இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களை இன்றும் தேடும் தமிழர்கள் – அந்த நாளில் என்ன நடந்தது?

இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களை இன்றும் தேடும் தமிழர்கள் - அந்த நாளில் என்ன நடந்தது?

பேத்தியை தேடும் மூதாட்டி
படக்குறிப்பு,

இறுதிக் கட்ட யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுகின்றனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர்.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு இந்த தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

இறுதிக் கட்ட யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களிலும் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் வவுனியா நகரில் சுமார் 2380 நாட்களை கடந்து இன்றும் நடந்து வருகின்றது.

தசாப்தங்களாக தொடரும் தேடல்

இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இன்றும் தேடல்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.

இவ்வாறு தொடர் தேடல்களில் ஈடுபடும் சிலரை, பிபிசி தமிழ் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியது.

வவுனியாவைச் சேர்ந்த 52 வயதான வெலன்டினா, இறுதி யுத்தத்தில் தனது தாயான விக்டோரியா ராணியை தொலைத்து இன்றும் தேடி வருகின்றார்.

திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து வரும் வெலன்டினா, 14 வருடங்கள் தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

தாயை தேடும் மகள்
படக்குறிப்பு,

வவுனியாவைச் சேர்ந்த 52 வயதான வெலன்டினா, இறுதி யுத்தத்தில் தனது தாயான விக்டோரியா ராணியை தொலைத்து இன்றும் தேடி வருகின்றார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி என்ன நடந்தது?

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி. இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர தாக்குதல்களில் வெலன்டினாவின் தாய் பலத்த காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த தாயை, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீசப்பட்டிருந்த பாய் ஒன்றில் வைத்து, ராணுவ பகுதியை நோக்கி வெலன்டினா இழுத்து கொண்டு வந்துள்ளார்.

அங்கு நிலைக் கொண்டிருந்த ராணுவ அதிகாரிகள், காயமடைந்த வெலன்டினாவின் தாயை, வெலன்டினாவிடமிருந்து தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

மீண்டும் தாயை ஒப்படைப்பதாக கூறி ராணுவம் தனது தாயை டிராக்டரில் ஏற்றியதாக வெலன்டினா, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குறித்த டிரக்டரில் காயமடைந்த சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரை ராணுவம் ஏற்றிச் சென்றதாக கூறுகின்றார் வெலன்டினா.

அந்த நிமிடமே தனது தாயை இறுதியாக கண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”2009 இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் அம்மா காயப்பட்ட நேரம், அவங்களால் நடக்க முடியாத காரணத்தினால் மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக வீதியில் இருந்த பாயை எடுத்து, பாயில் படுக்க வைத்து இழுத்து கொண்டு வந்து வட்டுவாகல் பாலத்தில் சைவ கோவிலுக்கு அருகாமையில் ராணுவத்திடம் கொடுத்தேன். ஆனால், இன்று வரை எங்கு என்று தெரியாது.” என வெலன்டினா கூறுகின்றார்.

தாயை தேடும் மகள்
படக்குறிப்பு,

இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

“இன்று வரை கிடைக்காத தாய்”

ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்பிடம் சென்ற போதிலும், தனது தாயை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

”நான் சகல இடமும் போயிருக்கேன். ஜனாதிபதி, ஐ.சி.ஆர்.சி, மனித உரிமை ஆணைக்குழு என நிறைய இடங்களுக்கு சென்றேன். போலீஸில் எல்லாம் முறைப்பாடு செய்து எந்தவித பலனும் எனக்கு கிடைக்கவில்லை.” என அவர் குறிப்பிடுகின்றார்.

தாய் காணாமல் போனதன் பின்னர், தான் வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்தும் வெலன்டினா பிபிசியிடம் கருத்து தெரிவித்தார்.

”சாகுறதா, இருக்கிறதா என்ற முடிவுல இருக்கிறோம். உண்மையில் வெளியில் கதைத்து, சிரிக்கின்றேனே தவிர, உள்ளே உள்ள கஷ்டம் கடவுளுக்கு தான் தெரியும். இருந்தால் என்ன, விட்டால் என்ன என்ற மாதிரி இருக்கு.” என கூறுகின்றார்.

