எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்குத்தான் இனி இரட்டை இலைச் சின்னம் சொந்தமாகும் என்று பரவலாகவே கருதப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத சிக்கல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடந்தது, இது எங்கே முடியும், இரட்டை இலையைக் கைப்பற்றுவது ஏன் முக்கியம் போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது இந்தக் கட்டுரை.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் பெயர்களைவிடவும், அவற்றின் சின்னங்களுக்கு அதிக சக்தி உண்டு. ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிக்கப்படும்போதும், சின்னம் வேண்டி கட்சிகள் முந்துவதை வைத்தே அதன் பலம் என்ன என்பதை கூறி விடமுடியும்.
அதில் ஒன்றுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சின்னமான இரட்டை இலை. எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி, இறுதியாக அதிமுகவின் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி காலம் வரை இந்த சின்னம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்துள்ளது.
குறிப்பாக பல தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவே இந்த சின்னம் தான் காரணம் என்பதை தற்போதும் நடைபெறும் சின்னம் தொடர்பான மோதலை வைத்தே நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
அத்தகைய பாரம்பரியமான சின்னமான இரட்டை இலை, முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு இழுபறி நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தின் வரலாறு
1973ஆம் ஆண்டில் இருந்து அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னம் தேர்தல் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்து போனது. அதனையொட்டி 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இரு அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் சின்னம் முடக்கப்பட்டது.
இதனால் அந்த தேர்தலில் ஜானகி அணிக்கு இரட்டைப் புறா மற்றும் ஜெயலலிதா அணிக்கு சேவல் ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்த தேர்தலில் இந்த இரு அணிகளுமே தோல்வியடைந்தன. இதனை தொடர்ந்து ஜானகி அரசியலில் இருந்து விலகி விட்டார்.
ஒரு கட்சிக்கு சின்னம் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுவதாகவும் அந்த தேர்தல் அமைந்தது. அதற்கு பின் இரு அணியும் ஒன்றாக சேர்ந்து சின்னத்திற்காக கொடுத்த பிரமாண பத்திரங்களை திரும்பப்பெற்றனர். மீண்டும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றினர்.
இது அடுத்தடுத்த நடந்த இடைத்தேர்தல்களிலும், 1991 பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது. இந்த தேர்தலில் ஜெயலலிதாவும் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
அதிலிருந்து 2016 வரை இரட்டை இலையை சின்னமாக பயன்படுத்துவதில் அதிமுகவுக்கு எந்த சிக்கலும் வரவில்லை. பல கூட்டணி கட்சிகளே கூட பெரும்பாலும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டனர். ஆனால், டிசம்பர் 2016 5ஆம் தேதி முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைந்ததில் இருந்து கட்சிக்குள் கூச்சல் குழப்பம் தொடங்கியது.
இரண்டாம் முறையாக சின்னம் முடக்கம்
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்று, பின்னர் அவர் அதிலிருந்து ராஜினாமா செய்து, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது என அரசியல் களமே குழம்பி போனது.
இதற்கிடையில் 2017ஆம் ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி போட்ட காரணத்தால் மீண்டும் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கியது மட்டுமின்றி, அதிமுக என்ற பெயரை பயன்படுத்தவும் தடை விதித்தது.
இந்நிலையில் தான் அதே ஆண்டில் ஒன்றிணைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணி , சசிகலா அணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் சின்னம் மற்றும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்துவதற்கான உரிமைகளை பெற்றனர்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு
ஆனால், அதுவும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. கட்சிக்குள் நீண்டகாலமாக வெடித்து வந்த ஒற்றைத்தலைமை என்ற கோஷம் முற்றிப்போய், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தே நீக்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது.
அதிலிருந்து ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும், மீண்டும் பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்றும் கோரி வழக்கும், எடப்பாடி தரப்பு தாங்கள்தான் உண்மையான அதிமுக அதனால் பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்று கோரி வழக்கும் என மாறி மாறி உயர்நீதி மன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகளை தாக்கல் செய்தனர்.
மூன்றாம் முறை சின்னம் முடக்கப்படும் அபாயம்
இதற்கிடையில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் இருதரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியதால் மீண்டும் சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை திரும்பப்பெற்றது.
2023 மார்ச் அதிமுக பொதுக்குழு குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு முடிவுகளுக்கு தடை விதிக்கமுடியாது என்ற தீர்ப்பை வழங்கியது.
இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட அதிமுக மீதான உரிமை எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே என்று உறுதியாகியிருந்தாலும், ஓபிஎஸ் தொடர்ந்து தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டும், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டும் இருந்தார்.
இதை எதிர்த்து 2023 செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதற்கு பதில்மனு தாக்கல் செய்ய மூன்று முறைக்கும் மேல் ஓபிஎஸ் தரப்பு கால அவகாசம் கேட்டதால், உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஓ. பன்னீர்செல்வம் இனி கட்சியின் பெயர், சின்னம், கொடி என எதையும் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
தனிநீதிபதியின் முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும் மறுஉத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என்றே கூறப்பட்டது.
இதற்கிடையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் அணியை நீக்கியது குறித்த வழக்கு இன்னமும் சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
ஆனால், ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிச்சாமி தரப்பை ஏற்றுக்கொண்டு, அவர்கள் திருத்திய கட்சியின் சட்ட விதிகளை ஏற்றுக் கொண்டு தங்களது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் அவற்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை கோர இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியது.
