
பட மூலாதாரம், ANI
ராதிகா விரைவில் இந்தியாவின் பணக்கார குடும்பத்தின் மருமகளாக மாறவுள்ளார்
“ராதிகாவைப் பார்த்ததும் என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். ஆனாலும், நேற்று சந்தித்தது போல் உணர்கிறேன். ராதிகாவைச் சந்தித்தது 100 சதவிகிதம் எனது அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.”
தனது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டத்தில் இப்படிக் கூறினார் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. ராதிகா மெர்ச்சன்ட் – ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்தது.
திருமணத்திற்கு முந்தைய இந்த 3 நாள் விழாவில் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரிஹானா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ராதிகா விரைவில் இந்தியாவின் பணக்கார குடும்பத்தின் மருமகளாக மாறவுள்ளார். முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகளில் ஆனந்த் அம்பானி இளையவர்.
டிசம்பர் 2022 இல், தனது நடன அரங்கேற்றத்தின்போது செய்திகளில் இடம்பிடித்தார் ராதிகா. பல ஆண்டுகளாக பாரம்பரிய நடனப் பயிற்சிக்குப் பிறகு இந்த அரங்கேற்றம் நடந்தது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது, பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், ANI
ராதிகா தற்போது என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பணியாற்றி வருகிறார்
ராதிகா யார்?
ராதிகா இந்திய மருந்தக நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விரேன் மெர்ச்சண்டின் மகள் ஆவார்.
மும்பை கதீட்ரல், பின்னர் ஜான் கோனன் பள்ளி, அதன் பிறகு எக்கோலோ மாடர்ன் வேர்ல்ட் பள்ளி ஆகியவற்றில் படித்தார். இதைத் தொடர்ந்து, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.
இது தவிர இஸ்ப்ரவா நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்தார்.
ராதிகா தற்போது என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பணியாற்றி வருகிறார்.
இது தவிர, இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திலும் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றார். 2022 இல் இந்த நிகழ்ச்சியின் விளக்கக்காட்சியின் போது, அவர் அதிகம் விவாதிக்கப்பட்டார்.
ராதிகாவின் லிங்க்டு-இன் (LinkedIn) சுயவிவரத்தின்படி, வணிகம் தவிர, அவர் குடிமை உரிமைகள், பொருளாதார அதிகாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்.

பட மூலாதாரம், ANI
ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் கல்லூரிப் பருவத்திலேயே சந்தித்ததாகக் கூறப்படுகிறது
“இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது”
டிசம்பர் 2022 இல், ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
இருப்பினும், ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் கல்லூரிப் பருவத்திலேயே சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனந்த் அம்பானியின் கூற்றுப்படி, அவர்கள் ஒருவரையொருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி இருக்கிறார்கள்.
அம்பானியின் மகளான இஷா அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அம்பானி குடும்பத்துடன் ராதிகா காணப்பட்டார்.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் ராதிகாவைப் பற்றி ஆனந்த் அம்பானி தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
“ராதிகாவைப் பார்த்ததும் என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன். இருப்பினும், நான் அவரை நேற்று சந்தித்தது போல் உணர்கிறேன்.
ராதிகா – ஆனந்த் திருமணம் இந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்