தகவல் தொழில்நுட்ப துறையில் ( ஐடி) பணிபுரிபவர்கள் என்றால், குளிர்சாதன அறையில் வேலை, ஐந்து இலக்க சம்பளம் என்று சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற எண்ணம்தான் பரவலாக உள்ளது.
ஆனால் பணி ரீதியான அழுத்தம், சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களால் ஐடி ஊழியர்களுக்கு நாளடைவில் மாரடைப்பு வருவதற்கான அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தை (என்ஐஎன்) சேர்ந்த நிபுணர்கள் குழு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஐடி ஊழியர்கள், வளர் சிதை மாற்றம் தொடர்பான உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கோளாறுகள் நாளடைவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற தொற்றா நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆய்வின் அவசியம் என்ன?
ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. ஐடி ஊழியர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் குறித்து இந்நிறுவனம் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
“நாட்டின் பொருளாதாரத்தில் ஐடி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் குறித்த அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
ஆனால் பணி அழுத்தம், வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் போன்ற காரணிகள், ஐடி ஊழியர்களின் உடல் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ள விஷயங்களை மேற்கொண்டு முன்னெடுத்து செல்லும் நோக்கில், என்ஐஎன் சார்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்” என்று இந்த நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.ஹேமலதா கூறினார்.
ஆய்வில் கண்டறியப்பட்டவை
ஹைதராபாத்தில் ஐடி துறையில் பணியாற்றி வரும் 183 ஊழியர்கள் இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களிடம் என்ஐஎன் நிபுணர்கள் குழு, உடல் ரீதியான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.
அவர்களின் உடல் எடை, உயரம் மற்றும் இடுப்பளவு கணக்கிடப்பட்டது.
பிஎம்ஐ எனப்படும் உடல் எடை குறியீடு மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் முடிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
பணி ரீதியாக ஏற்படும் அழுத்தம் குறித்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் கேட்டறியப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்க மொத்தம் 359 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களில் இருந்து வயதின் அடிப்படையில் 183 பேர் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களில் 154 பேர் தங்கள் ரத்த மாதிரிகளை அளிக்க ஒப்புக்கொண்டனர் என்று என்ஐஎன் நிபுணர் குழு தெரிவித்தது.
விரிவான இந்த ஆய்வின் முடிவுகள் ‘ நியூட்ரியன்ட்ஸ்’ இதழில் (Nutrients Journal) வெளியிடப்பட்டுள்ளன.
30களில் இருப்போர் கவனத்தில் கொள்ள வேண்டியவை
என்ஐஎன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 26 முதல் 35 வயதுக்குட்பட்ட பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அதாவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர்களின் சராசரி வயது 30.
முக்கிய அம்சமாக, ஐடி துறை பணியாளர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகள் மற்றும் செரிமானம் தொடர்பான நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 46 சதவீதம் பேர், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளர்சிதை மாற்ற அபாய காரணிகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களின் கொழுப்பு புரத அடர்த்தி நிலை இயல்பைவிட கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தது.
மேலும் அவர்களின் இடுப்பு சுற்றளவும் அதிகமாக இருந்தது என்று கூறினார் என்ஐஎன் நிபுணரும், திட்ட முதன்மை ஆய்வாளருமான கவரவரபு சுப்பாராவ்.
“அலுவலகத்தில் ஊழியர்கள் தொடர்ந்து ஓரிடத்தில் அமர்ந்து பணிபுரியும் நேரமும் அவர்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது” என்கிறார் அவர்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஐடி பணியாளர்கள், ஒரு வேலை நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கையில் அமர்ந்த படியே பணியாற்றுகிறார்கள்.
ஆனால் இவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே, ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதாக கூறுகின்றனர்.
இதனால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, இதய நோய்களும் உண்டாகின்றன” என்கிறார் சுப்பாராவ்.
வளர்சிதை மாற்ற ஆபத்து காரணிகள் என்ன?
வளர்சிதை மாற்ற நோய்க்குறி மூன்று அல்லது ஐந்து காரணிகளால் ஏற்படலாம்.
இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் சில வழிமுறைகளை வகுத்துள்ளது எனக் கூறும் சுப்பாராவ், அவை குறித்து விளக்குகிறார்.
ஆண்களின் இடுப்பு சுற்றளவு 90 செ.மீ. அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. அல்லது அதற்கு குறைந்து இருக்க வேண்டும்.
ட்ரைகிளிசரைடுகள் அளவு 150 mg/dl அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இதேபோன்று உயர் அடர்த்தி கொழுப்பு புரதத்தின் அளவு ஆண்களுக்கு 40 mg/dl க்கும் குறைவாகவும், பெண்களுக்கு 50 mg/dl க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?
மனிதனின் உடல் இரத்த அழுத்தம் 130/85 ஆக இருக்க வேண்டும். இந்த அளவீடு மாறினால், அதுவும் வளர்சிதை மாற்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் என்ஐஎன் இன் மற்றொரு நிபுணரான பானு பிரகாஷ் ரெட்டி.
ஐடி துறையில் தான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பிபிசியிடம் பேசினார் மியாபூரைச் சேர்ந்த ஊழியர் தேவிநேனி கவுதமி.
“பணிரீதியான இலக்குகளை அடைய அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதன் காரணமாக உணவில் உரிய கவனம் செலுத்த முடிவதில்லை. கிடைத்ததை சாப்பிட்டு விட்டு பணிக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஐடி ஊழியர்கள் மட்டுமின்றி, பிபிஓ வில் வேலை செய்பவர்களும் இரவு பணிபுரிய (நைட் ஷிப்ட்) வேண்டியுள்ளது.