‘சின்னம் முடக்கப்படும்’
இதுகுறித்த பேசிய அவர், “கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்ற தீர்ப்பின் மீதான வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. அதே போல் கட்சிநீக்கம் குறித்த வழக்கும் சிவில் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே ஓபிஎஸ் ஏற்கனவே போடப்பட்ட உத்தரவை காட்டி, ஒருங்கிணைப்பாளருக்கான பதவிக்காலம் இன்னும் இருக்கிறது என்ற உரிமையின் மூலம் எனக்கு இரட்டை இலையை கொடுங்கள் என்று கேட்க உள்ளார். எடப்பாடி தரப்பும் அதே சின்னத்தை கோரட்டும். இதில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கட்டும்” என்று தெரிவித்தார்.
ஆனால், விசாரிக்க நேரமில்லை, தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் சொன்னால் ஆர்கே நகர் போல சின்னம் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கிறார் அவர்.
மேலும், அப்படி சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி அணிக்கு பெரிய தலைகுனிவு என்பதையும் வலியுறுத்துகிறார் புகழேந்தி.
ஓபிஎஸ் என்பவர் யார்?
ஓபிஎஸ் கூறியுள்ளவாறு அவரது அணியும் இரட்டை இலை சின்னத்தை கோருவதால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்று அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேலிடம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், “இதையெல்லாம் பேச ஓபிஎஸ் யார்? அவர் எந்த கட்சியில் உறுப்பினர்? அவரால் கட்சி வேட்டியை கூட கட்ட முடியாத நிலைதான் உள்ளது. எனவே அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் பேசுவதில் எந்த விதமான சட்டரீதியான முகாந்திரமும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், ஏற்கனவே அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக தான் தொடர்ந்த பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதிமுகவுக்கு இரட்டை இல்லை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பாபு முருகவேல், “இது போன்ற பல வழக்குகளை தொடர்ந்து போடுவதுதான் அவரது வேலை. சமீபத்தில் கூட அவர் தொடர்ந்த மூன்று வழக்குகளை ஒரே நேரத்தில் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். எனவே அவரெல்லாம் ஒரு பொருட்டில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தம் ஓபிஎஸ்-இன் புதிய அறிவிப்பால் அதிமுகவில் பெரிய சலனம் எதுவும் ஏற்படவில்லை என்பதையே பாபு முருகவேலுடனான உரையாடல் உணர்த்தியது.
தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும்?
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் என இருவகை உள்ளன. இதிலேயே மாநில அளவில் மற்றும் மத்திய அளவில் என்று இரு பிரிவுகள் உள்ளன.
இதில் எந்த பிரிவாக இருந்தாலும் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் கடந்த தேர்தலில் 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். மேலும், சட்டமன்றம் என்றால் 2 உறுப்பினர் பதவிகளையும், பாராளுமன்றம் எனில் 4 உறுப்பினர் பதவிகளையும் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு நிரந்தரமான சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அதற்கும் கீழ் பெரும் கட்சிகள் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகவே கருதப்படும்.
ஆனால், இரட்டை இலை சின்னத்தின் வழக்கானது ஒரே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பிரிவினரும், தற்போது நிபந்தனைகளின் பேரில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரிவினரும் உரிமை கோரும் பிரச்னை ஆகும்.
இதில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்குமென முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி அவர்களிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் ஆணையம் முன்பு போடப்பட்ட உத்தரவையே பின்பற்றும். ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஒரு கட்சியை அங்கீகரித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னர் ஆணையம் அதிலிருந்து மாறாது” என்கிறார்.
“வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நடக்கிறது என்றால், அதை முடித்துவிட்டு வாருங்கள். அங்கு உங்கள் பக்கம் தீர்ப்பு வந்தால் அதற்கு பின்பு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிடும்.”
மேலும்,” கட்சிகள், தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், தேர்தல் ஆணையம் விதிகள் படியே நடந்துக்கொள்ளும். எனவே ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தீர்ப்பு எதுவும் வராமல் அதில் மாற்றம் வரப்போவதில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
‘தொண்டர்களை திருப்தி படுத்தும் செயல்’
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நகர்வு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களிடம் பேசினோம். இது வெறும் தொண்டர்களை திருப்தி படுத்தும் செயலே என்று அழுத்தமாக கூறுகிறார் அவர்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “பத்திரிகையாளராக மட்டுமின்றி ஒரு வழக்கறிஞராகவும் சொல்கிறேன், கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு இல்லை. இது ஏதோ ஆரம்ப கட்டமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆண்டுக்கணக்காக பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, இறுதியில் வந்து நிற்கிறோம். ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் ஆணையம் எடப்பாடியை அங்கீகரித்து விட்டது. இரட்டை இலைக்கு கையெழுத்திடும் உரிமை அவரிடம் உள்ளது. எனவே ஓபிஎஸ் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இது அவர்களுக்கும் தெரியும்” என்கிறார்.
பாஜக தான் இயக்குகிறதா?
ஓபிஎஸ்-இன் சமீபத்திய நகர்வு பாஜகவால் பின்னிருந்து செயல்படுத்தப்படும் திட்டம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கேட்டபோது, “பாஜகவோடு பேச்சுவார்த்தையை இல்லையே. இதில் எங்கு பின்னால் இருந்து இயக்குவது? அதற்கெல்லாம் இடமில்லை” என்கிறார் புகழேந்தி.
அதே சமயம் “அப்படியெல்லாம் ஒரு கட்சியால் செய்ய முடியாது. இது ஒரு ஜனநாயக நாடு. எனவே பாஜகவால் அதை செய்ய முடியாது. அப்படி செய்ய நினைத்தால் அது தவறு” என்று கூறுகிறார் பாபு முருகவேல்.
மேலும், “இது முதல்நிலையில் இருக்கும் வழக்காக இருந்தால் கூட வேறு ஒருவரின் செல்வாக்கு இருக்கும் என்று சொல்லலாம். ஆனால், இந்த வழக்கு ஏற்கனவே பலகட்டங்களை தாண்டி இறுதிக்கு வந்துவிட்டதால் யார் நினைத்தாலும் இதில் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார் தராசு ஷியாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்