வடக்கு காஸா பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அளித்த காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால், சிலர் இன்னும் காஸாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறுகின்றனர்.
இஸ்ரேல் அளித்த காலக்கெடு முடிவடைந்தாலும், முகமது இப்ராஹிம் வடக்கு காஸாவை விட்டு வெளியேறப் போவதில்லை.
வீட்டின் அறையில் 42 வயதான இப்ராஹிம் பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள தனது உறவினர்களுடன் அமர்ந்துள்ளார். அவர்களில் சிலர் தங்களுக்குள் பேசுகிறார்கள்.
மற்றவர்கள் இந்த நெருக்கடி தொடர்பான செய்திகளை தங்கள் தொலைபேசியில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
“என் நிலத்தை நான் விட்டுக் கொடுக்கவில்லை, ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்,” என்கிறார் இப்ராஹிம்.
“அவர்கள் எங்கள் தலைக்கு மேல் உள்ள இந்த கூரைகளை அழித்தாலும், என்னால் வேறு எங்கும் செல்ல முடியாது, நான் இங்கேயே தான் இருப்பேன்,” என்கிறார் அவர்.
இப்ராஹிமும் அவரது குடும்பத்தினரும் ஏற்கனவே காஸா நகரைச் சுற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, ராக்கெட்டுகள் வீசப்பட்டபோது, என் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஓடிவிட்டேன், என்றார் இப்ராஹிம்.
இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜபாலியா பகுதியை விட்டு வெளியேறி ஷேக் ரத்வானுக்கு வந்தனர். ஆனால், அந்தப் பகுதியும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படும் என்பதை அவர்கள் அறிந்தனர். இதற்குப் பிறகு அவர் காஸாவின் புறநகர்ப் பகுதியில் குடியேற்றச் சென்றனர்.
ஆனால், இப்போது அவர் வடக்கு காசாவை விட்டு வெளியேறுவது சரியாக இருக்காது. இருப்பினும், வடக்கு பகுதியை விட்டு வெளியேறுமாறு மக்களை எச்சரித்துள்ளது, இஸ்ரேல்.
“காஸாவின் தெற்குப் பகுதிக்கு செல்லச் சொல்கிறார்கள். இப்போது நானும் என் குடும்பமும் எங்கு செல்ல வேண்டும்?” எனக் கேட்கிறார் இப்ராஹிம்.
இப்ராஹிமின் பிள்ளைகள் தங்கள் வீட்டின் தோட்டத்தை நினைவு கூர்கின்றனர். இப்போது அவர்கள் மற்ற உறவினர்களுடன் ஒரு குடியிருப்பில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது மகன் அஹ்மத் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் சைக்கிள் ஓட்டுவதை விரும்பினார்.
இப்ராஹிமின் மகன் அஹ்மத் இப்போது தனது நண்பன் இன்னும் உயிருடன் இருக்கிறானா என்று தந்தையிடம் கேட்டான். ஆனால், அஹ்மத்தால் அவனுடைய நண்பனை அடைய வழியில்லை.
‘உணவு இல்லை, தண்ணீர் இல்லை, வாழ்க்கை இல்லை’
அருகிலுள்ள தெருவில், 38 வயதான அபு ஜமீல், கட்டடம் கட்டுபவர். குடிநீர் குழாய் அருகே அமர்ந்து கடைசி சில துளிகளை குடிக்க முயற்சிக்கிறார்.
“எட்டு நாட்களாக இங்கு உணவோ, தண்ணீரோ இல்லை” என்கிறார் அபு.
காஸாவிற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மேலும், எரிபொருள் மற்றும் இதர பொருட்களும் அந்தப் பகுதிக்குள் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
“தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, வாழ்க்கை இல்லை, எவ்வளவு சிரமம்” என்று அபு ஜமீல் வருத்தப்பட்டார்.
ஆனால், அபு தனது ஐந்து குழந்தைகளுடன் வடக்கு காஸா பகுதியில் தங்க முடிவு செய்துள்ளார். அவர், இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்களின் தந்தை. இளைய குழந்தையின் வயது நான்கு.
“எங்களுக்குப் போக இடமில்லை, எங்கள் வீட்டைத் தாக்கினாலும் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம், இந்த ஆறு பேர் கொண்ட குடும்பத்துடன் நாங்கள் எங்கே போவது?” எனக் கேட்டார் அபு
தயார் நிலையில் உள்ள இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேலின் உத்தரவிற்குப் பிறகு, வடக்கு காஸாவை இருப்பிடமாக் கொண்டுள்ள 11 லட்சம் மக்களின் சுமார் நான்கு லட்சம் பேர் காஸா அல்-தின் சாலை வழியாக 48 மணி நேரத்திற்குள் தெற்கு நோக்கி நகர்ந்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு கூறுகிறது.
இஸ்ரேலிய எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையில் இருந்து காஸா பகுதியின் காட்சி, நடக்கவிருக்கும் தரைவழி தாக்குதல்களின் தெளிவான படத்தை அளிக்கிறது.
ராணுவ ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடுகையில், அருகில் உள்ள நெடுஞ்சாலையில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் சுற்றித் திரிகின்றனர்.
எல்லையில் உள்ள வேலிக்கு அருகில் சிறிய ரக ஆயுதத் தாக்குதல் சத்தம் கேட்கிறது. பதிலுக்கு இஸ்ரேலிய ராணும் குண்டுகளை வீசின.
அப்பகுதியில் மறைந்திருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
அருகிலுள்ள இஸ்ரேலிய நகரமான டெரோட் பகுதியில் இருந்தவர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டனர். முக்கிய சாலைகளைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எங்களின் பயணத்தில் சில நிமிடங்கள் கூட கடந்திருக்கவில்லை, எங்களுக்கு முன்னால் எந்த ராணுவ வாகனமும் செல்லவில்லை.
அக்டோபர் 7, சனிக்கிழமையன்று ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸை அழிக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தின் மையமாக இந்த மாபெரும் இராணுவத் தாக்குதலை பார்க்கலாம்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1300 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஹமாஸ் 126 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
பாலத்தீனிய சுகாதார அமைச்சின் ஆதாரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை வரை காஸா பகுதி மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலத்தீனியர்களின் எண்ணிக்கை 2,383 ஐ எட்டியுள்ளது. மேலும், 10,814 பேர் காயமடைந்துள்ளனர்.
தூசிகளால் சூழ்ந்துள்ள காஸா
காஸா நகரில் குழந்தைகள் இன்னும் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த குழந்தைகள் அமைதியான சிறிய தருணங்களில் அருகிலுள்ள தெருக்களிலும் சாலைகளிலும் சுற்றித் திரிகின்றனர்.
எங்கும் போரால் சூழப்பட்ட அவர்களின் வாழ்க்கையில் இதுதான் ஒரே வழி.
காஸாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். இந்த மோதலில் இதுவரை 700 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீனிய பிராந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் உள்ள ஹமாஸ் நிர்வாகம் வடக்கு பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேசமயம், வடக்கு காஸாவில் இருந்து வெளியேறும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதி ஹமாஸ் தடுக்கிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை காஸா வில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க முடிவுசெய்துள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழு அவர்கள் கைப்பற்றிய கட்டடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கொரில்லாப் தாக்குதலை தொடங்கினால், இந்த சண்டை பல மாதங்கள் நீடிக்கும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்