அது 1965ஆம் ஆண்டு. செப்டம்பர் 6ஆம் தேதி இரவு, பதான்கோட், ஹல்வாரா மற்றும் ஆதம்பூர் விமான தளங்களைத் தாக்க 180 பராட்ரூப்பர்களை சி-130 ஹெர்குலிஸ் விமானம் மூலம் பாகிஸ்தான் விமானப்படை தரையிறக்கியது. ஆனால் இவர்களில் பெரும்பாலான வீரர்கள் இந்திய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றனர். அதே நேரத்தில் பாகிஸ்தானின் இரண்டு கான்பெர்ரா விமானங்கள் இந்தியாவின் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தின. அங்கு பொருத்தப்பட்டிருந்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ஒரு விமானத்தைக் குறிவைத்துத் தாக்கின. விமான தளத்திற்குச் சற்று வெளியே அந்த விமானம் கீழே விழுந்தது.
அந்தப் போர் விமானத்தின் பைலட் மற்றும் நேவிகேட்டர் சிறைபிடிக்கப்பட்டு ஆதம்பூர் விமான தள அதிகாரிகளின் மெஸ்ஸுக்கு கொண்டு வரப்பட்டனர். ஜெனிவா ஒப்பந்தத்தைப் பின்பற்றி அவர்கள் நல்ல முறையில் நடத்தப்பட்டனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு பஞ்சாபி தாபாவில் இருந்து தந்தூரி சிக்கன் மற்றும் பட்டர் நான் ஆர்டர் செய்யப்பட்டு அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது.
மறுநாள் இந்த போர்க் கைதிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய ராணுவத்தின் நோக்கம் முன்னேறிச் சென்று லாகூரை கைப்பற்றுவது. ஆனால் 1950களில் கட்டப்பட்ட இச்சோகில் கால்வாய் ராணுவத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருந்தது.
இந்திய வீரர்கள் 1.55 மிமீ ஹோவிட்சர் துப்பாக்கிகளால் கால்வாயின் பின்னால் இருந்து தொடர்ந்து தாக்கப்பட்டனர். இறுதியில் இந்தத் தாக்குதலை முறியடிக்க இந்திய விமானப்படையின் உதவியை நாட ராணுவம் முடிவு செய்தது.
இந்திய வீரர்களின் தப்புக் கணக்கு
இந்த துப்பாக்கிகளை அமைதிப்படுத்த இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பல முறை பறந்தன. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் இயந்திரத் துப்பாக்கிகளில் இருந்து சுடப்படும் ஷெல்களால் இந்த விமானங்களில் ஓட்டைகள் ஏற்படுவது பல சமயங்களில் நிகழ்ந்தது.
விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன், அதன் இன்ஜின்கள் தீப்பிடித்துவிடும். எனவே இந்திய விமானிகள் பாராசூட்களை பயன்படுத்தி கீழே குதிக்க வேண்டியிருந்தது.
இந்திய விமானப்படையின் பிரபல விமானியான குரூப் கேப்டன் தாரா ஃபிரோஸ் சினாய், தனது ‘எஸ்கேப் ஃப்ரம் பாகிஸ்தான் எ வார் ஹீரோஸ் க்ரோனிகல்’ என்ற புத்தகத்தில், “பல நேரங்களில் இந்திய விமானிகள் தங்கள் சொந்த வீரர்களிடமிருந்தே தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
விமானப்படை பைலட் ஒருவரின் வயிற்றில் இந்திய ராணுவ வீரர் துப்பாக்கி முனையால் குத்தினார். மற்றொரு இந்திய பைலட் தோளில் சுடப்பட்டார். அவர்கள் பாகிஸ்தானிய பராட்ரூப்பர்கள் என்ற தவறான எண்ணத்தில் இவையெல்லாம் நடந்தன,” என்று எழுதியுள்ளார்.
இந்திய கிராம மக்களால் தாக்கப்பட்ட விமானப்படை லெப்டினன்ட்
இதேபோன்ற ஒரு சம்பவத்தில் இந்திய விமானி ஃப்ளைட் லெப்டினன்ட் இக்பால் உசேனுடைய விமானத்தின் எரிபொருள் டேங்க், பாகிஸ்தான் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளின் தாக்குதலால் ஓட்டையானது.
“அவர் எனது படைப் பிரிவையைச் சேர்ந்தவர். குண்டுவீச்சுக்குப் பிறகு இந்திய எல்லைக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். நான் அவருடைய நம்பர் டூவாக இருந்தேன். அதனால் நான் அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தேன்.
