்டத்தில் (மோதி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது), ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சிலர் மோதி முதல்வர்தான் ஆனால், அவர் அமைப்பின் பிரச்சாரகரும் கூட , எனவே அவர் சங்க அலுவலகம் வந்து மூத்த உறுப்பினர்களிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், மோதி அங்கு செல்லவில்லை. ஆனால், முதலமைச்சராக இருந்த போது சங்கத்தின் நோக்கங்களை முன்னோக்கி எடுத்து செல்பவராக மட்டும் இருந்தார்” என்று கூறுகிறார் முகோபாத்யாய்.
“மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் சங் பரிவாரத்தின் அலுவலகத்திற்கு செல்ல கூடாது என்று மோதி நினைத்தார். அவர் பிரதமரான போது, ஆர்எஸ்எஸ்-ஐ மூத்த சகோதரன் போல பார்த்த விதம் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். அவர் அப்படியே இருப்பாரா அல்லது பாஜகவின் இரட்டை சகோதர் போல் மாறுவாரா? ஆனால் சில காலத்திற்குப் பிறகு, இருவருக்கும் இடையே சமத்துவம் ஏற்பட்டது மற்றும் ஆர்எஸ்எஸ் மேலாதிக்கம் முடிவுக்கு வந்தது” என்கிறார் முகோபாத்யாய்.
தானே தலைவர் என்பதைக் காட்டிக் கொண்டார் பாகவத்
பாகவத் கருவறைக்குள் நிற்பதன் அர்த்தம் என்ன? இது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிரதிபலிக்கிறதா?
“நான் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. நேரத்தின் தேவைக்கேற்ப சில நேரங்களில், கதை, கதாபாத்திரம் மற்றும் வசனங்கள் மாறுவதாக மட்டுமே நினைக்கிறன். கும்பாபிஷேக விழாவின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் மோதிஜியின் பெருமையை காட்டுவதற்காகவே நடத்தப்பட்டுள்ளது. இது அவரின் அதிகாரத்தை காட்டுவதற்காகவே நடத்தப்பட்டது. காரணம், ஆர்எஸ்எஸ் தனது நீண்டகால இலக்கை நிறைவேற்றிக் கொள்ள மோதிஜியை பயன்படுத்திக் கொள்கிறது. தங்களது இலக்கு எதுவாகினும் அதை நிறைவேற்றிக் கொள்ள பெரும் அரசியல் பலம் தேவை என்பது ஆர்எஸ்எஸ்-க்கு தெரியும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராம்தத் திரிபாதி.
ஆர்எஸ்எஸ் தான் பாஜகவின் தாய் அமைப்பு என்று கூறும் திரிபாதி, ஆனால் சில சமயங்களில் பலரும் ஆர்எஸ்எஸ் என்பது பாஜகவின் கலாசார கிளை என்றும் , அதன் தலைவர் சாதாரணமானவர் போன்றும் நினைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
“ஆனால் இன்று யார் தலைவர் என்பதை காட்டிவிட்டார் மோகன் பாகவத். அதே சமயம் அவர்களின் அரசியல் முகத்தின் தலைவர் மோதி. அப்படியில்லையென்றால் எதற்காக மோகன் பாகவத் கோவிலின் கருவறைக்குள் நிற்க வேண்டும். இதை செய்வதற்கு மோதிஜிக்கு என்ன கட்டாயம்?
பாகவத்தை ஒருமுறை கூட சந்திக்க செல்லாத மோதி
அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அவருக்கும் அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சனுக்கும் இடையே சுமூகமான உறவு இருக்கவில்லை. பல விஷயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின.
அதற்கு பிறகு 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடித்து நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்ற பின், எப்படி கட்சி மற்றும் அரசை ஆட்டுவிக்கும் கயிறு நாக்பூரின் (ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம்) கைகளில் இருக்கிறது என்ற தலைப்பு நீண்ட நாட்களுக்கு விவாதப்பொருளாக மாறியது.
அந்த சமயத்தில், மோதி அரசின் பல அமைச்சர்கள் டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக சென்று தங்களது துறைகளில் நடந்த பணிகள் குறித்து தெரிவிப்பது, தங்கள் வருகையை பதிவு செய்து கொள்வது உள்ளிட்டவற்றை வெளிப்படையாகவே செய்தனர்.
தனக்கு தெரிந்தவரை, மோதி ஒருபோதும் மோகன் பாகவத்தை சந்திக்க சென்றதே இல்லை என்கிறார் நிலஞ்சன் முகோபாத்யாய். “ அப்படி அவர்கள் சந்தித்திருந்தால் , அது மோதி பாகவத்தை தனது வீட்டிற்கு அழைத்ததாக இருக்கும். இதற்கு முன்னால் நடக்காத ஒன்றாக பல சந்தர்ப்பங்களில், பாகவத், மோதியை பகிரங்கமாகப் புகழ்ந்துள்ளார். சங்க பரிவாரங்களுக்குள் அதிகாரச் சமன்பாடுகளில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஒரு மறுசீரமைப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்-இன் தலைவர் இனி எப்போதும் பிரதமருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க முடியாது” என்கிறார் அவர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோதி சங்கத்தின் கொள்கைகளை ஒரு போதும் மீறியது கிடையாது என்கிறார் முகோபாத்யாய்.
