எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்தக் கட்டுரையில் புகைப்பிடிக்கும் படங்கள் உள்ளன.
ஏப்ரல் 9, 1996. அதிகாலை 3.30 மணி.
வழக்கம்போல இரவு உணவை முடித்துவிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் நாகர்கோவில் மாவட்ட கிளைச் சிறையில் இருந்த சிறைவாசிகள்.
அப்போது, சிறையின் சுவர் மீது ஏணி போட்டு ஏறிய 20க்கும் மேற்பட்டோர், சிறை வளாகத்திற்குள் குதித்தனர். தடுக்க முற்பட்ட சிறைக் காவலர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிய அந்த மர்ம நபர்கள், ஒரு சிறை அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த நபரை சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
இதில், வெட்டப்பட்ட நபர் உயிரிழக்க, அவரின் தலையை மட்டும் வெட்டி எடுத்துச் சென்று, நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
தமிழ்நாட்டில் சிறையில் வைத்து ஒருவர் கொலை செய்யப்படுவது அதுவே முதல் முறையாகப் பார்க்கப்பட்டது. இதில், உயிரிழந்தவர்தான் 1990களில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான லிங்கம் என்கிற முத்துலிங்கம். அப்போது அவரது வயது 36.
அவர் இறந்தபோது, அவருக்கு ஐந்து வயதில் மகளும், மூன்று வயதில் சுஜித் என்ற மகனும் இருந்தனர். லிங்கம் கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டு, லிங்கத்தின் மகன் சுஜித், தனது தந்தையைக் கொன்றவர்களில் ஒருவரான சகாயத்தைக் கொலை செய்தார்.
யார் இந்த லிங்கம்? அவர் எப்படி ரவுடியானார்? அவரது மகன் தற்போது என்ன செய்கிறார்?
1987இல் கபடி வீரராக இருந்த லிங்கம்
ஜூன் 15, 1987இல் ஏர்வாடியில் நடந்த கபடிப் போட்டியில், அப்பகுதியில் உள்ள அணிகளுக்கு இடையே கபடிப் போட்டி நடந்தது. அதில், அந்த வட்டாரத்தில் பிரபலமான கபடி அணியாக இருந்த லிங்கத்தின் கபடி அணியும், அந்தப் பகுதியில் குற்றப் பின்னணி கொண்ட ஜெயசீலனின் அணியும் மோதின.
போட்டியில் அவ்வப்போது இரு அணிகளுக்கும் இடையே உரசல் இருந்து வந்த நிலையில், சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மின்சாரம் வந்தபோது, லிங்கத்தின் எதிர் கபடி அணியில் இருந்த ஜெயசீலன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ந்த லிங்கம் அணியினர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டனர்.
“இதில் லிங்கத்திற்கு உண்மையிலேயே தொடர்பு இருந்ததா என்பது அப்போதிருந்து மர்மமாகவேதான் உள்ளது. ஆனால், ஜெயசீலனுக்கு சிலருடன் அப்போது பகை இருந்தது உண்மை. ஆனால், இந்தக் கொலையால் அதிகம் பாதிக்கப்பட்டது லிங்கம்தான்,” என்கிறார் நாகர்கோவில் மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற டிஎஸ்பி இளங்கோ. இந்தச் சம்பவம் நடந்தபோது, இவர் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றினார்.
அதற்கான காரணம் குறித்து விரிவாகப் பேசிய அவர், “லிங்கத்திற்கு அப்போது வயது 24 தான் இருக்கும். அவர் காவல்துறையில் தேர்வாகி, சான்றிதழ் சரிபார்ப்பிற்காகக் காத்திருந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த வேலை கிடைக்கவில்லை,” என்கிறார் அந்த அதிகாரி.
ஜெயசீலன் கொலை வழக்கில், லிங்கம் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அதுதான், லிங்கத்தின் மீது பதியப்பட்ட முதல் வழக்கு. இந்தக் கொலை வழக்கில் லிங்கத்தை தேடிக் கொண்டிருந்த காவல்துறையினர், தலைமறைவான லிங்கத்தை பிடிக்க முடியாமல், அவரது நண்பரான பிரபுவை கைது செய்தனர்.
நாகர்கோவில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த பிரபு, பி.ஏ முடித்துவிட்டு, சட்டப்படிப்பு படித்து வழக்கறிஞராக முயன்று கொண்டிருந்தார். இந்த வழக்கில், பிரபுவும் கைது செய்யப்பட்டார். இதுதான் லிங்கமும், பிரபுவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கான ஆரம்பம் என்கிறார் இளங்கோ.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு, சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட அவர்கள், பின்னாளில் அப்பகுதியில் முக்கியக் குற்றவாளிகளாகவும் மாறினர்.