அவர் தளத்தை அடைய இருந்தபோது அவரது இன்ஜின் அணைந்தது. பாராசூட்டின் உதவியுடன் அவர் ஆதம்பூர் கிராமத்திற்கு அருகே தரையிறங்கினார். கிராம மக்கள் அவரை நாலாபுறமும் சுற்றி வளைத்ததை நான் மேலே இருந்தவாறே பார்த்தேன்.
அவர்கள் கைகளில் நீண்ட கத்திகள் இருந்தன. வானத்தில் பறந்தபடியே நான் இந்தத் தகவலை கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு அனுப்பினேன். உடனடியாக இரண்டு விமானப்படையினர் மோட்டார் சைக்கிளில் அந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால் அவர்கள் அங்கு சென்றடைவதற்குள் இக்பால் படுகாயமடைந்து சுயநினைவை இழந்துவிட்டார். அவர் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். தங்களின் தவறை உணர்ந்த கிராம மக்கள் அவருக்கு ரத்த தானம் செய்தனர்,” என்று சினாய் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் பீரங்கிகளை அழிக்கும் பொறுப்பு
ஓராண்டு கழித்து அதே இக்பால் உசேன் ஆதம்பூரிலிருந்து ஜம்முவுக்கு விமானத்தில் புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக ஜம்மு அருகே விமானம் குன்றின்மீது மோதி விபத்துக்குள்ளானது. 90 சதவீத தீக்காயங்கள் இருந்தபோதிலும், எரியும் விமானத்தில் இருந்து இரண்டு சக பயணிகளை இக்பால் வெளியே இழுத்து காப்பாற்றினார்.
எரியும் விமானத்தில் இருந்து மூன்றாவது பயணியை மீட்க முயன்றபோது விமானம் வெடித்துச் சிதறியதில் இக்பால் உசேன் உயிரிழந்தார்.
1965 போரின் கடைசி கட்டத்தில் பாகிஸ்தானின் எல்-155 பீரங்கிகள் இந்திய நிலைகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தின. மறுபுறம், பாகிஸ்தான் விமானப்படையின் சேபர் ஜெட் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இந்திய ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியது.
1965 செப்டம்பர் 10ஆம் தேதி காலை ஏழு மணியளவில் ஆதம்பூர் விமான தளத்தின் தரைத் தொடர்பு அதிகாரி, இந்திய போர் விமானிகளுக்கு அவர்களின் அடுத்த பணியை விளக்கினார். பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கிகளை அழிக்க வேண்டும் என்றும் இந்திய விமானங்கள் அவற்றை தாக்க முடியாதபடி நாலாபுறமும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.
ஸ்க்வாட்ரன் லீடர் டிபிஎஸ் கில் இந்த மிஷனை வழிநடத்தினார். ஃப்ளையிங் ஆஃபீஸர் தாரா ஃபிரோஸ் சினாய் அவருடைய நம்பர்-டூ. இந்த நடவடிக்கையின் துணைத் தலைவர் மற்றும் நம்பர் த்ரீ, ஃப்ளைட் லெப்டினன்டாக ரவிகுமார் இருந்தார். நம்பர் ஃபோர் பொறுப்பு, ஃப்ளைட் லெப்டினன்ட் கிகி ரத்னபார்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரயில் தாக்கப்பட்டதில் குண்டுகள் தீர்ந்தன
இந்திய விமானங்கள் இரண்டு ஜோடிகளாக 4 ஏசி டெக்னிக்கல் ஃபார்மேஷனில் பறந்தன. அவை உயரம் குறைவாகப் பறந்து பீரங்கிகளை கண்டுபிடிக்க முயன்றன. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அப்போது ஆயுதங்களுடன் ரயில் ஒன்று செல்வதை அவர்கள் கண்டனர். இந்த விமானங்கள் அதைத் தாக்கி அழித்தன.
இந்த விமானங்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் தேடிச் சென்ற பாகிஸ்தான் பீரங்கிகளைக் கண்டனர். ஆனால் அவற்றின் மீது குண்டுகளை வீச முடியவில்லை. ஏனெனில் ரயில் மீது நடத்திய தாக்குதலில் அவர்களின் எல்லா குண்டுகளும் தீர்ந்துவிட்டன.
தளத்திற்குத் திரும்பிய பிறகு அவர்கள் தரைத் தொடர்பு அதிகாரியிடம் அறிக்கையை அளித்தனர். விரைவாக சாப்பிட்டு முடித்துவிட்டு வெடிகுண்டுகளுடன் அந்த இடத்திற்குத் திரும்பிச் சென்று தாக்குதல் நடத்தும்படி அவர் விமானிகளுக்கு உத்தரவிட்டார்.
ஃப்ளையிங் ஆஃபீஸர் சினாய் சாப்பிடுவதற்காக மெஸ்ஸை அடைந்தபோது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவருக்கும் உணவளிக்க முடியாமல் உணவு பரிமாறுபவர்கள் சிரமப்படுவதைக் கண்டார்.
சினாய் காலையில் பணிக்குச் செல்வதற்கு முன் எதுவும் சாப்பிடவில்லை. அவருக்கு மிகவும் தாகமாக இருந்தது. பணியின்போது அவருக்கு நிறையவே வியர்த்தது. அதனால் அவரது உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.
பணியாளரிடம் தண்ணீர் கொண்டு வரும்படி அவர் சொன்னார். ஆனால் பணிச்சுமை காரணமாக பணியாளர் சினாய் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
பிலிப் ராஜ் குமார் அமர்ந்திருந்த க்ரூ ரூமுக்கு சினாய் சென்றார். அவர் சினாயிடம், “நீ கொஞ்சம் தண்ணீர் குடி. இனி உனக்கு எப்போது தண்ணீர் கிடைக்கும் என்று சொல்ல முடியாது,” என்று கூறினார்.
சினாய் வேகமாக ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தார்.
விமான எதிர்ப்பு துப்பாக்கி ஷெல் மூலம் சினாயின் விமானம் தாக்கப்பட்டது
அவர் தளத்தை அடைந்தபோது சக விமானிகள் தங்கள் விமானங்களை நோக்கிச் செல்வதைக் கண்டார். அவர் உடனடியாக பறக்கும் சீருடையை அணிந்துகொண்டு தனது மிஸ்டேர் விமானத்தை நோக்கிச் சென்றார். நான்கு விமானங்களும் புறப்பட்டு பாகிஸ்தான் பீரங்கிகள் காணப்பட்ட அதே பகுதியை அடைந்தன.
விமானங்கள் அங்கு சென்றதும் பாகிஸ்தானின் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தன. தேஜா கில் ரேடியோவில், ‘புல்லிங் அப் டார்கெட் லெஃப்ட், டென் ஓ க்ளாக்’ என்று சொன்னார். இரண்டு வினாடிகள் கழித்து சினாய் மேலே சென்று, ‘நம்பர் 2, காண்டாக்ட் டார்கெட், நைன் ஓ க்ளாக் ரோலிங் இன்’ என்று ரேடியோ செய்தி அனுப்பினார்.
அதே நேரத்தில் சினாய் தனது இருக்கைக்கு கீழே ஒரு வலுவான தள்ளுதலை உணர்ந்தார். “கோவேறு கழுதை பலமாக உதைத்தது போல் அது இருந்தது. அந்த நேரத்தில் என் என்ஜின் அணைந்துவிட்டது. கூடவே என்ஜின் தீ எச்சரிக்கை விளக்கு எரிந்தது. என் விமானத்தின் வேகம் விரைவாகக் குறையத் தொடங்கியது. என் காக்பிட்டில் புகை சூழ்ந்தது. பின்னால் நெருப்பின் வெப்பத்தை நான் உணர ஆரம்பித்தேன்,” என்று தாரா ஃபிரோஸ் சினாய் எழுதுகிறார்.
“நான் தாக்கப்பட்டேன். என்ஜின் தீப்பிடித்துள்ளது.’ என்று நான் செய்தி அனுப்பினேன். சில நொடிகளில் புகையும் வெப்பமும் அதிகமாகி விமானத்தின் கருவிப் பலகையைப் பார்க்க முடியவில்லை. வெளியில் உள்ள எதுவும் தெரியவில்லை.
புகை சிறிது குறைந்ததும் இயந்திரம் செயலிழந்திருப்பதையும், புகை மற்றும் தீப்பிழம்புகள் பின்பக்கத்தில் இருந்து மீண்டும் காக்பிட்டிற்குள் நுழைவதையும் பார்க்க முடிந்தது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
பாராசூட் மூலம் கரும்புத் தோட்டத்தில் குதித்தார்
சினாயின் விமானத்தில் 2×68 மிமீ ராக்கெட்டுகள் இருந்தன. விமானத்தின் எரிபொருள் தொட்டி நான்கில் மூன்று பங்கு நிரம்பியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில் விமானம் 2000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் அவரது மரணம் நிச்சயம். ஒரு நொடி கூட வீணாக்காமல், தாரா சினாய், இஜெக்ட் பட்டனை அழுத்தினார்.
