கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த குமரி ஸ்டீபன் பதவி வகித்து வருகிறார். அவர் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தி.மு.க-வினர். ஆனால், பேரூராட்சி தலைவருக்கும் தி.மு.க கவுன்சிலர்களுக்கும் மோதல் இருந்துவருகிறது. இந்த நிலையில் தான் நேற்று முந்தினம் கன்னியாகுமரியில் நடந்த, `மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் பேரூராட்சி தலைவரும், 10-வது வார்டு தி.மு.க கவுன்சிலரும் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்த பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் கவுன்சிலர் இக்பால் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விபரம் தெரிந்தவர்கள் கூறுகையில், “சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடைகள் ஏலம் விடுவது சம்பந்தமக மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் எப்போதும் பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. சபரிமலை சீசன் சமயத்தில் வெளிமாநில வியாபாரிகளுக்கு கடைகளை எடுத்துக்கொடுத்து கமிஷன் பார்ப்பவர்கள் பலர் உள்ளனர். இந்த நிலையில் கடை சம்பந்தமான பிரச்னையில் பேரூரட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் நடந்துவருகிறது.
இதனால் தி.மு.க-வின் 12 கவுன்சிலர்கள் தலைவருக்கு எதிராக உள்ளனர். அவர்களின் பிரச்னை இப்போது அரசு விழாவில் மோதலாக வெடித்துள்ளது. பஞ்சாயத்து தலைவரும், கவுன்சிலரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடுதிரும்பியதுடன், இருவரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்” என்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று திரும்பிய கவுன்சிலர் இக்பாலிடம் இதுபற்றி பேசினோம், “எனது வார்டுக்கு உட்பட்ட கன்னியாகுமரி ரயில்வே பகுதியில் சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அந்த பகுதி சாலை பிரச்னை சம்பந்தமாக ஊர் மக்கள் கவுன்சிலரான என்னை அழைத்து புகார் சொன்னார்கள். மேலும் அடிப்படை வசதிகளை செய்துதராமல் இருந்தால் போராட்டம் நடத்தப்போவதாக சொன்னார்கள். பேரூராட்சி தலைவரை அழைக்காமல் கவுன்சிலரை அழைத்து ஊர்மக்கள் பேசியது அவருக்கு பிடிக்கவில்லை. அதுபோல கன்னியாகுமரி காந்திமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விதியை மீறி சீசன் கடை போடுவதற்கு பணம் வாங்கிகொண்டு அனுமதி கொடுத்திருக்கிறார் தலைவர். காவல் நிலையம் எதிரில் நான் ஒரு கடை எடுத்து நடத்துகிறேன். அதற்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் வடகை செலுத்துகிறேன். ஆனால், போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள நான்கு கடைகளும் கடந்த 25 ஆண்டுகளாக பஞ்சாயத்துக்கு வாடகையே செலுத்துவது இல்லை. அந்தகடைகாரர்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் வழக்கும் போட்டுவைத்திருக்கிறார்.
இதையெல்லாம் நாங்கள் தொடர்ந்து தட்டிகேட்டுவருகிறோம். மக்களுடன் முதல்வர் குறைதீர்ப்பு கூட்டத்தில் இந்த பிரச்னைகள் பற்றி கட்சி நிர்வாகி ஒருவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்குவந்த குமரி ஸ்டீபன் என்னை அசிங்கமாக திட்டியபடி எனது கன்னத்தில் அடித்ததுடன், ஆணுறுப்பில் ஓங்கி மிதித்தார். நான் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். அதற்குள் அங்கிருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். நான் ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சைபெற்று, காவல்நிலையதில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் பற்றி கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபனிடம் பேசினோம், “அது ஒன்றுமே இல்லை, சும்மா தேவையில்லாமல், வேண்டும் என்றே இதை பெரிசுபடுத்துகிறார்கள். கட்சிக்குள்தானே… போலீஸ் புகார் ஆட்டோமெட்டிக்கா வாபஸ் ஆகிவிடும்” என்றார் சமாளிப்புடன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com