லிங்கம்-பிரபு இடையே உருவான பகை
ஒரு காலத்தில் நட்பாக இருந்த இருவரும், 1990களில், பகைவர்களாக மாறினர். அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுவதாக இவர்களின் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதில் ஒரு காரணம், லிங்கம் ஆசையாக வாங்கிய விலை உயர்ந்த அம்பாசிடர் கார். ஒரு சமூக விரோத செயலில் ஈடுபட்டபோது, காவல்துறையிடம் அந்த அம்பாசிடர் கார் சிக்கிக் கொண்டதாகவும், அப்போது, அந்த வழக்கை முடித்து காரை வெளியே எடுத்த வர உதவியது பிரபுவின் அண்ணன் தேவராஜ் என்றும் கூறுகிறார் மற்றொரு ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி.
“ஆனால், இப்படி வெளியே எடுத்த காரை, பிரபுவிடமே விற்றுள்ளார் லிங்கம். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கிய பிரபு, அதை அதிக விலைக்கு வேறு ஒருவரிடம் விற்றதாகவும், அதனால் இருவருக்கு இடையிலும் உரசல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தவிர, பெண்கள் விஷயத்தில் பிரவுவின் தவறான நடவடிக்கைகளால் அவருக்கும் லிங்கத்திற்கும் மோதல் ஏற்பட்டதாக வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது, ”என்றார் அந்த அதிகாரி.
ஆனால், அதற்குp பிறகு, லிங்கம் மற்றும் பிரபு தரப்பினர் மாறிமாறி கொலை வழக்குகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பிரபு
பின்னர், 1990களின் முற்பகுதியில், காவல்துறையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் கொலை செய்யப்பட, அந்த வழக்கில், இருதரப்பினர் மீதும் சந்தேகம் இருந்தாலும், பிரபுவின் கூட்டாளிகளைக் கைது செய்தது தாமரைக்குளம் காவல்துறை. தகவலறிந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள், காவல் நிலையத்திற்குள் புகுந்து தங்களது கூட்டாளிகளை மீட்டுச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு, பிரபு நடத்தி வந்த சாராயக்கடையை மர்ம நபர்கள் தீ வைக்க, அதற்குக் காரணம் லிங்கம்தான் என சந்தேகித்துள்ளார் பிரபு. இதற்குப் பழி வாங்குவதற்காக, லிங்கத்தின் வீட்டைக் கொளுத்தியுள்ளனர், பிரபுவும் அவரது கூட்டாளிகளும்.
இதற்குப் பதிலடியாக, கன்னியாகுமரியில் உள்ள பிரபுவின் மற்றொரு சாராயக் கடையை அடித்து நொறுக்கினர் லிங்கத்தின் கூட்டாளிகள்.
அதன் பிறகு, இரு தரப்பிலும் மாறிமாறி கொலைகள் நடக்க, லிங்கமும் அவரது கூட்டாளிகளும், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள பிரபுவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கி, வீட்டில் இருந்த பிரபுவையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட லிங்கம்
இந்நிலையில், ஏப்ரல் 7, 1994இல் நடந்த ஒரு கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட லிங்கம், ஜூலை 30, 1995 அன்று நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏப்ரல் 9ஆம் தேதி, 1996 அன்று காலை 3.30 மணியளவில் சிறைக்குள் இறங்கிய மர்ம நபர்கள், லிங்கத்தை சரமாரியாக வெட்டினர். பிறகு, அவரது தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்துச் சென்று, மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைத்துவிட்டுச் சென்றனர்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 36 பேரில், 12 பேர் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கில், சிறைக்குள் இறங்கி கொலை செய்தவர்களில், இருவர் பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தனர்.
அதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 27 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த செல்வம் என்பவரை நாகர்கோவில் போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்
வழக்கு முடிந்த நிலையில், சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அவர்களின் கவனக்குறைவால்தான் தனது கணவர் கொலை செய்யப்பட்டார் என லிங்கத்தின் மனைவி ரோகிணி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு, அவருக்கு வட்டியுடன் ஆறு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, ரோகினிக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு பழிதீர்த்த மகன்
லிங்கம் இறக்கும்போது அவருக்கு 36 வயது. அப்போது, ஐந்து வயதில் மகளும், மூன்று வயதில் மகனும் இருந்தனர்.
தந்தை இறக்கும்போது மூன்று வயதாக இருந்த லிங்கத்தின் மகன் சுஜித் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தந்தை கொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, நீதிமன்ற தண்டனை முடிந்து 2008ஆம் ஆண்டு விடுதலையாகி வந்த சகாயம் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
பழகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 2013ஆம் ஆண்டு, தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து சகாயத்தை வெட்டிக் கொலை செய்தார் சுஜித்.
தந்தையின் இறப்புக்கு 17 ஆண்டுகள் கழித்துப் பழிவாங்கிய சுஜித் அந்த வழக்கில் கைதானார். பின்னர் சிறு சிறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2022ஆம் ஆண்டு குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்