யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க அமெரிக்கா இதுவரை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இது மிக அதிகம்.
ஆனால் இதற்குப் பிறகும் யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி மேலும் உதவி கேட்டு அமெரிக்கா சென்றார். ஆனால் அதே நேரம் போருக்கான நிதி உதவி குறித்து குடியரசு கட்சியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
இருப்பினும் ஒப்பீட்டளவில் நார்வே ஒரு வகையில் அமெரிக்காவையும் விஞ்சிய உதவிகளைச் செய்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 19ஆம் தேதியன்று ஐநா சபையில் ஆற்றிய உரையில், யுக்ரேனை புறக்கணிக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகத்திற்கு உணர்ச்சிகரமான வேண்டுகோளை விடுத்தார்.
“உலகம் சோர்வடையும் என்றும் எந்த முடிவையும் ஏற்படுத்தாமல் யுக்ரேன் மீது அட்டூழியங்களை இழைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் ரஷ்யா நம்புகிறது. ஆனால் நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு ஆக்கிரமிப்பாளரைத் திருப்திப்படுத்த அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கைகளை நாம் கைவிட்டால், இந்த அமைப்பின் எந்த ஒரு உறுப்பு நாடும் தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கருத முடியுமா?”என்று அவர் வினவினார்.
அமெரிக்கா எந்த வடிவத்தில் எவ்வளவு உதவி செய்துள்ளது?
யுக்ரேனுக்கு 110 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவி வழங்கிட அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பின்வருவன அடங்கும்.
- 49.6 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவி
- 28.5 பில்லியன் டாலர்கள் பொருளாதார உதவி
- 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மனிதாபிமான உதவி
- 18.4 பில்லியன் டாலர்கள் அமெரிக்க பாதுகாப்பு தொழில் துறையை ஊக்குவிக்கும் உதவி
ஆகஸ்ட் 9ஆம் தேதி வரையில், ஒதுக்கப்பட்ட நிதியில் 91 சதவிகிதம் அளிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மாளிகை தெரிவித்தது. காங்கிரஸிடம் இருந்து 24 பில்லியன் டாலர்கள் கூடுதல் உதவியை அரசு கோரியுள்ளது. இதில் 14 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியும் அடங்கும்.
இதற்கிடையில், யுக்ரேனுக்கு கூடுதல் உதவிகள் வழங்குவதை ஆதரிக்கும் அமெரிக்கர்கள் குறிப்பாக பழமைவாதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி தனது வாதத்தை முன்வைக்க அமெரிக்காவிற்கு சென்றார்.
இப்போது நாம் யுக்ரேனின் மிகப்பெரிய உதவியாளர் அமெரிக்கா அல்ல நார்வே என்பதைக் காட்டும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
யுக்ரேனுக்கான அமெரிக்க உதவியை எவ்வாறு ஒப்பிடுவது?
பல்வேறு நாடுகளில் இருந்து யுக்ரேன் பெற்ற உதவியின் ஜூலை மாத இறுதி வரையிலான புள்ளிவிவரங்கள் உள்ளன. அவற்றை மட்டுமே நாம் ஒப்பிடுவோம். அந்த நேரத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்காக சுமார் 80 பில்லியன் டாலர்களை செலவிட்டது.
இது மற்ற எந்த ஒரு நாட்டிலிருந்தும் பெறப்பட்ட உதவியைக் காட்டிலும் அதிகம். ஆனால் இது ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட உதவியை விடக் குறைவு.
எலிசா டெமஸ், ராண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்பு விவகார ஆராய்ச்சியாளர். இந்தக் கூடுதல் உதவி இல்லாமல் இருந்திருந்தால், கோடையில் ஆரம்பித்த யுக்ரேனின் எதிர் தாக்குதல் சில வாரங்களுக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று அவர் கூறுகிறார். போர்க்களத்தில் யுக்ரேன் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வந்த நேரத்தில் இது எதிர்மறையான செய்தியை அனுப்பியிருக்கும்.
அமெரிக்க உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், குளிர்காலம் தொடங்கிய பிறகு யுக்ரேன் தனது ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் புதிய உதவித்தொகுப்பு போர்க்களத்திற்கு அப்பால் போரை பாதிக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
“மற்ற நாடுகளும் உதவக்கூடிய ஒரு சூழலை அமெரிக்கா உருவாக்கியிருக்க வேண்டும். புதிய அமெரிக்க உதவி அளிக்கப்படாதது, ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் தங்கள் சொந்த உதவித் தொகுப்புகளை மறுபரிசீலனை செய்வதைத் தடுக்கக்கூடும்,”என்று அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா அதிக ராணுவ உதவிகளை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதில் பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் அடங்கும்.
செலவுகளைக் குறைக்க குடியரசுக் கட்சியின் அழுத்தம் அதிகரித்து வருகிறது
கூடுதல் ராணுவ உதவி தேவை என்று பைடன் நிர்வாகம் கூறுகிறது. அமெரிக்க தலைவர்கள், குறிப்பாக குடியரசுக் கட்சியுடன் தொடர்புடையவர்கள், பைடன் நிர்வாகத்தின் யுக்ரேன் உதவித்தொகுப்புகளை விமர்சித்துள்ளனர்.
“யுக்ரேனில் நமக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஆர்வமும் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களிடம் பணம் இல்லை என்ற உண்மையால் அது மறுக்கப்படும்,” என்று கென்டக்கியின் செனட்டர் ராண்ட் பால் கூறுகிறார்.
