தரம்சலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-4 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த டெஸ்ட் தொடரின் நாயகனாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்
தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது முத்தாய்ப்பாக அமைந்தது. 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் 36-வதுமுறையாக 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் கும்ப்ளேயின் 35 முறை சாதனையையும் அஸ்வின் முறியடித்தார்.
அது மட்டுமல்லாமல் 100-வது டெஸ்டில் அஸ்வின் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன் எந்தப் பந்துவீச்சாளரும் வெளிப்படுத்தாத சிறப்பான பந்துவீச்சாகும். இதற்கு முன் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் 141 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் மட்டும் அஸ்வின் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கு முன் ஆன்டர்ஸன் இ்ங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு எதிராக 105 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தன்சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
பந்துவீச்சாளர்கள் ஹூரோக்கள்
இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணமாகும். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவின் 5 விக்கெட், அஸ்வினின் 4விக்கெட்,2வது இன்னிங்ஸில் அஸ்வினின் 5 விக்கெட், குல்தீப், பும்ராவின் விக்கெட்டுகள் வெற்றியை எளிதாக்கின.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் ஸ்ட்ரைக் ரேட் 24.6 ஆக இருந்தது. இதற்கு முன் 2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி 21.5 என ஸ்ட்ரைக் ரேட்டை சிறப்பாக வைத்திருந்தனர்.
அனுபவற்ற வீரர்களை வைத்து வென்றோம்
வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்லுமப்போது ஒவ்வொன்றும் உங்களின் முன் மண்டியிடும். இந்தப் போட்டியில் பல விஷயங்களை நாங்கள் சரியாகச் செய்தோம். சில நேரங்களில் சிலர் வராமல், விளையாடாமல் இருந்தாலும் அது எங்களுக்கு தெரிந்து திட்டமிட்டோம். அனுபவற்ற இளம் வீரர்களை வைத்து டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம். சர்வதேச அனுபவம் இல்லாவிட்டாலும் அதிகமான கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.அழுத்தம் ஏற்பட்டபோது அதை சிறப்பாகவும் கைாயண்டனர். இந்த வெற்றி முழுமைக்கும் அணியின் ஒட்டுமொத்த உழைப்புதான் காரணம்.
அதிகமான ரன்களைக் குவித்தோம், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினோம். பந்துவீச்சாளர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டனர். காயத்திலிருந்து வந்த குல்தீப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஜெய்ஸ்வாலின் அருமையான பேட்டிங் அவருக்கு பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்தும். அவருக்கு இது அருமையான டெஸ்ட் தொடராக அமைந்தது” எனத் தெரிவித்தார்.
3-வதுமுறையாக மாபெரும் வெற்றி
இந்திய அணி உள்நாட்டில் பெறும் 118-வது டெஸ்ட் வெற்றியாகும். தென் ஆப்பிரி்க்க அணி 117 வெற்றிகள் பெற்றிருந்தநிலையில் அதை இந்திய அணி முறியடித்து 3வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா(259), 2வது இடத்தில் இங்கிலாந்து (233) வெற்றிகளுடன் உள்ளன.
இந்திய அணி 3-வது முறையாக டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய அணியை 4-1 என்றகணக்கிலும், 2016ல் இங்கிலாந்து அணியை 4-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்றிருந்தது. அதன்பின் 3வது முறையாக இப்போது 4-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்து அணியை இதே கணக்கில் 2வதுமுறையாகவும் இந்திய அணி வென்றுள்ளது.
112 ஆண்டுகளுக்குபின் வரலாறு
112 கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்டில் தோற்று, அடுத்த 4 டெஸ்ட்களையும் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. கடைசியாக 1912ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் தொடரில் இதே சாதனையை இங்கிலாந்து பெற்றிருந்தது.
இ்ங்கிலாந்தின் இந்த சாதனையைத் தவிர்த்துப் பார்த்தால், ஆஸ்திரேலிய அணி 1897-98, மற்றும் 1901-02 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்டை இழந்து, டெஸ்ட் தொடரை வென்ற 7-வது அணியாக இந்திய அணி பெருமை பெற்றுள்ளது.
1972-73ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், 2001ல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், 2015ல் இலங்கைக்கு எதிரான அந்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடர், 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2020-21ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர், 2021ல் உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆகியவற்றில் இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்றபின் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி-தோல்வி விகிதம் என்பது 1.0 சதவீதமாக இருக்கிறது. அதாவது 178 போட்டிகளில் இந்திய அணி வெற்றியும், 178 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
பேஸ்பால் முறைக்கு மரணஅடி
இங்கிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம் பயிற்சியாளராக வந்தபின் அதிரடி பேட்டிங் முறையான பேஸ்பால் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தி எதிரணியை நிலைகுலையச் செய்து வெற்றி பெற்று வந்தது இங்கிலாந்து அணி. இந்த பேஸ்பால் முறை ஹைராபாத் டெஸ்டிலும் இங்கிலாந்து அணிக்கு கை கொடுத்து முதல் டெஸ்டையும் வென்றது.
ஆனால், இந்திய அணிக்கு எதிராக பேஸ்பால் கிரிக்கெட் முறை அடுத்தடுத்த டெஸ்ட்களில் முற்றிலும் தோல்விஅடைந்தது என்றுதான் கூற முடியும். இதனால், பேஸ்பால் கிரிக்கெட் முறை என்பதை இங்கிலாந்து அணி கையில் எடுத்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால், அதை சுயபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியில் வென்று முன்னிலை பெற்றபின் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து அணியால் வென்றிருக்க முடியும். ஆனால், வீரர்கள் தேர்வு, 5 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தாதது, சுழற்பந்துவீச்சைக் குறைத்து மதிப்பிட்டது, பேஸ்பால் ஆட்டத்தை தீவிரமாக நம்பியது போன்றவை வாய்ப்புகளைத் தவறவிடத் தூண்டின.
குறிப்பாக முழுநேர 5 பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் பெரிதாக பயன்படுத்தவில்லை. ஜோ ரூட் போன்ற பகுதிநேரப் பந்துவீச்சாளர்கள் உதவியையே அதிகம் நாடியது. ஆன்டர்ஸன், மார்க் உட், போன்ற முழுநேரப் பந்துவீச்சாளர்களும் அதிகஓவர்கள் வீசவில்லை.
ஆன்டர்ஸன் போன்ற முழுநேரப் பந்துவீச்சாளர்கள் வீசிய ஓவர்களைவிட, ஜோ ரூட் வீசிய ஓவர்கள்தான் அதிகம். அது மட்டுமல்லாமல் இளம் சுழற்பந்துவீச்சாளர்களான ஹார்ட்லி, பசீர் போன்றோருக்கு அதிகமான சுமை ஏற்றியது, அனுபவற்ற இவர்களின் பந்துவீச்சை அதிகம் நம்பி இருந்தது போன்றவை இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணங்களாகும்.
ஆன்டர்சன் புதிய சாதனை
அதேபோல இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் டெஸ்ட் வரலாற்றில் 700வது விக்கெட்டுகளை எட்டி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை 41வயதான ஆன்டர்ஸன் பெற்றார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 9 போட்டிகளில் 2 தோல்வி, 6 வெற்றிகள், ஒரு டிரா என 74 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.68.51 சதவீதத்துடன் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்ததால், இங்கிலாந்து அணி 21 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தில் நியூசிலாந்து அணி 36 புள்ளிகளுடன் 60 சதவீதத்துடன் இருக்கிறது, ஆஸ்திரேலியா 78 புள்ளிகள் பெற்றாலும், சதவீதத்தில் 59 பெற்று 3வது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணித் தரப்பில் பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா(103),சுப்மான் கில்(110) சதம் அடித்தும், சர்ஃபிராஸ்கான், தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதமும் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியது.
2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் சேர்த்திருந்தது. 3வது நாள் ஆட்டம் நேற்றுத் தொடங்கியவுடன் குல்தீப் யாதவ்(30), பும்ரா(20) ரன்களில் ஆட்டமிழக்க 473 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. அஸ்வின் பந்துவீச்சில் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அஸ்வின் வீசிய 2வது ஓவரிலேயே டக்கெல்ட் 2ரன்னில் ஆட்டமிழந்தார். 6-வது ஓவரில் கிராலே டக்அவுட்டில் சர்ஃபிராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 10வது ஓவரில் ஒலே போப் 19 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று போராடிய இங்கிலாந்து அணி அடுத்த 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி இரு விக்கெட்டுகளையும் 6 ரன்கள் இடைவெளியில் இங்கிலாந்து இழந்தது.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்(84), பேர்ஸ்டோ(34) ஆகிய பேட்டர்களைத் தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஒட்டுமொத்தத்தில் 48.1 ஓவர்களில் 195 ரன்களுக்கு இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் “ முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக, இந்திய அணியைவிட நன்றாக ஆடினோம் என்று கூறுவேன். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் இந்திய அணியிடம் தோற்றுவிட்டோம். இந்த தொடரில் கிடைத்த நல்ல அனுபவங்களை எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவோம், அணியை எடுத்துச் செல்வோம். இந்திய அணியிடம் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் என அற்புதமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள் எந்த பேட்டரையும் அழுதத்தில் சிக்கவைத்துவிடுவார்கள். எங்கள் அணியில் கிராளே, டக்கெட் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறார்கள். பஷீர், ஹார்ட்லி தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆன்டர்சனின் 700 விக்கெட் சாதனை எந்த வேகப்பந்துவீச்சாளர்களும் செய்யாத அற்புதம்” எனத் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்