மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. ரயிலில் இருந்த பெண் பயணி ஒருவர், சில பயணிகள் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட முயன்றபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறுகிறார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் லக்னௌவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
சிலிண்டர் வெடித்து ரயிலில் தீ பற்றியதா?
இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர்.
இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் தயாரிக்க முற்பட்டபோது அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக ரேணுகா குப்தா என்ற பெண் பயணி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தனது கணவரை இழந்த ரேணு குப்தா பிபிசியிடம் பேசியபோது, “எங்களுடன் யாத்திரை வந்திருந்த மக்களில் யாரோ சிலர் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிலிண்டர் வெடித்து புகை வரத் தொடங்கியதும் அனைவரும் அலறியடித்து வெளியேற முற்பட்டோம். அப்போது சிலர் உள்ளே மாட்டிக் கொண்டார்கள். அதில் என் கணவரும் ஒருவர்,” என்று தெரிவித்தார்.
‘மதுரை மீனாட்சி அம்மனை இன்று தரிசிக்க இருந்தோம்’
மற்றொரு பயணி இந்த விபத்து குறித்துப் பேசியபோது, “கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தென்மாநிலங்களில் இருக்கும் கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக லக்னௌவில் இருந்து கிளம்பி வந்தோம். நேற்று நாகர்கோவிலில் இருக்கும் பத்மநாப சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு கன்னியாகுமரி ரயில் மூலமாக மதுரை வந்தோம்.
இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்தோம். அப்படியிருந்த சூழலில் இன்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை,” என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையடுத்து யாத்திரை பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளனர். அப்படி இறங்கிய பயணிகளில் 4க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்புத் துறையினர் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்டத்தின் மேலாளர் அனந்த் பத்பநாபன் தெரிவித்தார்.
ரயிலுக்குள் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் பிரதீப் பிபிசியிடம் பேசியபோது இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் என்று தெரிய வந்துள்ளது. மற்றுமோர் உடல் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்