அவர் கூறுகிறார், “உண்மையில், அவர் எப்போதும் போலவே ஒரு தீவிர பிரச்சாரகராக செயல்படுகிறார். இந்நிலையில் சங்கம் ஏன் அவர் மீது கோபப்பட வேண்டும்? ஆட்சியின் பாணியில் வேண்டுமானால் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் பிரதமர் அரசாங்கத்தை நடத்துவது தனது வேலை என்றும், அதன் கொள்கைகளில் எதுவும் பிரச்னைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கவும் என்று சங்கத்திற்குச் சொல்லியிருப்பார்” என்று கூறுகிறார் அவர்.
முன்னேறி செல்வது எப்படி?
தற்போதைய முக்கியமான கேள்வி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையிலான உறவு வரும்காலத்தில் எந்த பாதையில் முன்னேறி செல்லும்?
மையத்தில் இருக்கும் பாஜக அரசின் உதவியால் ஆர்எஸ்எஸ் பல்வேறு பலன்களை அடைவதாக நம்புகின்றனர் அரசியல் நிபுணர்கள். அதேபோல், களத்தில் இறங்கி வேலை செய்ய ஆர்எஸ்எஸ்-இன் அடிமட்ட தொண்டர்கள் இல்லாமல் தேர்தல்களில் வெல்வது கடினம் என்று பாஜகவிற்கும் தெரியும். எனவே இருவருக்குமே இருவரும் தேவை. அதனாலேயே இருவருக்கு இடையிலும் எந்த முரண்பாடும் ஏற்படாது.
“வாஜ்பாய் காலத்தைப் போலன்றி, நரேந்திர மோதியால், தனது அரசாங்கத்தின் பல துறைகள் மற்றும் கவுன்சில்களை சங் பரிவாரைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்ப முடியும்” என்கிறார் நிலஞ்சன் முகோபாத்யாய்.
அவரது கூற்றுப்படி, வரும்காலத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு இடையில் முழுமையான ஒருங்கிணைப்பு இருக்கும். “ 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் மற்றும் சுதர்ஷன் இடையில் உறவு சரியாக இல்லை, வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எந்த உதவிகளும் செய்யாததால் ஆர்எஸ்எஸ் இவ்வளவு உற்சாகமாக இல்லை. ஆனால் தற்போது அது போன்ற பிரச்னைகள் எதுவும் இல்லை” என்கிறார் அவர்.
ஆர்எஸ்எஸ் பின்னுக்கு சென்றுவிட்டதாக சிலர் தெரிவிக்கிறார்கள். “மோதி ஆர்எஸ்எஸ்-இன் நோக்கங்கள் மற்றும் சித்தாந்தங்களை சரியாக நிறைவேற்றுகிறார் மற்றும் எதிர்பார்க்கும் முடிவுகளை கொண்டு வருகிறார் என்று ஆர்எஸ்எஸ் புரிந்துக் கொண்டுள்ளது. எனவே மோதியை சுதந்திரமாக விட வேண்டும் என்று அது நினைக்கிறது. எங்காவது மோதி கோட்டை தாண்டி போவது போல் தெரிந்தால், என்ன செய்ய வேண்டும் என்று சிறு குறிப்பை அது வழங்குகிறது” என்று கூறுகிறார் அவர்.
மறுபுறம், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பேசிய மோகன் பாகவத், தனது உரையில் உற்சாகத்திலும் கவனம் தேவை என்று பேசியதாக குறிப்பிடுகிறார் ராம்தத் திரிபாதி.
இதுகுறித்து திரிபாதி கூறுகையில், “அவர் சொன்னது என்னவென்றால் இது என்னுடைய ராணுவம், நான்தான் இதை கட்டுப்படுத்துபவன். இன்று உருவாகியுள்ள இந்த ஆற்றலால், மற்ற இடங்களிலும் அயோத்தி போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்ற பயம் உள்ளது. அப்படி நடந்தால் அதை கட்டுப்படுத்துவது கடினம். எனவே அனைவரும் ஒழுக்கமாக, கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கூறப்பட்டுள்ள திட்டத்தின்படி நிகழ்வுகள் நடக்க வேண்டும், ஊழியர்கள் சொன்னதை மட்டுமே செய்ய வேண்டும் என்று பாகவத் சொல்ல விரும்புகிறார். கலாசார மறுமலர்ச்சி குறித்து பேசுபவர்கள் தன்னிச்சையாக மசூதி அல்லது கல்லறையின் பெயர்களை கொண்டு சண்டையிடக் கூடாது.”
திரிபாதியின் கூற்றுப்படி, ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு, மோதியும் பாகவத்தும் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். காரணம் அவர்கள் ராமராஜ்ஜியம் அமைப்பதை பற்றி பேசியுள்ளனர்.
“தொண்டர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் யாருக்கும் தவறான புரிதல் இருக்க கூடாது. வாஜ்பேயி கூட ஆர்எஸ்எஸ் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கதை(Script) ஆர்எஸ்எஸ்ஸால் எழுதப்பட்டது. அனைவரின் பாத்திரங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டது” என்று கூறுகிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்