ஷியாங் யாங் ஹாங் 3: மாலத்தீவுக்கு வந்திருக்கும் சீன ஆய்வுக் கப்பல் இந்தியாவுடனான உறவை மேலும் மோசமாக்குவது ஏன்?

ஷியாங் யாங் ஹாங் 3: மாலத்தீவுக்கு வந்திருக்கும் சீன ஆய்வுக் கப்பல் இந்தியாவுடனான உறவை மேலும் மோசமாக்குவது ஏன்?

மாலத்தீவு வந்தடைந்த சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் – இந்திய உறவுகளை மேலும் மோசமாக்குமா

சீனாவின் ஆய்வுக் கப்பலொன்று இந்த வாரம் மாலத்தீவுக்கு வந்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றபோதும், அதன் வருகை, இந்தியா, சீனா, மாலத்தீவுக்கு இடையே ஏற்கனவே இருந்த பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

அதிகாரப்பூர்வமான தகவலின்படி, ‘ஷியாங் யாங் ஹாங் 3’ (Xiang Yang Hong 3) என்று பெயரிடப்பட்ட அக்கப்பல், தனது பயணத்தில் ஒரு இடைநிறுத்தமாகவும், பணியாளர்களின் சுழற்சிக்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் மட்டுமே மாலத்தீவு வந்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதெனில் இது முற்றிலும் ஆபத்தில்லாத ஒரு விஷயம்.

ஆனால், இந்தியா இதனை அப்படிப் பார்க்கவில்லை. இக்கப்பலின் வருகை இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு ராஜதந்திர ரீதியான அவமானம் ஆகும். இக்கப்பல் தரவுகளைச் சேகரிப்பதற்காக வந்திருக்கலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். இத்தரவுகளை பிற்காலத்தில் சீன ராணுவம் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளில் பயன்படுத்தலாம் என்றும் அஞ்சப் படுகிறது.

இருப்பினும், சீன வல்லுநர்கள், இந்தக் கவலைகள் ஆதாரமற்றவை என்று தெரிவிக்கின்றனர்.

சீன ராணுவத்தின் முன்னாள் மூத்த கர்னலான ஷௌ போ (Zhau Bo) பிபிசியிடம் பேசுகையில், சீனக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமானது தான் என்றும், அந்நடவடிக்கைகள் முற்றிலும் சட்டப்பூர்வமானவை என்றும் தெரிவித்தார்.

“சில சமயம், கப்பல்களில் எரிபொருள், உணவு, நீர் ஆகியவை நிரப்பப்பட வேண்டியிருக்கும். இந்திய அரசு, இதனை ஒரு பிரச்னையாக மாற்றக்கூடாது. இந்தியப் பெருங்கடல் இந்தியாவுக்குச் சொந்தமானதல்ல,” என்றார் ஷௌ போ. தற்போது அவர் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் (Tsinghua university) பணியாற்றி வருகிறார்.

மாலத்தீவு வந்தடைந்த சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் – இந்திய உறவுகளை மேலும் மோசமாக்குமா

பட மூலாதாரம், Getty Images

இந்தக் கப்பல் இலங்கைக்கு ஏன் செல்லவில்லை?

ஆனால், சீனா தனது கப்பல்களை இந்தியாவின் கடற்பரப்பிற்கு அருகில் அனுப்புவது இது முதன்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்பு நகரில் இரண்டு சீனக் கப்பல்கள் தங்கள் பயணத்தின் இடையே நின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. இது இந்தியாவில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

சீனா இலங்கைக்குப் பலகோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியிருந்த நிலையில் அக்கப்பல்கள் இலங்கைக்கு வந்தன.

உண்மையில், ஷியாங் யாங் ஹாங் 3 கப்பல், மாலத்தீவுக்கு வரும் முன் இலங்கையில் தங்கி பொருட்களை நிரப்பிவரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அத்திட்டம் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.

“எதிர்வரும் ஓராண்டில், நாங்கள் எங்கள் தொழில்நுட்பத்தையும் திறனையும் இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு வளர்த்துக் கொள்ள உள்ளோம்,” என்று அவர் கூறினார்.

சீனக் கப்பல்
படக்குறிப்பு,

வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய பகுதிகளிலும் ஜியாங் யாங் ஹாங் 3 கப்பல் முன்னதாக ஆய்வு செய்தது

ஆனால், சீனக் கப்பல்கள் வருவதை இலங்கை நிறுத்தி வைத்திருப்பது, இந்தியாவின் கடுமையான ஆட்சேபனையின் விளைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவின் ஆட்சேபனைகள் மாலத்தீவில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. 1,200 தீவுகளால் ஆன இந்த நாடு பலகாலமாக இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சீன ஆதரவாளரான முகமது முய்சு அதை மாற்றப் பார்க்கிறார்.

‘இந்தியாவே வெளியேறு’ என்ற பரப்புரையை முய்சு துவங்கினார். மாலத்தீவில் இருந்த 80 இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பிப் பெறுமாறு அவர் கூறியிருந்தார். இந்தியா முன்பு மாலத்தீவுக்கு வழங்கியிருந்த மூன்று தேடுதல் மற்றும் மீட்பு விமானங்களைப் பராமரிக்கவே அவர்கள் அங்கு இருப்பதாக இந்தியத் தரப்பு தெரிவிக்கிறது.

