விசாகப்பட்டினம் அருகே புதிய ரயில்வே கிராசிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணிகள் மீது, விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த விசாகா-ராயகடா பயணிகள் ரயில் பின்புறமாக மோதியது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்திருப்பதை பிபிசி உறுதி செய்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ரயில் பெட்டிகளின் நொறுங்கிய பாகங்களுக்குள் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில் விபத்து நேரிட்டது எப்படி?
ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே விசாகப்பட்டினம்-ராய்கடா பயணிகள் ரயில் அதே தண்டவாளத்தில் முன்னே சென்று கொண்டிருந்த விசாகப்பட்டினம் – பலாசா பயணிகள் ரயில் மீது மோதியது. ரயில்வே கிராசிங்கில் விசாகப்பட்டினம் – பலாசா பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்த போது, அதன் மீது பின்புறமாக விசாகா-ராயகடா பயணிகள் மோதியது. இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் லக்கோஜு ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேதமடைந்த பெட்டிகளில் மேலும் சில உடல்கள் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்” என்றார்.
10 காயம்
இந்த விபத்தில் மூன்று பெட்டிகள் சேதமடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.
விபத்து நடந்த பகுதியில் இருந்து வீடியோக்களை ஆய்வு செய்தபோது, பல பெட்டிகள் பலத்த சேதம் அடைந்திருப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ்கள் அங்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது.
இந்த சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் அறிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி பேசுகையில், “சினராப்பள்ளியில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் தகவல் தெரிவிக்கும் வகையில், விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 94935 89157 என்ற உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 89780 80006 என்ற ரயில்வே உதவி எண்ணை தொடர்பு கொண்டும் தகவல் பெறலாம் என ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்