இதன் விளைவாக அவர்கள் தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாகின்றனர். அத்துடன் வயிற்று எரிச்சல், அஜீரணம் போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஐடி ஊழியர்கள் பலர் இதுபோன்ற உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்” என்று வேதனையுடன் தெரிவித்தார் கவுதமி
30 வயதுக்கு மேல் ஆபத்து அதிகம்
என்ஐஎன் மேற்கொண்ட ஆய்வில் மேலும் சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் 44.02 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்கள்.
மேலும் 16.85 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3.89 சதவீத ஊழியர்கள் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர்.
64.93 சதவீதம் பேருக்கு, ஹைப்பர் டென்சிட்டி லிப்போ புரோட்டீன் (HDL)- C குறைந்த அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
54.54 சதவீதம் பேருக்கு, அவர்களின் இடுப்பு சுற்றளவு சராசரியை விட அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து என்ஐஎன் நிபுணர் சுப்பாராவ் பிபிசியிடம் பேசினார்.
எங்கள் ஆய்வில் பணியாளர்களின் வயதை ஒரு முக்கிய காரணியாக எடுத்துள்ளோம்.
30 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வளர்சிதை மாற்ற நோய்க்குறியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் 30 வயதிற்குட்பட்ட ஊழியர்களிடமும் நோய்களுக்கான ஆபத்து காரணிகள் அதிகம் காணப்படுகின்றன.
தினமும் ஹோட்டல் சாப்பாடு
தினமும் ஹோட்டல் போன்ற வெளியிடங்களில் சாப்பிடுவது, பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக உட்கொள்வது என்று தான் நாட்கள் ஓடுகின்றன என்கின்றனர் ஐடி ஊழியர்கள்.
வேலை பளு காரணமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ சில நேரம் அவர்கள் மதிய உணவைக் கூட தவிர்த்து விடுகின்றனர். இவை அனைத்து ஐடி பணியாளர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
அதேசமயம், 30 வயதுக்கு மேற்பட்ட சீனியர்கள் மத்தியில் பணி அழுத்தம் அதிகமாக உள்ளது. இவை எல்லாம் சேர்ந்து அவர்களின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றன” என்கிறார் சுப்பாராவ்.
மாதவிடாய் பிரச்னை
ஐடி துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மத்தியில் மற்றொரு பாதிப்பும் உள்ளது என்கிறார் என்ஐஎன் இயக்குநரான டாக்டர் ஹேமலதா.
“ 26 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களின் உடல்நிலையில் ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு மற்றும் மன அழுத்தம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த பிரச்னைகளுக்கு ஆளாவோருக்கு, மாதவிடாய் அதிக நாட்கள் ஏற்படுகிறது. நாளடைவில் நீரிழிவு நோய், இதய நோய்க்கு அவர்கள் ஆளாக நேரிடும்” என்கிறார் அவர்.
உடல்நலம் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
ஐடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு, என்ஐஎன் ஆராய்ச்சியாளர் சுப்பாராவ் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
ஐடி ஊழியர்கள் தங்களின் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும்.
நாள்தோறும் உடற்பயிற்சி அவசியம்
நொறுக்குத் தீனிகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்தபடி பணிபுரியும்போது. இடை இடையே இருக்கையில் விட்டு எழுந்து சில நிமிடம் நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹோட்டல் போன்ற வெளி இடங்களில் முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று அறிவுறுத்துகிறார் சுப்பாராவ்.
தைராய்டு பிரச்னை
அப்பல்லோ மருத்துவமனை ஆலோசகரான டாக்டர் பி.சுஜித் குமார், ஐடி ஊழியர்களுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்ற பிரச்னைகள் குறித்து பிபிசியிடம் பேசினார்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவதால், ஊழியர்களுக்கு தைராய்டு போன்ற பிரச்னைகளும் ஏற்படும். அத்துடன் அவர்களுக்கு மரபியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதையும் அறிய முடிகிறது.
இவ்வகையான உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி செய்யாமல் நீண்ட நேரம் அமர்ந்தபடி பணி செய்பவர்கள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது.
ஒவ்வொரு மணி நேரமும், ஐந்து நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொண்டு, இருக்கையை விட்டு விலகி நடக்க பழகிக் கொள்ள வேண்டும்.
சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு நின்றபடி பணிபுரியும் வாய்ப்பை அளித்துள்ளன. இதுவொரு மாற்று வழிமுறை அல்ல. நின்றபடியும், அமர்ந்தபடியும் என இரண்டு நிலைகளிலும் ஊழியர்கள் கடமை ஆற்ற வேண்டும்.
நொறுக்குத்தீனிகளால் உண்டாகும் விபரீதம்
மாறிவரும் உணவுப் பழக்கத்தின் விளைவாக நொறுக்குத் தீனிகளை உட்கொள்ளும் பழக்கம் பணியாளர்கள் மத்தியில் பொதுவாக உள்ளது.
ஆனால் இவற்றில் உள்ள ஸ்டீராய்டுகள் உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்க செய்யும் என்பதுடன், நேரடியாகச் சென்று கல்லீரலிலும் சேரும். இது ஒருவரின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பொது சுகாதாரம் தொடர்பான வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. வைட்டமின் பி12, தைராய்டு, சீரம் அயர்ன் போன்ற பரிசோதனைகளை மருத்துவர்களின் ஆலோசனைபடி செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், வருடத்திற்கு ஒருமுறை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அதுவே 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி, ஆண்டுக்கு இரு முறை அல்லது ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் சுஜித் குமார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்