மாலத்தீவின் நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது வரும் மார்ச் 15-ஆம் தேதிக்குள், வீரர்களை திரும்பப்பெறுமாறு முய்சு கூறியிருந்தார். கடந்த வாரம், தில்லியில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா வீரர்களைத் திரும்பப் பெற சம்மதித்ததாகக் மாலத்தீவு வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

முதல் பகுதி வீரர்கள் மார்ச் மாதம் 10-ஆம் தேதியும், மீதமுள்ளவர்கள் மே மாதம் இரண்டாம் வாரமும் திரும்பி அழைத்துக்கொள்ளப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மாலத்தீவு வந்தடைந்த சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் – இந்திய உறவுகளை மேலும் மோசமாக்குமா

பட மூலாதாரம், Getty Images

வேகமாக வளரும் விரிசல்

இந்தியா-மாலத்தீவு உறவுகள் வெகுவாக மோசமடைந்திருக்கின்றன.

மாலத்தீவின் கடற்பரப்பை ஆய்வு செய்ய மாலத்தீவின் முந்தைய ஆட்சியில் கையெழுத்திடப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என கடந்த டிசம்பர் மாதம் முய்சு அறிவித்திருந்தார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட இந்தியக் குடியரசு தின விழாவில் மாலத்தீவு அரசின் மூத்த தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் அதே சமயம், கடந்த மாதம் ஐந்து நாள் பயணமாகச் சீன சென்றிருந்த முய்சுவுக்கு அங்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்குப்பின் சீன அரசின் பல உயர்மட்ட அதிகாரிகள் மாலத்தீவுகளுக்குச் சென்றிருக்கின்றனர். சீனா நிதியளிக்கும் பல கட்டுமானத் திட்டங்களையும் முய்சு அறிவித்திருக்கிறார்.

இவற்றின் மூலம் இந்தியா கவலையடைவது இயற்கையானது, ஏனெனில் மாலத்தீவின் அமைவிடம் மூலோபாய ரீதியில் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. அதனை சீனா நெருங்குவதை இந்தியா விரும்பாது.

பிபிசியிடம் பேசிய முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண், மாலத்தீவு இந்தியாவின் தெற்கு எல்லையில் இருப்பதால் அது மிகவும் முக்கியமானது என்றார். “இலங்கையில் நடந்ததைப்பற்றி இந்தியாவுக்குத் தீவிரமான கவலைகள் இருந்ததுபோலவே, மாலத்தீவில் நடக்கூடியதைப் பற்றியும் இந்தியாவுக்குக் கவலைகள் இருக்கும்,” என்றார் அவர்.

சீனக் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இதற்கு முன் இலங்கைக்கு சீன ஆய்வுக் கப்பல் வந்தபோது இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது

மாலத்தீவு எதிர்கட்சிகள் கூறுவது என்ன?

போக்கை மாற்றிக்கொள்ள முய்சுவைக் கேட்டு வருகிறார்கள். இந்தியா போனற அளவில் பெரிய அண்டை நாட்டினைப் பகைத்துக்கொள்வது மாலத்தீவுக்கு எந்த வகையிலும் நன்மை தராது என்று அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் , ஜனநாயகக் கட்சி முய்சுவுக்கு எதிரான பதவிநீக்க முன்னெடுப்புகளைக் கொண்டுவரத் திட்டமிடுவதாகக் கூறியிருந்தது.

உணவு, கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மாலத்தீவு இந்தியாவை நம்பியிருக்கிறது. மாலத்தீவிலிருந்து பல மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகின்றனர்.

மாலத்தீவின் தலைநகரான மலேவில் வசிக்கும் வழக்கறிஞரும் எதிர்கட்சியைச் சேர்ந்தவருமான ஐக் அகமது ஈசா, “இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் மாலத்தீவு கொஞ்சம் எல்லை தாண்டிச் சென்றுவிட்டது என்று பலரும் நினைக்கிறார்கள்,” என்று பிபிசியிடம் கூறினார்.

இதுகுறித்து கருத்து கேட்டபோது மாலத்தீவு அதிபர் அலுவலகமோ, வெளியுறவுத்துறை அமைச்சகமோ பதிலளிக்கவில்லை.

சீனா இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சி மற்றும் வணிகம் சார்ந்து பல பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது. அதற்காக மேலும் பல கப்பல்களை சீனா இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பலாம். இதனை எதிர்கிள்வது இந்தியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

சீனாவின் விமானக் கப்பல்களும் அவற்றுக்கான சேவைகளை வழங்கும் கப்பல்களும் இந்தியப் பெருங்கடலை வந்தடையும் என்று ஷௌ போ கூறினார். “இலங்கையில் செய்ததுபோல சரக்குகளை நிரப்பும் அவற்றின் செயல்பாடுகளை இந்தியா தடுத்தால், சீனா மிகுந்த ஆத்திரமடையும்,” என்று அவர் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *