அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய போரில் இதுவரை 14,000-க்கும் மேற்பட்ட பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,200 பேரும் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே போர் நடந்துவரும் நிலையில், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறைகளைச் சேர்ந்த பலர் பாலத்தீனத்திற்கு ஆதரவாகச் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு சில பிரபலங்கள், இதனால் தங்கள் தொழில் வாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்கள் ரத்தாவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர்.
என்ன சர்ச்சை?
இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஆசம் கானின் பெயரும் தற்போது இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய கிரிக்கெட் லீக் போட்டியின் போது ஆசம் கான் தனது பேட்டில் பாலத்தீன கொடியை ஒட்டியதற்காக அவருக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 50% அபராதமாக விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆசம் கானின் பாலத்தீன ஆதரவு செயலுக்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வையொட்டி சமூக ஊடகங்களில் ஆசம் கானுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்படுகின்றன.
ஐசிசி விதிகள் சொல்வது என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், கிரிக்கெட் வீரர்களின் உபகரணங்கள் அல்லது அணிகலன்களில், குறிப்பாக போட்டியின் போது மத மற்றும் அரசியல் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற தருணங்களில் ஐசிசியின் விதிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பின்பற்ற வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளை மீறியதற்காக ஆசம் கானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
‘அரசியல், மதம் அல்லது இன நோக்கங்களுக்காக’ எந்தவொரு செய்தியையும் போட்டியின் போது பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என ஐசிசி விதிகள் கூறுகின்றன.
உலகெங்கிலும் உள்ள மக்களையும், சமூகங்களையும் ஒன்றிணைப்பதற்காக கிரிக்கெட் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஐசிசி மற்றும் அதன் உறுப்பினர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று ஐசிசி கூறுகிறது.
ஐசிசி விதிகளின்படி, எந்தவொரு வீரரின் சட்டை, டி-ஷர்ட், பேண்ட், ஸ்வெட்டர், தொப்பி, ஹெல்மெட், மணிக்கட்டு மற்றும் நெற்றியில் அணியும் பேண்ட்கள், கண்ணாடி மற்றும் பிற உபகரணங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர் மற்றும் இலச்சினை மட்டுமே பயன்படுத்த ஐசிசி அனுமதித்துள்ளது.
இது தவிர, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான இலச்சினை, சின்னம் உள்ளிட்டவையும் ஐசிசியின் அனுமதி இருந்தால் மட்டுமே பயன்படுத்தமுடியும்.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத எந்தவொரு ஆடை அல்லது உபகரணங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதிகளின்படி, வீரர்களின் பேட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்பான்சரின் லோகோவை மட்டுமே வைத்திருக்க முடியும்.
ஐசிசியால் அங்கீகரிக்கப்படாத சின்னம் இருக்கும் ஆடைகள் அல்லது உபகரணங்களைப் பற்றி போட்டியின் நடுவரிடம் முறையிட்டால் அந்த வீரர் விளையாடுவதையும் தடுக்க முடியும்.
சமூக ஊடகங்களில் ஆசம் கானுக்கு ஆதரவு
பாலத்தீனத்திற்கு ஆதரவாக பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆசம் கானுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அத்துடன் ஆசம் கானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவரைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
“ஆசம் கானுக்கு அபராதம் விதிப்பது சரியல்ல. பாகிஸ்தான், பாலத்தீனத்தை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும்,” என்று சில பயனர்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் தெரிவித்துள்ளனர்.
“பாலத்தீனத்தை ஆதரிப்பது குற்றம் என்றால், ஆசம் கான் மட்டுமல்ல. நாம் அனைவரும் அபராதம் செலுத்த வேண்டும்,” என அலிசி என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “இந்த பேட்டை ஏலத்தில் விடுங்கள், ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
ஆனால் சில பயனர்கள் இதுபோன்ற செயல்களில் இருந்து விளையாட்டை ஒதுக்கி வைப்பது நல்லது என்று நினைக்கிறார்கள்.
அவர்களில் ஒருவரான தாஹிர் ஷஷாத், “விளையாட்டையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும். இந்திய வீரர்கள் காஷ்மீரில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ, ஆப்கானிஸ்தான் வீரர்கள் TTP கொடியை கொண்டு வந்தாலோ என்ன நடக்கும். விளையாட்டு மைதானங்கள் போர்களமாக மாறாமல், அமைதியாக விளையாட்டு நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ” என்கிறார்.
பாலத்தீனத்திற்கு ஆதரவாகப் பதிவிட்ட மற்ற வீரர்கள்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் சூழலில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அதன் விளைவுகளை எதிர்கொண்ட மற்றொரு விளையாட்டு வீரர் அன்வர் எல் கஸி. சர்வதேச கால்பந்து வீரரான இவர் ஜெர்மனியைச் சேர்ந்த மெயின்ஸ் 05 என்ற கால்பந்து கிளப்புக்காக விளையாடி வந்தார்.
பாலத்தீன ஆதரவு கருத்தை பதிவிட்டதை தொடர்ந்து அன்வரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது அவர் விளையாடி வந்த கால்பந்து கிளப்.
இதேபோல இஸ்ரேல் – பாலத்தீன பிரச்னை தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக அல்ஜீரியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் யூசுப் அட்டலை அவர் விளையாடி வந்த ஃபிரான்ஸ் நாட்டின் நைஸ் கால்பந்து கிளப் இடைநீக்கம் செய்தது.
சௌதியின் அல் இட்டிஹாத் கிளப் அணிக்காக விளையாடி வரும் பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரமான கரீம் பென்சிமாவும், பாலத்தீனத்திற்கு ஆதரவான தனது சமூக ஊடக பதிவுக்காக விமர்சனத்திற்கு உள்ளானர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஃபிரான்ஸ் நாட்டில் பலரும் தெரிவித்து சமூக ஊடகம் மற்றும் தேசிய தொலைக்காட்சியில் வாதிட்டர்.
இது தவிர, பல மொராக்கோ கால்பந்து வீரர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக காஸாவுக்கு தங்கள் ஆதரவை வெளிக்காட்டினர். இதற்காக மேற்கத்திய ஊடகங்களால் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.
யார் இந்த ஆசம் கான்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான மொயீன் கானின் மகன் தான் இந்த ஆசம் கான்.
இவரது தந்தையைப் போலவே, ஆசம் கானும் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார்.
பெரிய பந்துவீச்சாளர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து மொயீன் கான் பிரபலமானார்.
ஆசம் கான் தனது 12-வது வயதில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் இரட்டை சதம் அடித்து தனது முத்திரையை பதித்தார்.
உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆசம் கான் ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார்.
அவர் தனது கிளப் வாழ்க்கையில் 50-க்கும் மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார். ஆசம் கான் பேட்டிங் செய்யும் போது இமாலய சிக்சர்கள் வருவது இயல்பான ஒன்று என அவரது பேட்டிங்கை கவனித்து வருபவர்கள் கூறுகின்றனர்.
ஒரு கிளப் போட்டியின் போது, தனது தந்தையுடன் களமிறங்கி 38 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 88 ரன்களை ஆசம் கான் குவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்