கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – ஏ.சி. வென்டிலேட்டர் வழியே நுழைந்தது எப்படி?

கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை - ஏ.சி. வென்டிலேட்டர் வழியே நுழைந்தது எப்படி?

கோவை நகைக்கடையில் கொள்ளை

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில், ‘ஏசி வென்டிலேட்டர்’ குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கோவை மாநகரின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் அதிக அளவிலான நகைக்கடைகள், ஆடை உள்பட பல கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை அமைந்துள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில், ரேக்குகளில் அடுக்கி வைக்கப்படிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வைத்தும், மோப்பநாய் வில்மாவை வரவழைத்தும் சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்தது எப்படி?

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி ஒருவர் எனவும், நகைக்கடையில் சில கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் நகைக்கடையின் பக்கவாட்டு சுவர் அருகேயுள்ள சிறிய சந்தில் நடந்து சென்று, சுவற்றில் பொருத்தியிருந்த ‘ஏசி’ இயந்திரத்துக்கான வென்டிலேட்டர் குழாய் வழியாக சென்று கடைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட கமிஷனர் பாலகிருஷ்ணன், ‘‘முதற்கட்ட விசாரணையில் ஒரு நபர் தான் ‘ஏசி’ வென்டிலேட்டர் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சில தடயங்களை சேகரித்துள்ளோம், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

குற்றவாளி தனது சட்டையை கழற்றி முகத்தை மூடி நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதிகாலை, 12:00 மணிக்கு மேல் கொள்ளை நடந்துள்ளது. சுமார் 150 – 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நகைக்கடை ஊழியர்கள் எத்தனை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

குற்றவாளி வட மாநிலத்தை சேர்ந்தவரா? கட்டுமான பணி நடப்பதால் அந்த பணியாளர்களில் யாரேனும் குற்றவாளிகளா? என்ற கேள்விகளை நிருபர்கள் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘‘குற்றவாளி உள்ளூர் நபராகத் தான் தெரிகிறார், வடமாநிலத் தொழிலாளர் போன்று இல்லை. கட்டுமான பணியில் இதுவரை ஈடுபட்டவர்கள் விபரங்களை சேகரித்து விசாரிக்கிறோம். இந்த கொள்ளையை பொறுத்தவரையில் மற்ற குற்றவாளிகளைப் போல் அல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்,’’ என்றார்.

நகை திருட்டை எச்சரிக்க கடையில் சைரன் இல்லையா? என்ற கேள்விகளை கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் நிருபர்கள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘‘கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சைரன் இல்லை. மர்ம நபர் நகைகளை கொள்ளையடித்த போது, இரு காவலாளிகள் பணியில் இருந்ததுடன், 12 பணியாளர்கள் நகைக்கடையில் தான் தங்கியுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்துகிறோம்,’’ என்றார் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

ஃபால்ஸ் சீலிங் வழியாக இறங்கிய கொள்ளையர்கள்’

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்

பிபிசி தமிழிடம் பேசிய போலீஸார், ‘‘கடைக்கு முன் பகுதியில் சில கட்டுமான பணிகள் மற்றும் வெளிப்புற வேலைகள் நடப்பதால் பக்கவாட்டு சுவர் அருகே கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் மருந்துக்கடை அருகேயும் சந்து போன்று இடமுள்ளது. கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ள பகுதி வழியாக சென்று, ‘ஏசி’ வென்டிலேட்டர் குழாய் வழியாக மர்ம நபர் உள்ளே சென்றிருக்க வாய்ப்பு அதிகம்,’’ என்கின்றனர் போலீஸார்.

மேலும் தொடர்ந்த அவர்கள், ‘‘கடைக்குள் நுழைய வென்டிலேட்டர் குழாயை பயன்படுத்திய குற்றவாளி, அதன் வழியாக சென்று பின் ஃபால்ஸ் சீலிங் (False Ceiling) பிரித்து அதன் வழியாக நகை வைத்திருக்கும் தளத்தினுள் இறங்கி, சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு நகைகளை கொள்ளையடித்துள்ளார். வந்த வழியாகவே வெளியில் சென்று தப்பியுள்ளார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் அதிகாலை, 12:00 – 3:00 மணிக்கு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

குற்றவாளி வெறும் சாதாரண முகக்கவசம் அணிந்து, துணியை தலையில் சுற்றி வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். நகைக்கடை மற்றும் அருகிலுள்ள கடைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கிறோம்.

இரண்டு பக்கவாட்டு சுவர், தரைத்தளத்தின் கீழேயுள்ள பார்க்கிங் என பல வழிகளில் ‘ஏசி வென்டிலேட்டரை’ அடைய முடியும் என்பதால், எந்த வழியாக சென்றார் என்பதையும் விசாரிக்கிறோம்.,’’ என்றனர்.

கடை ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள்?

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்

பிபிசி தமிழிடம் பேசிய கடையின் ஊழியர்கள் சிலர், ‘‘வழக்கமாக இரவு 9:00 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, அனைத்து நகைகளையும் அதனதன் ரேக்குகளில் அடுக்கிவிடுவோம். இந்தப்பணிகள் முடிக்கவே 30 நிமிடங்கள் ஆகிவிடும் என்பதால், 9:30 மணிக்கு மேல் தான் பணியாளர்கள் வெளியில் செல்வார்கள்.

வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்று, இன்று காலை திறந்தபோது தான் நகைகள் கொள்ளையடிப்பட்டது தெரியவந்தது. கொள்ளை நடந்தது எப்படி? என்ன ஏதென்று எங்களுக்குத் தெரியாது. கொள்ளை போன நகைகளின் எண்ணிக்கையை மதிப்பிட்டு வருகிறோம்,’’ என்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *