உடல்நலம்: இளம் வயதில் உடல் உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து – கண்டறிவது எப்படி?

உடல்நலம்: இளம் வயதில் உடல் உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்து - கண்டறிவது எப்படி?

உங்களை விட உங்கள் உடல் உறுப்புகளுக்கு அதிக வயதாகின்றனவா?

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு 45 வயது இருக்கலாம். அப்போது, உங்கள் உடலில் உள்ள இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றுக்கும் 45 வயது தானே ஆக வேண்டும்.

ஆனால் சிலருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது, இளம் வயதில் சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்புகூட ஏற்படுகிறது. அதாவது உங்களுக்கு 45 வயதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகத்தின் வயது 60 ஆக இருக்கலாம், இருதயத்தின் வயது 65 ஆக இருக்கலாம்.

உங்கள் உண்மையான வயதைவிட உங்கள் உறுப்புகள் பல்வேறு காரணங்களால் வேகமாக முதிர்வடைந்து வருகின்றன. இது எப்படி நமக்குத் தெரிய வரும்?

பொதுவாக உடலில் நோய் அல்லது அதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்படும்போதுதான் நமக்குத் தெரியும். ஆனால் தற்போது நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத போதே, முன்கூட்டியே என்ன உடல்நலக் கோளாறு ஏற்படக்கூடும் என்று கணிக்க முடியும். எந்தெந்த உறுப்புகளுக்கு என்ன வயதாகிறது என்பதைக் கண்டறிவதன் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

உறுப்புகளின் வயதை எப்படி தெரிந்து கொள்வது?

வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம், Getty Images

ரத்த பரிசோதனை உங்கள் உள்ளுறுப்புகள் எவ்வளவு வேகமாக முதிர்வடைகின்றன என்பதையும், எந்த உறுப்புகள் விரைவில் செயலிழக்கக்கூடும் என்பதையும் கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு ஒன்று, இதயம், மூளை மற்றும் நுரையீரல் உட்பட 11 முக்கிய உடல் பாகங்களைக் கண்காணிக்க முடியும் எனக் கூறுகிறது.

ஆயிரக்கணக்கான நடுத்தர வயதினரிடம் இந்தப் பரிசோதனைகள் ஆய்வின் ஒரு பகுதியாகச் செய்யப்பட்டுள்ளன. ஆரோக்கியமான 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பு விரைவாக முதிர்வடைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருக்குப் பல உறுப்புகள் தங்கள் வயதைவிட முதிர்ந்தவையாக இருக்கின்றன.

பரிசோதனை செய்து தெரிந்துகொள்வது பயமுறுத்துவதாக இருந்தாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்தப் பரிசோதனை ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எந்த உறுப்புகள் வேகமாக முதிர்ச்சி அடைகின்றன என்பதை அறிவது, எதிர்காலத்தில் எந்த உடல்நல பிரச்னைகள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க உதவும் என்று நேச்சர் ஆய்விதழில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடல் உறுப்புகள் – வயது இடைவெளி எவ்வளவு ஆபத்தானது?

வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம், Getty Images

ஒருவரின் வயதைவிட முதிர்ந்த இதயம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் விரைவாக முதிர்வடையும் மூளை, டிமென்ஷியாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் விரைவாக முதிர்வடைவது அடுத்த 15 ஆண்டுகளில் சில நோய்கள் மற்றும் இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என ஆய்வு கூறுகிறது.

ஆய்வில் சோதிக்கப்பட்ட உடல் உறுப்புகள்

  • மூளை
  • இதயம்
  • கல்லீரல்
  • நுரையீரல்
  • குடல்
  • சிறுநீரகம்
  • கொழுப்பு
  • ரத்த நாளங்கள் (நாடி)
  • நோய் எதிர்ப்பு திசு
  • தசை
  • கணையம்

இந்த பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம், Getty Images

எந்த உறுப்புகள் எவ்வளவு வேகமாக முதிர்வடைகின்றன என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிய, ஆயிரக்கணக்கான புரதங்களின் அளவுகளை ரத்த பரிசோதனை கணக்கிடும். ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்துவமான புரத அமைப்புகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏராளமான ரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் நோயாளி தரவுகளைப் பயன்படுத்தி கணிப்புகளைச் செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் டோனி வைஸ்-கோரே, “ஒவ்வொரு நபருக்கும் இந்த உறுப்புகளின் ஒவ்வோர் உயிரியல் வயதையும், தீவிர நோய்கள் இல்லாத பெரிய குழுவினருடன் ஒப்பிடும்போது, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 18.4% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பு சராசரியைக் காட்டிலும் மிக வேகமாக முதிர்வடைந்து வருவதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்றார்.