“பாராசூட் மூலம் நான் கீழே வரும்போது துப்பாக்கி தோட்டாக்களின் சத்தம் கேட்டது. இடையில், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளின் குண்டுகளும் என் அருகிலிருந்து சென்றன. பல தோட்டாக்கள் என் பாராசூட்டை துளைத்தபடி சென்றன. அவர்கள் என்னை குறிவைக்க முயல்வதாக நான் கருதினேன்,” என்று சினாய் எழுதியுள்ளார்.
இது ஜெனீவா உடன்படிக்கையின் விதிமுறைகளை மீறும் செயல். ஏனெனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு பாராசூட் மட்டுமே விமானி உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி.
“அதிர்ஷ்டவசமாக நான் கரும்புத் தோட்டத்தில் விழுந்தேன். கரும்பு அறுவடை செய்யப்பட்டிருக்கவில்லை. அதனால் எனக்கு ஒளிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நான் கீழே விழுந்தவுடன் பாகிஸ்தான் வீரர்களின் கூச்சல், வசவு வார்த்தைகள் மற்றும் தானியங்கி துப்பாக்கித் தோட்டாக்களின் சத்தம் கேட்டது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழி தோண்டி வரைபடத்தை மறைத்தார்
ஜிக்ஜாக் பாணியில் மான் போல கரும்புத் தோட்டத்தில் சினாய் ஓட ஆரம்பித்தார். பயம் அவருடைய கால்களுக்கு அதிக வேகத்தைக் கொடுத்தது. அவர் கிழக்கு நோக்கி அதாவது இந்திய எல்லையை நோக்கி ஓடுவார் என்று பாகிஸ்தான் வீரர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை அவர் உணர்ந்தார். எனவே அதற்கு எதிர்புறமாக அவர் மேற்கு நோக்கி ஓடத் தொடங்கினார்.
மெல்ல மெல்ல வாகனங்களின் சத்தமும், அவரைத் துரத்தும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் சத்தமும் நின்றது.
“ஆனாலும் நான் தொடர்ந்து வயல்களுக்கு இடையில் ஓடிக்கொண்டே இருந்தேன். பெரிய வயல்களில் கரும்புகளின் கீழ் என்னை மறைத்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து வடக்கு நோக்கி ஓடும் திசையை மாற்றினேன். நான் இரண்டு மணிநேரம் வரை ஓடினேன்.
சிறிதுநேரம் வேகமாக மற்றும் சிறிதுநேரம் ஜாகிங் செய்தேன். பின்னர் கரும்புத் தோட்டத்தில் ஓய்வு எடுத்தேன். சிறிது நேரம் தரையில் படுத்து என் சுவாசத்தைக் கட்டுப்படுத்த முயன்றேன்,” என்று தாரா ஃபிரோஸ் சினாய் எழுதுகிறார்.
“நான் சிறிதும் அசையாமல் இருக்க என்னால் இயன்றவரை முயன்றேன். பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் நான் சிக்கினால் எவ்வளவு மோசமாக நடத்தப்படுவேன் என்று எனக்குத் தெரியும். விரைவில் இருள் சூழவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். இருட்டியவுடன் நான் நிலத்தை தோண்டினேன்.
எனது வரைபடம், ரேடார் அங்கீகாரத்தாள் மற்றும் எதிரிக்கு ஆதாயம் கிடைக்க்கூடிய எல்லாவற்றையும் புதைத்தேன். நான் என் முகத்தில் சேற்றைத் தேய்த்துக்கொண்டேன். என் ஜி-சூட் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது. சேறு காரணமாக அது கருப்பாக இருந்தது,” என்று சினாய் நினைவு கூர்கிறார்.
களைப்பையும் பொருட்படுத்தாமல் கால்வாயைக் கடந்தார்
சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, சினாய் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கினார். அதற்குள் இரவாகிவிட்டது. உயரமான புல் மற்றும் கரும்பு வயல்களைக் கடந்து சினாய் தொடர்ந்து முன்னேறினார். அவர் வேண்டுமென்றே கிராமங்களையும் மக்களையும் தவிர்த்தார். ஏனென்றால் யாரேனும் ஒரு நபர் அல்லது நாய் அவரைப் பார்த்திருந்தால் அவர்கள் குரல் எழுப்பியிருப்பார்கள்.
காலையில் ஒரே ஒரு கப் டீ குடித்துவிட்டு கிளம்பியதையும், கடந்த இருபது மணி நேரமாக தான் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை என்பதையும் சினாய் நினைத்துப் பார்த்தார்.
அவர் மிகவும் தாகமாக உணர்ந்தார். சோர்வு காரணமாக அவரது வேகம் குறைந்தது. வெப்பம், பதற்றம் மற்றும் தொடர்ச்சியான ஓட்டம் காரணமாக அவர் மிகுந்த நீரிழப்புக்கு ஆளானார்.
களைப்பினால் மயங்கி விழுந்து பாகிஸ்தானியர்களின் கைகளில் சிக்கினால்தான் மிக மோசமாக நடத்தப்படுவோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரைப் பார்த்தவுடனேயே அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கலாம். முதலில் அவர் இடுப்பளவு தண்ணீர் கொண்ட ஒரு கால்வாயைக் கடந்தார். பின்னர் வேகமான நீரோட்டம் கொண்ட இச்சோகில் கால்வாயைக் கடந்தார்.
‘கையை உயர்த்து’ என்று கூறிய இந்திய வீரர்கள்
“நான் அமிர்தசரஸ்-படாலா சாலைக்கு வந்தவுடன் இந்திய-பாகிஸ்தான் எல்லையைத் தாண்டிவிட்டதைப் புரிந்துகொண்டேன். அப்போது ஒரு கிராமத்திற்கு வெளியே ஒரு கிணற்றைக் கண்டேன். நான் அதை நோக்கி ஓடினேன். கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை இழுத்தேன்.
நிறைய தண்ணீர் குடித்துவிட்டு மீதி இருந்த தண்ணீரை என் தலையில் ஊற்றிக்கொண்டேன். தாகம் தணிந்ததும் என் தன்னம்பிக்கை திரும்பியது, அமிர்தசரஸ்-படாலா சாலையில் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்,” என்று சினாய் எழுதுகிறார்.
அவர் வேண்டுமென்றே பிரதான சாலையைத் தவிர்த்தவாறு நடந்தார். அதற்குள் காலை நேரமாகிவிட்டது. அப்போது சிலர் தமிழ் மொழியில் பேசும் குரல்கள் கேட்டன.
“நமது வீரர்கள் ஃப்ளைட் லெப்டினன்ட் விஜய் மாயாதேவ் மற்றும் போ ஃபாடக் ஆகியோரை துப்பாக்கிமுனையால் எப்படித் தாக்கினார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் நான் தைரியமாக, ‘யார் அங்கே’ என்று கத்தினேன். அவர்களின் முகபாவங்களைப் படிக்க நான் முயற்சி செய்தேன்.
அழுக்கான, சேற்றில் நனைந்திருந்த ஜி- சூட்டை நான் அணிந்திருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் உடனடியாக துப்பாக்கியை என் பக்கம் நீட்டி, ‘உன் கைகளை மேலே உயர்த்து’ என்றார். நான் மண்டியிட்டு கைகளை உயர்த்தினேன்,” என்று அவர் எழுதுகிறார்.
சினாயின் தலைக்கு அருகிலிருந்து தோட்டா சென்றது
இந்திய வீரர்கள் தாரா ஃபிரோஸ் சினாயிடம் கேள்வி கேட்கத் தொடங்கினர். அவர் இந்திய விமானப் படையின் விமானி என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. சினாய் தனது அதிகாரியை அழைக்குமாறு சொன்னார். விரைவில் ஒரு சுபேதார் மேஜர் ஜீப்பை ஓட்டிக்கொண்டு அங்கு வந்தார். சினாய் சொன்னதை அவரும் நம்பவில்லை.
ஜீப்பின் பின் இருக்கையில் சினாயை உட்காரச் சொன்னார். “நான் ஜீப்பில் அமர்ந்தவுடன் என்னை இலக்கு வைத்திருந்த ஓர் இந்திய சிப்பாயும் ஜீப்பில் ஏறினார். அவரது விரல் தவறுதலாக துப்பாக்கியின் ட்ரிகரை தொட்டது.