”சிக்கனமாக இருங்கள். அதன்பிறகு உங்கள் காசோலைப் புத்தகத்தை வெளியே எடுங்கள் என்று சொல்லிச் சொல்லி சோர்வடைந்துவிட்டேன்,” என்று தனிப்பட்ட முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிறகு மிசோரியின் செனட்டர் ஜோஷ் ஹர்லே கூறினார். ‘இது எங்கள் பணம் இல்லையா என்ன? இது அமெரிக்க மக்களின் பணம்,” என்றார் அவர்.
லூக் காஃபி, பழமைவாத சிந்தனைக் குழு என்று கருதப்படும் ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டில் உறுப்பினர். யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி என்பது சில குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு விருப்பமில்லாத எளிமையான பிரச்னை என்று அவர் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் மீதான அரசியல் குற்றச்சாட்டு மற்றும் யுக்ரேனிய எரிசக்தி நிறுவனத்துடன் ஹண்டர் பைடனின் சந்தேகத்திற்கிடமான உறவுகள் பற்றிய குற்றச்சாட்டு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது யுக்ரேன் விஷயம் மிகவும் எளிமையானது என்றார் அவர்.
“இந்த இரண்டு பிரச்னைகளும் எந்த வகையிலும் போருடன் தொடர்புடையவை அல்ல என்றாலும், நீங்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டால், பழமைவாத இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒலிக்கும் யுக்ரேனுக்கு எதிரான கதையை விரைவாக உருவாக்க முடியும்,” என்று லூக் காஃபி குறிப்பிட்டார்.
மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா எவ்வளவு உதவி செய்தது?
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டான 751 பில்லியன் டாலர்கள் அல்லது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய நலன்களுக்கான 1.2 டிரில்லியன் டாலர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டால், யுக்ரேனுக்கான உதவி மிகவும் குறைவாகவே தெரியும். இது 2022 நிதியாண்டில் அமெரிக்காவின் மொத்த செலவில் 1.8 சதவிகிதம் மட்டுமே.
மறுபுறம், ஜூலை இறுதிக்குள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட 80 பில்லியன் டாலர்கள் உதவியானது, பல கூட்டாட்சி அமைப்புகளின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகம்.
யுக்ரேனுக்கான இந்த உதவி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய நிதியுதவி வாக்குறுதிகளைவிட மிக அதிகம். ஜூலை மாதம் வரையிலான யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.33 சதவிகிதமாக இருந்தது என்று வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 1970இல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய 0.18 சதவிகிதம், 1964இல் லத்தீன் அமெரிக்காவுக்கு அளித்த 0.15 சதவிகிதம், 1962இல் பாகிஸ்தானுக்கு வழங்கிய 0.08 சதவிகிதம் ஆகியவற்றை ஒப்பிடும் போது மிக அதிகம்.
யுக்ரேன் தொகுப்பை ஒப்பிடும்போது மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை மிகவும் குறைவு. 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு 4 பில்லியன் டாலர், இஸ்ரேலுக்கு 3.3 பில்லியன் டாலர் மற்றும் இராக்கிற்கு 1.2 பில்லியன் டாலர் உதவி வழங்கியது.
அமெரிக்காவை விட நார்வே அதிகமாக உதவி செய்கிறதா?
வெளிநாட்டு உதவியின் மற்ற வடிவங்களைப் போலவே, அமெரிக்க நட்பு நாடுகள் போரின் செலவில் பெரும் பங்கை ஏற்க வேண்டும் என்று விமர்சகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கடந்த மாதம் விஸ்கான்சினில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில், “ஐரோப்பா முன்னால் வர வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதன் அடிப்படையில் நமது ஆதரவு இருக்க வேண்டும்,” என்றார்.
அமெரிக்கா அதன் நட்பு நாடுகளைவிட யுக்ரேனுக்கு அதிக ராணுவ உதவியை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகள் தனித்தனியாக மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் யுக்ரேனுக்கு உறுதியளித்த மொத்த உதவித்தொகை 140 பில்லியன் டாலர்கள். இது அமெரிக்காவின் உதவியைவிட அதிகம்.
டாலரில் ஒப்பிடும்போது அமெரிக்காவின் உதவி, நட்பு நாடுகளின் உதவியின் அளவை விடக் குறைவாக உள்ளது என்று லூக் ஃகாபி கூறுகிறார்.
“யுக்ரேனில் அமெரிக்கா என்ன செய்கிறது என்பதை எஸ்டோனியா அங்கு என்ன செய்கிறது என்பதுடன் ஒப்பிட முடியாது. எஸ்டோனியாவின் பொருளாதாரமும், அமெரிக்க மாகாணம் வெர்மாண்ட்டின் பொருளாதாரமும் ஏறக்குறைய ஒரே அளவு,” என்று அவர் கூறுகிறார்.
”இதை ஒப்பிடுவதற்கான சிறந்த வழி ஒன்று உள்ளது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), உதவித்தொகை எவ்வளவு பங்கு என்பதன் மூலமாக அது செய்யப்படவேண்டும்,” என்றார் அவர்.
ஜூலை இறுதி வரை அதிகபட்சமாக நார்வே தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.71 சதவிகிதம் உதவியை வழங்கியது. எஸ்டோனியா மற்றும் ரஷ்யாவின் எல்லையில் உள்ள மற்ற இரண்டு பால்டிக் நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன என்று ’கீல் இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் தி வேர்ல்ட் எக்கானமி’ சேகரித்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்