பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயமாக பிரதமரை தேர்ந்தெடுக்க முடியுமா?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயமாக பிரதமரை தேர்ந்தெடுக்க முடியுமா?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Reuters

சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வியாழக்கிழமையன்று நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறி, தனது ஆதரவாளர்களைக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவருக்கு ஆதரவளித்து தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் இதுவரை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருபுறம், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்களைத் தனது கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுவரையிலான தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒட்டுமொத்த பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முதல் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களின் மகத்தான வெற்றி குறித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் செயற்கை நுண்ணறிவு மூலம் பேசியுள்ளார்.

இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதால், செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது உரை வெளியிடப்பட்டுள்ளது. அவரது குரலில் வெளியாகியுள்ள அந்த அறிக்கை பிடிஐ மற்றும் இம்ரான் கானின் எக்ஸ் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இம்ரான் கான் என்ன பேசினார்?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம், IMRAN KHAN/X

அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் அந்த அறிக்கையில், “வாக்களிப்பதன் மூலம் உண்மையான சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளீர்கள். 2024 தேர்தலில் வெற்றி பெற உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் வாக்குகளால் லண்டனின் திட்டம் தோல்வியடைந்துள்ளது,” என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் குறித்து இம்ரான் கான் பேசியபோது, “30 தொகுதிகளில் பின்தங்கியிருந்த போதிலும் வெற்றி உரை நிகழ்த்தப்பட்டதாக” கூறினார்.

இம்ரான் கான், “மோசடி தொடங்குவதற்கு முன்பு, நாம் 150 இடங்களை வென்றிருந்தோம்,” என்று கூறினார். படிவம் 45இன் தரவுகள்படி, நாம் 170 தொகுதிகளை வென்றுள்ளோம் என்றார்.

இருப்பினும் இதுவரையிலான முடிவுகளின்படி, இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். பிடிஐ கட்சி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால், அவர்கள் தரப்பில் அதுகுறித்த எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

இம்ரான் கான் தனது கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் வாக்குகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்ட வீடியோவில் இம்ரான் கானின் சொந்தக் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம், EPA

கடந்த வியாழனன்று பாகிஸ்தானில் 266 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், பிடிஐ கட்சியை ஆதரித்த 84 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வேட்பாளர்கள் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 51 இடங்களிலும் மற்ற வேட்பாளர்கள் 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை வெற்றிபெற்றுள்ள இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்களில், பிடிஐ கட்சியின் தலைவர் பாரிஸ்டர் கௌஹர் அலி கான், மூத்த துணைத் தலைவர் லத்தீப் கோசா, நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆசாத் கைசர், கட்சி உறுப்பினர் அலி அமின் கந்தாபூர் ஆகியோரும் அடக்கம்.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தேர்தல் ஆணையம் ரத்து செய்து, அவரகளது தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். தேர்தல் ஆணையத்தின் முடிவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பிடிஐ வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடாமல் வெவ்வேறு சின்னங்களின் கீழ் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டதற்கு இதுவே காரணம். இந்தத் தடைகளை மீறியும் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.

சுயேட்சை வேட்பாளர்களுக்கு மற்ற கட்சிகள் அழைப்பு

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம், EPA

தேர்தல் சட்டங்களை மேற்கோள் காட்டி, தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேட்சை வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளில் சேர வேண்டிய தேவை சட்டப்பூர்வமாக இல்லையென்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதாவது, அவர்கள் விரும்பினால் தேசிய அல்லது மாகாண சபையில் சுதந்திரமான நிலையிலேயே இருக்க முடியும்.

இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் ஆய்வாளர் ரஃபியுல்லா காக்கரின் கூற்றுப்படி, ஒரு சுயேட்சை வேட்பாளரின் அரசியல் கட்சி இணைவது குறித்த நோக்கம் அவரது அரசியல் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது, ஓர் அரசியல் சித்தாந்தத்துடன் தன்னை இணைத்துக்கொள்வது, நாடாளுமன்றத்தில் தீவிரமாகப் பங்கு வகிப்பது ஆகியவற்றைப் பொறுத்தது.

ஆனால் வெற்றி பெற்ற பிறகு, இந்த வேட்பாளர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் இருக்கும். அதன்போது அவர்கள் அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, சுயேட்சை வேட்பாளர்கள், வாக்குச் சீட்டில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள கட்சியில் மட்டுமே சேர முடியும்.

“பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி செயல்படவில்லை. எனவே இந்த சுயேட்சை வேட்பாளர்கள் எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது பெரிய சவாலாக இருக்கும்” என்று ரஃபியுல்லா காக்கர் கூறுகிறார்.

தேர்தலுக்கு முன், தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர்கள், தாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

சுயேட்சை வேட்பாளர்களுக்கு நவாஸ் ஷெரிஃப், பிலாவல் பூட்டோ அழைப்பு

பாகிஸ்தான் தேர்தல்: அதிக இடங்களில் வென்றுள்ள இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன் இருக்கும் வாய்ப்புகள்

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பல மணிநேரம் தாமதத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தொடங்கியது. இதுவரை அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, பிடிஐ கட்சி கைபர் பக்துன்க்வாவிலும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி பஞ்சாபிலும் முன்னிலையில் இருக்கின்றன. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சிந்து மாகாணத்தில் முன்னிலை வகிக்கிறது.

கைபர் பக்துன்க்வாவில் சுயேட்சை வேட்பாளர்களின் வியக்கத்தக்க வெற்றிக்குப் பிறகு, அவர்களுக்கு இரண்டு பெரிய கட்சிகளில் இருந்து தங்களுடன் இணைவதற்கு வாய்ப்புகள் வருகின்றன.

சுயேட்சை வேட்பாளர்களை பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணையுமாறு பிலாவல் பூட்டோ அழைப்பு விடுத்துள்ளார். சுயேட்சை வேட்பாளர்களைத் தங்கள் கட்சியில் சேர்ப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, “இதில் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். சுயேட்சை வேட்பாளர்கள் பிடிஐ-இல் சேர அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக அவர்கள் விரும்பினால் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஒரு சிறிய கட்சியுடன் கூட்டணியை உருவாக்கலாம்,” என்று கூறினார்.

தற்போது பாகிஸ்தான் ஒரு ‘பிளவுபட்ட ஆணையை’ நோக்கி நகர்வதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“வடக்கு பஞ்சாபில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றாலும், மத்திய பஞ்சாபில் தோல்வியடைந்து வருகிறது. பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரிஃப் 80 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 50 அல்லது 55 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தச் சூழ்நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் இணைந்தால் அது கட்சியின் பலத்தை அதிகரிக்கும்,” என்று கூறுகிறார்.

இந்தக் குழப்பங்களுக்கு நடுவில், நவாஸ் ஷெரிஃப் என்.ஏ-15 மன்செரா தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான ஷாஜாத் முகமது கஸ்டஸ்ப் கானிடம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். மற்றொருபுறம் அவர் லாகூரில் உள்ள தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்ந்தெடுக்க முடியுமா?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம், EPA

சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியுமா எனக் கேட்டபோது, அவர்களால் அவ்வாறு செய்ய முடியும் என்றார் ரஃபியுல்லா காக்கர்.

பாகிஸ்தானில் 266 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தங்களுக்கு 134 இடங்கள் இருந்தால், அதை முழுகையாகச் செய்ய முடியும் என்கிறார் அவர்.

எப்படியிருப்பினும், சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரதமரைத் தேர்வு செய்வது நடைமுறைச் சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *