தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. பேரவை தொடங்கியதுமே முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மதிமுக, விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் முழுமையாக இல்லை எனக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்க அனைவரும் சேர்ந்து செயல்படும் பொருட்டு அதிமுகவும் துணை நிற்கும்’ என்று தெரிவித்தார். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com