இது குறித்து, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருக்கும் நாளிதழ் செய்தியில், நாளை தமிழ்நாட்டு கோயில்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை தொடர்பாக சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்ய அரசு தடை உத்தரவு போட்டிருப்பதாகவும், ராமர் கோயில் நிகழ்ச்சியை பொது இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்வதை போலீஸார் தடுப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் மற்றுமொரு பதிவில், “நேரலை ஒளிபரப்பு தடையை நியாயப்படுத்த தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமற்ற முறையில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கூறி வருகிறது. அயோத்தி தீர்ப்பு வந்த நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நாளில்கூட நாட்டின் எந்தப் பகுதியிலும் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டில், ராமரைக் கொண்டாட மக்கள் தாமாக முன்வந்து பங்கேற்பது, இந்து விரோத தி.மு.க-வை கொந்தளிக்க வைத்திருக்கிறது” நிர்மலா சீதாராமன் பதிவிட்டிருக்கிறார்.
நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், தி.மு.க இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என்று பதிவிட்டு குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com