இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுகள், இந்தியன் ஆயில் பங்க்கிலிருந்து வெளியேறிய பெட்ரோல் கலந்த கழிவுநீர் நான்கு நாள்களாக எங்கள் பகுதியை சூழ்ந்திருக்கிறது. இதனால் இந்தக் கழிவுநீர் பட்ட இடங்களிலெல்லாம் கொப்புளங்கள், சொறி, சிரங்கும் ஏற்பட்டிருக்கின்றன” என தங்கள் குழந்தைகளின் உடல்களைத் திறந்து காட்டினர்.

மேலும், “நான்கு நாள்களாக எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை! உணவுப் பொருள்கள்கூட தரவேண்டாம், எங்களுக்கு மின்சாரம், குடிநீர் விட்டாலே போதும். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். ஆனால் இதை எதையுமே அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து, “இலவசமாகக் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு ஒரு பால் பாக்கெட்டுக்கு 200 ரூபாய், தண்ணீர் கேனுக்கு 200 ரூபாய் என இரக்கமே இல்லாமல் பணம் கேட்கின்றனர். இதுதான் அரசாங்கமா… இங்கிருப்பவர்கள் எந்த உதவியும் செய்யாதபோது பெங்களூரிருந்து வந்த சிலர் எங்களுக்கு பிஸ்கெட், பிரெட், பன் போன்ற உணவுப் பொருள்களைக் கொடுத்தனர். ஆனால், அதையும் இங்கிருக்கும் சிலர், `பிஸ்கெட், பன்னுக்காகப் போராடுகிறார்கள்” என கொச்சைப்படுத்தினர். அதனால்தான் ஆத்திரத்தில் இந்த உணவுப் பொருள்களையெல்லாம் ரோட்டில் கொட்டினோம். நாங்கள் ஒன்றும் ரொட்டித்துண்டுகளுக்காகப் போராடவில்லை. நியாயமாக எங்கள் அடிப்படை வசதிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். நான்கு நாள்களாக மின்சாரம், குடிநீர் இல்லை! அதற்காகப் போராடுகிறோம்!” எனத் தெரிவித்தனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
