அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உண்மையான நண்பர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். போர் நடக்கும் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றல்ல. எனினும் தன்னுடைய நேரடி சந்திப்பு சில தீர்வுகளை கொண்டு வரும் என்ற நோக்கில் அமெரிக்க அதிபர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
அரபு தலைவர்களுடனான பைடன் சந்திப்பு ரத்து
இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவையும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்த பயணத்தின் போது இஸ்ரேல் பிரதமர் மட்டுமல்லாமல் அரபு நாடுகளின் தலைவர்களையும் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. காஸாவுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கும் பாதையை இஸ்ரேல் திறக்கவும், இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவும் இந்த சந்திப்புகளின் போது பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காஸாவில் நேற்று மருத்துவமனை மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு, அரபு நாட்டு தலைவர்களை அமெரிக்க அதிபர் சந்திப்பது ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்கு வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை கட்டி அணைத்து வரவேற்றார்.
“இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமம்”
பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது முதலில் பேச ஆரம்பித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபரின் வருகைக்கு நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், ‘தெளிவான அறநெறி’யுடன் இருப்பதற்காகவும் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
“நாகரிக சக்திகளுக்கும், காட்டுமிராண்டித்தனமான சக்திகளுக்கும் இடையே தெளிவான கோடு ஒன்றை நீங்கள் சரியாக வரைந்துள்ளீர்கள்” என்று அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன் X தளத்தில் ஹமாஸின் நடவடிக்கைகள் கொடூரமான தீமை என குறிப்பிட்டிருந்தது சரியே எனவும் நெதன்யாகு கூறினார்.
அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலை அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதலோடு ஒப்பிட்டு பேசிய நெதன்யாகு, ஹமாஸ் தாக்குதல் இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமம் என்றார்.
“ஜோ பைடன் உண்மையான நண்பர்”
ஐஎஸ்ஐஎஸை எதிர்கொண்ட போது எப்படி உலகம் ஒன்றாக நின்றதோ அதே போன்று ஹமாஸை வீழ்த்த நாகரிக உலகம் ஒன்றிணைய வேண்டும் என நெதன்யாகு அறைகூவல் விடுத்தார்.
“நாம் ஹமாஸை வீழ்த்துவோம். நம் வாழ்விலிருந்து இந்த பயங்கர அச்சுறுத்தலை நீக்குவோம்” என்று பேசிய இஸ்ரேல் பிரதமர், இது எனது நாட்டுக்காக மட்டுமல்ல, அனைவருக்காகவும் தான்” என்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை “உண்மையான நண்பன்” என்று அழைத்த நெதன்யாகு போர் நேரத்தில் இஸ்ரேலுக்கு வருகை தரும் அவரது நெகழ்ச்சியான முடிவை பாராட்டுவதாக தெரிவித்தார்.
பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோதல் நேரத்தில் அமெரிக்கா யாருடன் நிற்கிறது என்பதை காண்பிக்கவே தான் இஸ்ரேல் வந்ததாக தெரிவித்தார்.
அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஹமாஸ் நடத்திய படுகொலைகளை அவர் தொடர்ந்து விவரித்தார். 31 அமெரிக்கர்கள் உட்பட 1,300 பேரை, “கொன்று குவித்தனர்” என்று சொல்வது “மிகையானது அல்ல” என்று அவர் கூறினார்.
குழந்தைகள் உட்பட இஸ்ரேல் கைதிகள் பற்றியும் அவர் பேசினார். “ஹமாஸிடமிருந்து ஒளிந்திருந்த அந்த குழந்தைகள் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது” என்றார்.
‘இஸ்ரேல் மக்களின் துணிவு ஆச்சர்யமானது’ – பைடன்
அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் உறுதியளித்தார். “இங்கிருந்து என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
இஸ்ரேல் மக்களின் “துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தீரம்” ஆச்சர்யம் தரக்கூடியது என்று அவர் கூறினார். “நான் இங்கு இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றும் அவர் கூறினார்.
நேற்று இரவு காஸாவில் மருத்துவமனை மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து பேசிய பைடன், இஸ்ரேல் பிரதமரை பார்த்து, அது “மற்றொரு குழுவினரால்” செய்யப்பட்டது போல தெரிகிறது என்றார்.
இந்த நிகழ்வால் “நான் மிகவும் வருத்தமடைந்து, கோபமடைந்துள்ளேன்” என்று பைடன் கூறினார்.
“நான் பார்த்ததன் அடிப்படையில் அது நீங்கள் இல்லை, வேறு யாரோ செய்ததாகத் தெரிகிறது. ஆனால் இதைப் பற்றி உறுதியாக தெரியாத பலர் இருக்கிறார்கள், எனவே நாம் பலவற்றை கடக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
அமெரிக்கா விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் என்ன செய்கின்றன?
காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த தயாராகும் இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதேபோல், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கக் கூடாது என்று ஐ.நா வாயிலாக ஈரானும் எச்சரித்துள்ளது. மற்ற அரபு நாடுகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிப்பது மக்களிடையே கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இஸ்ரேலுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்துவதுடன் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி எச்சரிக்கும் விதத்தில் 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்களை கொடுக்கப் போவதாகவும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.
அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டாலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்