செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற முயன்ற ஹூதி குழுவின் சிறு படகுகளை தாக்கி அழித்துள்ளது அமெரிக்க கடற்படை.
ஏமனில் உள்ள ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நான்கு படகுகள் மார்ஸ்க் ஹாங்சோ (Maersk Hangzhou) என்ற சரக்கு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அதை கைப்பற்ற அருகில் வந்ததாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அருகிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலின் ஹெலிகாப்டர்களுக்கு இதுகுறித்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் பேரில் ஹூதி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க கடற்படை “தற்காப்புக்காக” மூன்று படகுகளை முழ்கடித்துள்ளது.
இதில் அந்த படகுகளில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். நான்காவதாக வந்த படகு தப்பித்து விட்டது.
முக்கியமான கடல்பாதையான செங்கடல் பகுதியில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது நவம்பர் மாதத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டிரோன் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது ஹூதி குழு.
ஹூதிக்களை நடுக்கடலில் மூழ்கடித்த அமெரிக்க கடற்படை – நடந்தது என்ன?
இரான் ஆதரவு பெற்ற ஏமன் கிளர்ச்சி குழுவான ஹூதிக்கள் காஸா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலை சேர்ந்த கப்பல்களை மட்டுமே தாக்குவதாக அறிவித்திருந்தது.
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள வணிகக் கப்பலான, மார்ஸ்க் ஹாங்சோ சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு டேனிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் என்று சென்ட்காம் (Centcom) தெரிவித்துள்ளது.
உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான மார்ஸ்க், அடுத்த 48 மணிநேரத்திற்கு செங்கடல் பகுதியில் தனது கப்பல்கள் செல்வதை நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இந்த பகுதியில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்த பிறகு, சமீபத்தில் தான் இந்நிறுவனம் இந்த கடல் பாதையை மீண்டும் பயன்படுத்த தொடங்கியிருந்தது.
முன்னதாக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக இந்நிறுவனத்தின் கப்பல்கள் மிக நீளமான பாதையான ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.
ஏமன் நேரப்படி நான்கு ஹூதி படகுகள் 6:30 மணியளவில் (03:30 GMT) சிறிய ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கப்பலோடு வந்து குறிப்பிட்ட கப்பலை தாக்கியுள்ளனர். அந்த கப்பலுக்கு 20மீ (66 அடி) அருகில் சென்று, அதில் ஏற முயன்றுள்ளனர். இதனால், மார்ஸ்க் கப்பலின் பணியாளர்கள் அவசர அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கு சென்ற அமெரிக்க கடற்படையினர், கிளர்ச்சிக்குழு படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
உதவிக்கான அழைப்பு வந்ததும் அருகிலிருந்த யுஎஸ்எஸ் ஐசன்ஹோவர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் யுஎஸ்எஸ் கிரேவ்லி டிஸ்டிராயர் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்றுள்ளன. முதலில் இந்த ஹெலிகாப்டர்கள் மூலம் அந்த சிறிய படகுகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர்கள் ஹெலிகாப்டரை நோக்கியும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் தற்காப்புக்காக மீண்டும் ஹெலிகாப்டர்கள் அந்த படகுகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில், மூன்று படகுகள் முழுமையாக தண்ணீரில் மூழ்கினர். அதிலிருந்த குழுவினர் மொத்தமாக இறந்து போயினர் என்று சென்ட்காம் தெரிவித்துள்ளது. மேலும் நான்காவது படகு தப்பித்து விட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் மற்றும் உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது கடந்த 24 மணிநேரத்தில் மார்ஸ்க் ஹாங்சோ மீது நடந்த இரண்டாவது தாக்குதலாகும். சனிக்கிழமை அதன் மீது ஏவுகணை தாக்குதலுக்கு குறிவைக்கப்பட்டது.
சென்ட்காமின் முந்தைய அறிக்கையின்படி, ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டன. அப்போது டிஸ்டிராயர் கிரேவ்லி மற்றும் லாபூன் எதிர்த்தாக்குதல் நடத்தின.
டிசம்பர் 18 அன்று உலகளாவிய ரோந்து தொடங்கப்பட்ட பின்னர் இந்த ஏவுகணை தாக்குதலே முதல் வெற்றிகரமான எதிர் தாக்குதலாகும் என்று ஏபி செய்தி முகமையிடம் கூறியுள்ளார் அமெரிக்க கடற்படை அட்மிரல்.
அவசர கால அழைப்புக்கு உதவ சென்றிருந்தபோது, ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இரண்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஏவப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
அனுப்பப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை யுஎஸ்எஸ் கிரேவ்லி அழித்ததாக சென்ட்காம் கூறியுள்ளது. மேலும், நவம்பர் 19இலிருந்து சர்வதேச கப்பல்கள் மீது நடத்தப்பட்ட 23ஆவது தாக்குதல் இது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
“மார்ஸ்க் ஹாங்சோ கப்பல் கடலில் பயணிக்கும் தகுதியோடு இருப்பதாகவும், எந்த சேதங்களும் அதில் இல்லை” என்றும் கூறியுள்ளது சென்ட்காம்.
இது இல்லாமல் தனியாக, யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (யுகேஎம்டிஓ) அமைப்பு ஏமன் துறைமுகமான ஹொடைடாவின் தென்மேற்கு செங்கடலில் 55 கடல் மைல் (101 கிமீ) தொலைவில் ஒரு சம்பவத்தைப் புகார் செய்துள்ளது.
அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று “கப்பலின் முனையில் அதிக சத்தத்துடன் கூடிய வெளிச்சத்தை உருவாக்கியதாகவும்” மற்றும் எதையோ வெடித்தாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து குழு உறுப்பினர்களும் பத்திரமாக இருக்கிறார்கள் என்றும், கப்பல் அருகிலுள்ள துறைமுகத்திற்கு சென்று விட்டதாகவும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல வாரங்களாக ஹூதி தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், மார்ஸ்க் உள்ளிட்ட பல கப்பல் நிறுவனங்கள் செங்கடலில் இருந்து தங்கள் கப்பல்களை திசைதிருப்பி, அதற்கு பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றி பயணிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தரைக் கடலை இணைக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயை அடைய கப்பல்கள் ஏமனில் ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் கடற்கரைக்கு அப்பால் உள்ள சிறிய பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாகச் செல்ல வேண்டும்.
ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுவான ஹூதிக்கள் முதலில் இஸ்ரேல் போரை நிறுத்த வைக்கும் முயற்சியாக, காஸா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் சார்ந்த கப்பல்களை மட்டுமே தாக்குவதாக அறிவித்திருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் “ஹூதிக்களுக்கு நீண்டகால ஆதரவை வழங்கி வருவதால், இந்தத் தாக்குதல்களைத் தடுக்கும் பொறுப்பை தெஹ்ரானும் பகிர்ந்து கொள்கிறது” என்று இரானின் வெளியுறவு அமைச்சரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஏபி செய்தி முகமையின் நேர்காணலில் பேசியுள்ள அமெரிக்க கடற்படை துணை அட்மிரல் பிராட் கூப்பர், ஹூதிகள் அவர்களின் மோசமான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவது போல் தெரியவில்லை. அவர்களை எதிர்த்துப் போரிடவே புதிய கடல்சார் சிறப்புக்குழு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிசம்பரில், இந்த பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச கூட்டணியை அமெரிக்கா ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற பெயரில் தொடங்கியது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதில் இருந்து செங்கடல் பகுதியில் 1200 வணிக கப்பல்கள் பயணித்துள்ளதாகவும், சனிக்கிழமை வரை இதில் எந்த கப்பல் மீதும் டிரோன் அல்லது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் துணை அட்மிரல் கூப்பர்.
சர்வதேச பாதுகாப்பு படையை அறிவித்ததில் இருந்து, ஹூதிக்கள் நவம்பர் மாதம் முதல் 100 டிரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. இதில் 35 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்ட 10 வணிக கப்பல்கள் குறி வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் சந்தைகளை ஆசியாவுடன் இணைக்கும் உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்று இந்த செங்கடல்.
மத்திய கிழக்கில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான மிக முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்று என்பதால், இந்த தாக்குதல்களால் இவை அனைத்தின் விலைகளும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்