அவரது துப்பாக்கியிலிருந்து தோட்டா வெளியேறி என் தலைக்கு சுமார் ஒரு அங்குல தூரத்திலிருந்து சென்றது. அந்த சிப்பாயின் தலையில் சுபேதார் மேஜர் அடித்த சத்தம் தோட்டாவின் சத்தத்தைவிடப் பெரியதாக இருந்தது,” என்று சினாய் எழுதுகிறார்.
அவர் ஒரு கேப்டனிடம் அழைத்துச் செல்லப்பட்டார். கேப்டன் அடையாள அட்டையைக் காட்டுமாறு கேட்டார். பணிக்குச் செல்லும் போது அடையாள அட்டை எதையும் தான் எடுத்துச் செல்வதில்லை என்று சினாய் பதில் அளித்தார்.
சினாயிடம் விசாரணை
ஃப்ளைட் லெப்டினன்ட் தாரா ஃபிரோஸ் சினோயின் பிரிவு மற்றும் அதன் கமாண்டர் குறித்து கேப்டன் கேள்விகளைக் கேட்டார். குரூப் கேப்டன் ஜாக் லாயிட் தனது ஸ்டேஷன் கமாண்டர் என்று சினாய் கூறினார்.
“அப்போது, ’உங்களுக்கு ’கஹாய்’ என்பவரைத் தெரியுமா என்று கேப்டன் கேட்டார். அவர் என் பிரிவில் ஃப்ளைட் லெப்டினன்ட் என்று நான் பதிலளித்தேன்.
‘அவர் பருமனான, முடி வெட்டிய சீக்கியரா?’ என்பதுதான் அவருடைய அடுத்த கேள்வி. ’இல்லை. அவர் மெலிந்த, தாடி வைத்த சீக்கியர்’ என்று நான் பதில் சொன்னேன். இதைக் கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.
அவர் என்னை நோக்கி கையை நீட்டி, ’ஹாய், நான் கேப்டன் கஹாய். ஃப்ளைட் லெப்டினன்ட் கஹாயின் ஒன்றுவிட்ட சகோதரர்,’ என்றார். அதன் பிறகு அவர் எனக்கு காலை உணவும், காபியும் அளித்தார்,” என்று சினாய் குறிப்பிட்டுள்ளார்.
சினாய்க்கு ’விசிஷ்ட் சேவா’ பதக்கம் அளிக்கப்பட்டது
குளித்துத் தயாரான பிறகு கேப்டன் கஹாய் அவரை ஜீப்பில் உட்கார வைத்து அமிர்தசரஸ் விமானப்படை மையத்திற்கு அனுப்பினார். சினாய் மிகவும் சோர்வாக இருந்ததால் ஜீப் நகர ஆரம்பித்தவுடன் ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்தார். விமானப்படை மையத்தின் வாயிலில் ஜீப் நுழையும்போது அவரது கண்கள் திறந்தன.
அப்போது பாகிஸ்தானின் நான்கு சேபர் ஜெட் விமானங்கள் விமானப்படை மையத்தின் ரேடார் பிரிவை திடீரெனத் தாக்கின. பல சிரமங்களை எதிர்கொண்டு உயிர் தப்பிய பிறகு வெடிகுண்டு தாக்குதலில் இறக்கும் எண்ணம் சினாய்க்கு இல்லை. குண்டுகளில் இருந்து தப்பிக்க அவர் விரைவாக ஓடி பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார்.
பின்னர் அமிர்தசரஸின் ஸ்டேஷன் கமாண்டர் அவரை தனது ஜீப்பில் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இறக்கிவிட்டார்.
அதிகாரிகளின் மெஸ்ஸுக்குள் சினாய் நுழைந்தபோது அவரது சக வீரர்களின் முகங்கள் இன்ப அதிர்ச்சியில் மலர்ந்தன. மறுநாள் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் விமானத்தில் பறக்கத் தகுதியானவராக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே செப்டம்பர் 23ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. சினாய் இந்தியா திரும்பிய செய்தி மறைத்து வைக்கப்பட்டது.
போர் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, 1966 ஜனவரி 1ஆம் தேதி, அப்போதைய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அர்ஜன் சிங், பாகிஸ்தானில் இருந்து தப்பி இந்தியாவுக்கு பாதுகாப்பாக வந்ததற்காக ப்ளையிங் ஆஃபீஸர் தாரா ஃபிரோஸ் சினாய்க்கு விசிஷ்ட் சேவா பதக்கத்தை வழங்கினார்.
சினாய் பின்னர் இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர் தனது மனைவி மார்கரெட்டுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்