மேலும், “அடுத்த 15 ஆண்டுகளில் குறிப்பிட்ட உறுப்பில் நோய்க்கான அதிக அபாயத்தில் இந்த நபர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று விளக்கினார். பல்கலைக்கழகம் இப்போது சோதனைக்கான காப்புரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. அது எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்டு விற்கப்படலாம்.

உண்மையிலேயே இது எவ்வளவு நன்றாகக் கணிக்கிறது என்பதைச் சரிபார்க்க மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

உயிரியல் முதிர்வு என்பது மெதுவாக காலப்போக்கில் நடைபெறுவது அல்ல, திடீரென குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறக் கூடியது என டாக்டர் வைஸ்-கோரேயின் முந்தைய சில ஆய்வுகள் கூறுகின்றன. உறுப்பு முதிர்வுகள் 30 வயதில், 60களின் ஆரம்பத்தில் மற்றும் 70களின் பிற்பகுதியில் விரைவான ஏற்படுகிறது என்று அவரது ஆய்வு கூறுகிறது.

பயோ மார்க்கர்களின் முக்கியத்துவம் என்ன?

வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம், Getty Images

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் வயது தொடர்பான ஆரோக்கியம் மற்றும் நோய்கள் பற்றிய நிபுணரான பேராசிரியர் ஜேம்ஸ் டிம்மோன்ஸ் ரத்தத்தில் உயிரியல் வயதுக்கான குறிகளை (பயோ மார்கர்) ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வு மரபணு மாற்றங்களை அடிப்படையாகk கொண்டது.

டாக்டர் வைஸ்-கோரேயின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், மேலும் பல மக்களிடம், குறிப்பாகp பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளம் வயதினரிடம் ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கூறினார்.

டாக்டர் வைஸ்-கோரே, “50,000 அல்லது 1,00,000 ஆரோக்கியமான நபர்களிடம் இந்த ஆய்வை செய்ய முடிந்தால், அவர்களின் தனிப்பட்ட உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, மக்களின் உடலில் விரைவாக முதிர்ச்சி அடையும் உறுப்புகளைக் கண்டுபிடிக்க முடியும். மேலும் அவர்களது நோய் தீவிரமடைவதற்கு முன்பே, அவர்களைக் காப்பாற்ற முடியும்,” என்கிறார்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முதுமை உயிரியல் நிபுணரான பேராசிரியர் பால் ஷீல்ஸ், ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள, தனிப்பட்ட உறுப்புகளை மட்டுமல்ல, முழு உடலையும் பார்ப்பது முக்கியமானது என்று கூறினார்.

நோய்களை முன்கூட்டியே கண்டறிவது உதவிகரமானது என்றாலும், இதனால் ஏற்படும் மன உளைச்சலும் சேர்த்தே கவனிக்கப்பட வேண்டும் என்கிறார் ஏஜ் யுகே என்ற அமைப்பைச் சேர்ந்த கரோலின் ஆப்ரஹாம்ஸ்.

“தனக்கு ஒரு நோய் ஏற்படப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் நபர், அந்த உண்மையுடன் எப்படி வாழப் போகிறார் என்பதையும் சேர்த்தே கையாள வேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் உணர்வுரீதியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்,” என்கிறார் அவர்.

வேகமாக வயது முதிர்வையும் உறுப்புகள்

பட மூலாதாரம், Getty Images

பயோ மார்கர்கள் குறித்து குவஹாத்தி மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் பல்லவி கோஷ், பிபிசியின் அஞ்சலி தாஸிடம் கூறியபோது, “பயோ மார்கர்கள் உடலின் செல்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியும். ஒருவரின் உடல்நலப் பிரச்னைகள் குறித்து சீக்கிரமே எச்சரிக்கை மணி எழுப்பும்,” என்றார்.

மருத்துவத்தில் ஒரு நோயை முன்கூட்டியே கண்டறியவும் நோயைக் கண்காணிக்கவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும் என அனைத்து கட்டங்களிலும் பயோ மார்க்கர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்கிறார் அவர்.

“இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் ஒரே நோய்க்கு இருவேறு நபர்களிடம் வெவ்வேறு அறிகுறிகள் இருக்கலாம். பயோ மார்க்கர் அந்த நோயை குறிப்பாகக் கண்டறிந்து அதன் தீவிரத் தன்மையை அறிய உதவுகிறது,” என்றார்.

ஆயிரக்கணக்கான பயோமார்க்கர்கள் இருப்பதாகவும் அவை 600க்கும் மேற்பட்ட உடல்நல சிக்கல்களைக் கண்டறியக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். பயோ மார்க்கர்கள் குறித்த ஆய்வு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது என்றாலும் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்று பேராசிரியர் பல்லவி கூறுகிறார்.

அதோடு, இதயம், மூளை, சிறுநீரகம், நுரையீரல், எலும்பு ஆகியவற்றின் வயது முதிரும் தன்மை குறித்து மேலும் தெளிவான புரிதல் நமக்குத் தேவை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *