தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில், அ.தி.மு.கவின் முதலமைச்சர்கள் குறித்தும் ஆட்சி குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.
அவரது இந்தப் பேச்சு அரசியல் தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மோதி இப்படிப் பேசியது கூட்டணிக்காகவா, வாக்குகளுக்காகவா?
பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவடைவதை ஒட்டி, இன்று (செவ்வாய், பிப்ரவரி 27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு அருகில் உள்ள மாதப்பூரில் மிகப் பெரிய பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் மதுரையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் இயக்கம் தொடர்பான விழாவில் பங்கேற்பதற்காகவும் குலசேகரப்பட்டனத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியைத் துவக்கிவைப்பதற்காகவும் இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார்.
திருவனந்தபுரத்திற்கு வந்திருந்த பிரதமர் அங்கிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார். அங்கிருந்து சூலூர் விமானப்படைத் தளத்துக்குச் சென்று, ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் மாதப்பூர் வந்தடைந்தார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மோதி, திறந்தவெளி காரில் ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார். வாகனத்தில் அவருடன் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உடனிருந்தனர்.
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில், பா.ஜ.க. தலைவர்கள் போக, கூட்டணிக் கட்சியின் தலைவர்களான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களும் அமரவைக்கப்பட்டிருந்தனர். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் எனக் கருதப்பட்ட அ.ம.மு.கவின் தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பிரதமருக்கு முன்பாக, எல். முருகனும் கே. அண்ணாமலையும் பேசினார். இவர்களுக்குப் பிறகு பேசவந்த பிரதமர் நரேந்திர மோதி, பேச்சின் துவக்கத்தை ஆங்கிலத்தில் பேசினாலும் பிறகு முழுமையாக இந்தியில் பேசினார். அவரது பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
என்ன பேசினார் மோதி?
பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு, அ.தி.மு.கவின் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோரையும் புகழ்ந்து பேசினார்.
“இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. குறித்துதான் அதிகமாகப் பேசப்படுகிறது,” என்று கூறிய அவர், தொடர்ந்து, “தமிழ்நாடு, நாட்டின் அரசியல் வளர்ச்சியில் புதிய ஒரு மையமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, வரும் 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு புதிய சரித்திரத்தைப் படைக்கப் போகிறது. பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் ஆதரவு வந்துகொண்டிருப்பதை நான் கவனித்து வருகிறேன்,” என்றார்.
மேலும் “தமிழ் மொழியும் கலாச்சாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதனால்தான் ஐ.நா. சபையில் பேசியபோது என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிதைகளை அங்கு பேசினேன். எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் காசி சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தினேன். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவி, அதற்கு மிகப்பெரிய மரியாதையை கொடுத்திருக்கிறேன்,” என்றார்.
“தமிழ் நாட்டில் பா.ஜ.க. எப்போதுமே ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால், பா.ஜ.கவின் மனதில் தமிழ்நாடு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. பா.ஜ.கவின் பலம் பெருகிவருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் கொள்ளையடித்து ஆட்சி நடத்துபவர்கள் பொய்யான தகவல்களைக் கூறி மக்களைத் திசை திருப்புகின்றனர்,” என்றார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் புகழாரம்
தொடர்ந்து பேசிய மோதி, “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியாக இருந்தபோது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கொடுத்த நிதியைவிட கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகமான நிதியை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கொடுத்துள்ளோம்,” என்றார்.
“2004-2014 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. எனவே, தமிழகத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
“நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என் நினைவுக்கு வந்தார். இலங்கையில் அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று அவர் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழ்நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன்.
“பத்தாண்டு காலம் அவரது நல்லாட்சி காரணமாக சிறந்த கல்வியும் மருத்துவ வசதிகளும் கிடைத்தன. இதனால், இப்போதுவரை ஏழை மக்கள் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக புகழ்ந்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். குடும்ப அரசியலால் அரசியலுக்கு வரவில்லை. தனிப்பட்ட திறமையின் காரணமாக முதலமைச்சராக வந்தார்.
“இன்று தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை அவமதிக்கும் விதமாக தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டின் மக்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார்,” என்றார் மோதி.
கூட்டத்தில் பங்கேற்காத டிடிவி தினகரன், ஓபிஎஸ்
தொடர்ந்து பேசிய மோதி “இப்போது இண்டியா கூட்டணி உருவாகி உள்ளது. டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கூட்டணி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 2024-இல் கொள்ளையடிக்க நினைக்கும் அந்தக் கடையை மூட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
பேச்சின் நடுவில் மத்திய அரசின் திட்டங்களான உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுத் திட்டம் ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பலனடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் சில விஷயங்கள் கவனிக்க வைத்தன. முதலாவதாக, இந்தத் தேர்தலில் பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கவிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாகச் சொல்லும் ஓ. பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் டிடிவி தினகரன் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை.
ஓ.பி.எஸ் ஏன் கலந்துகொள்ளவில்லை?
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மருது அழகுராஜ், “பா.ஜ.க.வைப் பொறுத்தவரை இன்னமும்கூட எல்லா அணியையும் ஒருங்கிணைக்க நினைக்கலாம். அப்படியிருக்கும்போது அதில் ஒரு அணியை மட்டும் அழைத்தால் சரியாக இருக்காது என்று, ஓ.பி.எஸ்ஸை அழைக்காமல் இருக்கலாம். எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் இன்னமும் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே கூட்டணியை உறுதிசெய்துவிட்டார், அவர் நம் பக்கம்தான் இருக்கிறார், ஆகவே மற்றொரு பக்கத்தை கவர பா.ஜ.க. விரும்பலாம். அதன் காரணமாகவே எங்களை அழைக்கவில்லை” என்கிறார்.
ஆனால், கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் முடியாததால் ஓ.பி.எஸ். அழைக்கப்படாமல் இருந்திருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். “ஒரு தொகுதி மட்டும் கேட்கும் கட்சிகளுக்கு இடம் கொடுப்பதில் பிரச்சனை வராது. ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை பல தொகுதிகளைக் கேட்டிருக்கலாம். அதில் பா.ஜ.க. குறித்துவைத்த தொகுதிகளும் இருந்திருக்கலாம். ஆகவே தொகுதிப் பங்கீடு இன்னும் முடிந்திருக்காது. தொகுதிப் பங்கீடு முடியாமல் மேடைக்கு வந்து பலனிருக்காது” என்கிறார் ஷ்யாம்.
எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னது பலனளிக்குமா?
அதேபோல, இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை மோதி புகழ்ந்து பேசியதும் அரசியல்நோக்கர்களால் கவனிக்கப்பட்டது.
“இப்படிப் பேசினால் அ.தி.மு.கவின் வாக்குகள் கிடைக்கும் என பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால், மோடியா இந்த லேடியா என ஜெயலலிதா இவர்களை உதாசீனப்படுத்தியிருக்கிறார். நிராகரித்திருக்கிறார். அதைத் தொண்டர்கள் மறந்துவிடுவார்களா? சமீபத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தமிழ்நாடு அரசு நினைவுகூர்ந்தது. பா.ஜ.க.விலிருந்து யார் அங்கே வந்தார்கள்? தவிர, அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட கட்சி. அதன் தொண்டர்கள் அ.தி.மு.கவுக்குத்தான் வாக்களிப்பார்கள். எடப்பாடி கே. பழனிச்சாமி மீது அதிருப்தி இருப்பவர்கள்கூட பா.ஜ.கவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எம்.ஜி.ஆர். நிறுவிய கட்சி. இது பா.ஜ.கவுக்குத்தான் பாதகமாக அமையும்,” என்கிறார் ஷ்யாம்.
கட்சி பிளவுபட்டிருப்பதால் எல்லாக் கட்சிகளுக்கும் அ.தி.மு.கவின் வாக்குகளை பெறும் ஆசை இருக்கிறது. பா.ஜ.கவும் அதை முயற்சித்துப் பார்க்கிறது என்கிறார் மருது அழகுராஜ்.
“மறைந்த தலைவர்களைப் பெருமைப்படுத்திப் பேசுவதில் தவறில்லை. அது ஒரு தூண்டில்தான். பா.ஜ.கவைப் பொறுத்தவரை அவர்களிடம் தலைவர்கள் இருந்தாலும் தொண்டர்கள் இல்லை. ஆகவே தொண்டர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்களை அபகரிக்க நினைக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூட்டணிக்காக காத்துக்கிடந்தவர்கள், இப்போது கூட்டணிக்கு தலைமை தாங்குவோம் என்றும் எல்லோரும் தங்களைத் தேடி வரவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். எடப்பாடி கே. பழனிச்சாமி செய்த பிழையின் காரணமாகத்தான் இதெல்லாம் நடக்கிறது. பல கட்சிகளுக்கும் அ.தி.மு.கவின் தொண்டர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் ஆசை இருக்கிறது. கட்சி ஒன்றுபட்டு நின்றிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது,” என்கிறார் மருது அழகுராஜ்.
அ.தி.மு.கவின் இரு தரப்பையும் ஒருங்கிணைத்து, அதனுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இன்னமும் இருக்கிறதா? “பா.ஜ.கவின் தேசியத் தலைமையை அப்படி நம்பவைக்க முயல்கிறார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது,” என்கிறார் ஷ்யாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்