ரபாடா தனது துல்லியமான பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தபோதிலும், கே.எல்.ராகுலின் தீர்மானமான போராட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஓரளவு கவுரமான ஸ்கோருடன் தப்பித்துள்ளது.
செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், 59 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களுடன் ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது.
இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட கே.எல்.ராகுல் 70 ரன்களுடனும், சிராஜும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கே.எல்.ராகுல் மட்டும் நடுவரிசையில் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
2021ம் ஆண்டில் இதே செஞ்சூரியன் ஆடுகளத்தில் இந்திய அணி 113 ரன்களில் வென்றபோது ராகுல் சதம் அடித்திருந்தார். அதேபோன்ற ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார்.
ஆனால், கே.எல்.ராகுல் களத்தில் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, 80 சதவீதம் மிகுந்த கட்டுப்பாடுடன், ஒழுக்கத்துடன் அடிக்கப்பட்ட ஷாட்கள், பாரம்பரிய கிரிக்கெட் முறையை பின்பற்றியவிதம் ஆகியவைதான் அவரை களத்தில் நங்கூரமிடச் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்தியா 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
இன்று 2வது நாள் ஆட்டம் நடக்க இருக்கும் நிலையில், ஆடுகளம் காலையில் ஈரப்பதத்துடன் இருக்கும். களத்தில் டெய்லெண்டரான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மட்டுமே உள்ளனர். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்விங் பந்துவீச்சையும்,
காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும் ஆடுகளத்தில் வேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். ஸ்ட்ரைக்கே ராகுல் தொடர்ந்து வைத்துக்கொள்ளும்பட்சத்தில் இந்திய அணி 250 ரன்கள் வரை சேர்க்கலாம். இல்லாவிட்டால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க நேரிடலாம்.
வரலாறு படைக்குமா இந்தியா
இந்திய அணி கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் விளையாடியுள்ளன. ஆனால், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை. 2010-11ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் தொடரை மட்டும் கங்குலி கேப்டன்ஷியில் தொடரை சமன் செய்தது. மற்றவகையில் இதுவரை எந்த தொடரையும வென்றதில்லை.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 2006, 2010, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவில் நடந்த 15 டெஸ்ட்போட்டிகளில் இந்திய அணி 4 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது, 17 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது, 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
அதிலும் முதல் டெஸ்ட் நடந்துவரும் செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அந்த நம்பிக்கையில்தான் இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள்.
இந்திய அணி தற்போது தலைமுறை மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்றோருக்கு பதிலாக இளம் வீரர்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு ஆட்டமும் இந்திய அணிக்கு கத்தியின் மீது நடப்பது போல்இருக்கிறது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் கலந்து போட்டியை எதிர்கொண்டு வருகிறார்கள்.
வாய்ப்பை இழந்த தென்ஆப்பிரிக்கா
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. தென்ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டனர், கேட்சுகளையும் பீல்டர்கள் கோட்டைவிட்டனர். தென் ஆப்பிரிக்காவில் காகிசோ ரபாடா, யான்செனைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 3 பந்துகளை தவறான லென்த்தில்தான் பந்துவீசினர்.
தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் இன்னும் கட்டுக்கோப்புடனும், ஒழுக்கத்துடனும் பந்துவீசியிருந்து, பீல்டர்கள் கேட்சுகளை கோட்டைவிடாமல் இருந்திருந்தால், இந்திய அணியை 150 ரன்களில் சுருட்டியிருக்கலாம். முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா கை ஓங்கியிருக்கும். அந்த வாய்ப்பை பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் தவறவிட்டனர்.
திசைமாறிய ஆட்டம்
செஞ்சூரியன் ஆடுகளம் கடினமானது, வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமானது. இந்த ஆடுகளத்தில் காலை நேரத்தில் நிலவும் ஈரப்பதம், கடினத்தன்மையைப் பயன்படுத்தி, இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவருக்கும் 2 கேட்சுகளை கோட்டைவிட்டபோது, ஆட்டம் திசைமாறியது.
ரபாடா கூட தொடக்கத்தில் சிறிது லைன் லென்த்தை கண்டுபிடித்து பந்துவீச சிரமப்பட்டார். ஆனால், சரியான இடத்தைக் கண்டறிந்து அதில் பந்துவீசத் தொடங்கியும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 14-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்தார்.
தவறான ஷாட்கள்
இந்திய அணி டெஸ்ட் அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியது. முதல் 11 ஓவர்களில் 17 முறை தவறான ஷாட்களை ஆடி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பது தெரிந்ததே, அதைத் தெரிந்து கொண்டு பேட்டை நீட்டி விளையாடுவது இதுபோன்ற நிலைக்குத் தள்ளிவிடும்.
அதிலும் ரோஹித் சர்மாவின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட ரபாடா ஷார்ட் பந்துவீச, சொல்லிவைத்தார்போல் ஃபைன்லெக் திசையில் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார்.
அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் சென்ற பந்தை தேவையின்றி தொட்டு 17 ரன்னில் பர்கரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதுபோன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 3 ஸ்லிப் பீல்டர்களை நிறுத்திவைத்து பந்துவீசும்போது, அவுட்சைட் ஆஃப்திசையில் செல்லும் பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்ய வேண்டும் இல்லாவிட்டால், இக்கட்டான நேரத்தில் இதுபோன்று விக்கெட்டுகளை இழக்கநேரிடும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே கில் பேட்டிங்கில் ஃபார்ம் இழந்து தவித்து வருகிறார். டெஸ்ட் போட்டியிலும் அவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. பர்கர் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே தவறான ஷாட்களை ஆடியதால், இழக்க நேர்ந்தது.
வாய்ப்புகளை தவறவிட்ட கோலி, ஸ்ரேயாஸ்
அடுத்துவந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமாக ஆடி மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். இருவரும் 4 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்சை தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் கோட்டைவிட்டனர். ஆனால், அந்த வாய்ப்பைக் கூட கோலியும், ஸ்ரேயாஸும் பயன்படுத்தவில்லை. ஏற்கெனவே செய்த தவறுக்குத்தான் 3 விக்கெட்டுகளை இந்திய அணிஇழந்திருந்த நிலையில், கோலிக்கும், ஸ்ரேயாஸுக்கும் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை தக்கவைக்க இருவருமே தவறவிட்டனர்.
ரபாடா வீசிய துல்லியமான பந்தை டிபென்ட் செய்து பேக்ஃபுட்டில் ஆட ஸ்ரேயாஸ் முயன்றபோது க்ளீன் போல்டாகியது. 31 ரன்னில் ஸ்ரேயாஸ் வெளியேறினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.
அடுத்த சிறிது நேரத்தில் ரபாடாவின் மின்னல் வேக ஸ்விங் பந்துவீச்சுக்கு விராட் கோலி இரையாகினார். ரபாடா 142 கி.மீ வேகத்தில் வீசிய அவுட் ஸ்விங்கில், கோலியின் பேட்டில் பட்டு பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. விராட் கோலி 38 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
சரிவிலிருந்து மீட்ட ராகுல்
கே.எல்.ராகுல் களத்தில் இருந்தபோது இந்திய அணி 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அடுத்துவந்த அஸ்வினும் 8 ரன்னில் வெளியேறினார். 92 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், அடுத்த 28 ரன்களுக்குள், மேலும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபின், தொடர்ந்து நெருக்கடி கொடுக்க தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் உணவு இடைவேளைக்குப்பின் லைன் லென்த்தை தவறவிட்டு, தவறான லென்த்தில் பந்துவீசியதால், கே.எல்.ராகுல் ஷாட்களை அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்.
கே.எல்.ராகுல் தன்னுடைய பேட்டிங்கில் எந்த தவறான ஷாட்களையும் பெரும்பாலும் அடிக்காமல் 80 சதவீத ஷாட்களை கட்டுக்கோப்பாகவே ஆடினார். அதனால்தான் இதுபோன்ற ஆடுகளத்தில் அரைசதம்அடித்தநிலையிலும் களத்தில் நங்கூரமுடிந்தது.
கே.எல்.ராகுல் தான் சந்தித்த ஒவ்வொரு 9 பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி அடித்தால்தான் உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்காமல் முழுக்க டிபென்ஸ் ப்ளே ஆடுவதற்கு ஏதுவாக இல்லை. இருப்பினும், ராகுலின் நேர்த்தியான பேட்டிங், பொறுமை, தவறான பந்துகளை மட்டுமே ஷாட்களாக மாற்றுவது என பாரம்பரிய கிரிக்கெட்டை மறக்காமல் பேட் செய்தார்.
கடந்த 2021ம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்களில் வென்றது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் சதம்தான் இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாகஅமைந்தது. அதுபோல் இந்த ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் சதமும், இந்திய அணியின் வெற்றியும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்