தனது தாயை மாத்திரமன்றி, தனது குடும்பத்தில் பலரை வெலன்டினா யுத்தத்தில் இழந்து, இன்று தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

”நான் தனியா தான் இருக்கிறேன். நான் திருமணம் செய்யவில்லை. எனக்கு 52 வயது. அம்மாவை தேடி போய் பலனில்லை என்றே சொல்ல வேண்டும். சர்வதேசம் எங்களுக்கு ஒரு முடிவை கொடுத்தால் தான் நல்லது என்று நான் நினைக்கின்றேன். அம்மா கிடைப்பா என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது. ஆனாலும் அரை மனசுல தான் இருக்கின்றோம்.” என கவலையாக கூறினார் வெலன்டினா.

பேத்தியை தேடும் பாட்டி

பேத்தியை தேடி வரும் மூதாட்டி
படக்குறிப்பு,

இறுதி யுத்தம் இடம்பெற்ற தருணத்தில், ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து, தனது பேத்தியை ராணுவம் அழைத்து சென்றதாக கூறுகின்றார் தனலெட்சுமி.

இறுதிக் கட்ட யுத்தத்தில் தனது பேத்தியை தொலைத்த 76 வயதான தனலெட்சுமி, இன்றும் அவரை தேடி வருகின்றார்.

வவுனியா – புளியங்குளம் பகுதியில் யுத்தத்தினால் கடும் சேதமடைந்த தனது பூர்வீக வீட்டிற்கு அருகில் சிறிய வீடொன்றை கட்டிக் கொண்டு மற்றுமொரு பேத்தியுடன் வாழ்ந்து வருகின்றார் தனலெட்சுமி.

இறுதி யுத்தம் இடம்பெற்ற தருணத்தில், ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து, தனது பேத்தியை ராணுவம் அழைத்து சென்றதாகக் கூறுகின்றார் தனலெட்சுமி.

தனது பேத்தியை ராணுவத்திடம் ஒப்படைக்கும் போது, பேத்திக்கு 17 வயது என அவர் கூறுகின்றார்.

அன்று முதல் இன்று வரை தான் அனைத்து இடங்களுக்கும் சென்று தனது பேத்தியை தேடி வருகின்ற போதிலும், அவர் தொடர்பிலான எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிடுகின்றார்.

“யுத்தம் வந்தது, பிள்ளைகளை இழந்தோம்”

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
படக்குறிப்பு,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் வவுனியா நகரில் சுமார் 2380 நாட்களை கடந்து இன்றும் நடத்தப்பட்டு வருகின்றது.

ஓமந்தை சோதனை சாவடியில் ராணுவம், தனது பேத்தி உள்ளிட்ட பலரை பள்ளிகூட அறைகளுக்குள் அழைத்து சென்று விசாரணைகளை நடத்தி, வாகனங்களில் ஏற்றியதை தான் அவதானித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

”யுத்தம் வந்தது. எனது மகள், மருமகன் எல்லாம் சேர்ந்து வட்டுவாகலுக்கு போனோம். முல்லைத்தீவு கடும் சேதமாக இருந்தது. ஒவ்வொரு இடமாக இருந்து, இருந்து கடைசியாக வட்டுவாகலுக்கு போனோம். போன இடத்தில் மகளும், மருமகனும் செத்துட்டாங்க. அவங்க இரண்டு பேரும் இறந்த பிறகு இந்த பிள்ளைகள் இரண்டும் என்னுடைய கையில் தான். அங்கிருந்து ஓமந்தைக்கு கடலில் தான் தாண்டி தாண்டி பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்தோம். ஓமந்தையில் ராணுவம் எங்களை இறக்கி விட்டது. “

“எல்லா பிள்ளைகளையும் ஒவ்வொருவரா அறையில் வைத்து, எல்லாம் பொடியன்கள் தான். எனக்கு யார் என்று தெரியாது. வரிசையில் இருந்த ஒவ்வொரு பிள்ளைகள கூட்டிக் கொண்டு போனார்கள். பள்ளிகூட அறையில் வச்சு தான் கதைத்தார்கள். என்ன கதைத்தார்கள் என்று தெரியாது. நான் போய் கேட்டேன். நாங்கள் அனுப்புவோம் என்றார்கள். ராணுவம் எல்லாம் வாகனத்தை வைத்துக்கொண்டு இருந்தது. அதில் கொண்டு ஏற்றினார்கள். எல்லா பிள்ளைகளையும் ஏற்றினார்கள். ஆனால் இன்று வரை முடிவு வரவில்லை.” என தனலெட்சுமி தெரிவிக்கின்றார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கடந்த 14 வருட காலமாக ராணுவம் மீது முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகவே மறுத்து வருகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *